Thursday, November 19, 2015

மழை அளவு படிப்படியாக குறைந்தது சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது..daily thanthi

மழை அளவு படிப்படியாக குறைந்தது சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது


மாற்றம் செய்த நாள்:
வியாழன் , நவம்பர் 19,2015, 3:45 AM IST
பதிவு செய்த நாள்:
வியாழன் , நவம்பர் 19,2015, 1:27 AM IST
சென்னை,

வடகிழக்கு பருவ மழை படிப்படியாக குறைந்ததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றன. மின்சாரம் வினியோகம் மற்றும் போக்குவரத்து சேவை சீரடைந்து செயல்பட தொடங்கியது.

மக்கள் தவிப்பு

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு ஒரே நாளில் சென்னை புறநகரில் 33 செ.மீட்டர் மழை கொட்டியதால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

ஆங்காங்கே மழை நீர் வெள்ளம் போல் சாலைகளில் ஓடியது. இதனால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பல வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன. ரெயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியதால் பல எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

பலத்த மழையால் சென்னையின் குடிநீர் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் நீர்மட்டம் எதிர்பார்த்ததை விட அதிகளவு உயர்ந்தது.

மீட்பு பணியில் முப்படைகள்

புறநகரில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி ஏற்கனவே தண்ணீர் தேங்கி நின்ற நிலையில் ஏரிகள், குளங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பெருக்கெடுத்த வெள்ளம் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது. சில குடியிருப்புகளில் தரை தளம் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. அந்த வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன. கீழ் தளத்தில் வசித்தவர்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தனர். கார்கள், இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி காணப்பட்டன.

மழை வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இறங்கினர். தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க ராணுவம், கடற்படை, விமானப்படையை சேர்ந்த வீரர்களும், கடலோர பாதுகாப்பு படை வீரர்களும் மழை, வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

ஹெலிகாப்டரில் மீட்பு

சில இடங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் வங்க கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆந்திரா நோக்கி சென்றதால் தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறைந்தது. நேற்று சூரிய வெளிச்சம் லேசாக எட்டிப்பார்த்தது. இதனால் மேலும் பாதிப்பு பயத்தில் இருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர்.

இயல்பு வாழ்க்கை திரும்புகிறது

பம்மல் அனகாபுத்தூர் உள்பட பெரும்பாலான பகுதிகளில் தேங்கி இருந்த மழை நீர் தானாக வடிய தொடங்கியது. வெளியேறாமல் இருந்த மழைநீரை அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வெளியேற்றி வருகின்றனர்.

துண்டிக்கப்பட்ட பகுதிகளில் சீரான மின்சார வினியோகம் அளிக்கப்பட்டது. நிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்து மீண்டும் இயங்க தொடங்கியது. மின்சார ரெயில் சேவை பாதிப்பின்றி இயங்கின. பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். முகாம்களில் தங்கி இருந்த 90 சதவீத மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.

வேளச்சேரியில் தொடரும் சோகம்

எனினும் சென்னை புறநகர் பகுதிகளான வேளச்சேரி, மடிப்பாக்கம், ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளை இன்னும் மழைவெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இங்கு மழைநீர் வடியாததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் இரவில் கடும் குளிரில் தூங்காமல் வெட்ட வெளியில் தங்கி உள்ளனர்.

கழுத்து அளவுக்கு தண்ணீர் தேங்கி இருப்பதாலும், பாம்பு மற்றும் விஷ பூச்சிகளின் பயத்தாலும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஹெலிகாப்டர் மூலம் வினியோகிக்கப்பட்டன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024