By ப. இசக்கி
First Published : 09 November 2015 01:06 AM IST
இன்றைய நவீன யுகத்தில் "பிளாஸ்டிக்' இல்லாமல் ஒரு நாள் பொழுதைக் கூட நகர்த்த முடியாது போலிருக்கிறது. காலையில் படுக்கையிலிருந்து எழுந்தது முதல் மீண்டும் இரவு படுக்கைக்கு செல்லும் வரையில் மனிதர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, ஏராளம்.
"பிளாஸ்டிக் இயற்கைக்கு கேடு விளைவிப்பவை. சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவை. மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களை உண்டாக்கும். எளிதில் அழியாது. எனவே, பயன்படுத்தாதீர்' என என்னதான் கோஷம் போட்டாலும், பிளாஸ்டிக் அரக்கன் அழிந்தபாடில்லை. குறைந்திருக்கிறதா என்றால் கண்ணுக்குத் தெரிந்த வரையில் அப்படியும் தென்படவில்லை.
ஒருபுறம் குறைத்தால், மறுபுறம் புதிய அவதாரத்தில் வந்து நிற்கிறது. தேநீர் கடைகளில் பிளாஸ்டிக் "கப்'க்குப் பதிலாக காகித "கப்' தென்பட்டது. இப்போது, அந்தக் குறையை ஈடு செய்வதுபோல, உணவகங்களில் கொதிக்கும் சாம்பாரையும், குருமாவையும் பிளாஸ்டிக் பையில் கட்டிக் கொடுக்கிறார்கள். கைதாங்க முடியாத சூட்டுடன் காபியையும், டீயையும் கூட பிளாஸ்டிக் பைகளில் கட்டிக் கொண்டு செல்கிறார்கள்.
சாலையோர தேநீர் கடைகளில் ஓர் ஓரத்தில் வடை, பஜ்ஜி, போண்டா சுட்டு விற்பவர்கள், சட்டியில் கொதிக்கும் எண்ணெய்யின் அளவு குறைந்துவிட்டால், இடது கையால் புதிய எண்ணெய்ப் பொட்டலத்தை எடுத்து அதன் ஒரு முனையைக் கொதிக்கும் எண்ணெய்யில் முக்குகிறார்கள்.
அந்த சூட்டில் எண்ணெய் பொட்டலத்தின் முனை கருகி சட்டியில் எண்ணெய் கொட்டுகிறது. இவர்களுக்கு யாரைப் பற்றியும் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.
உணவகங்களில் வாழை இலைகளுக்குப் பதில் வெள்ளை நிற பிளாஸ்டிதான் தட்டுக்குமேலே இலையாக இருக்கிறது. அதிலும், பச்சை நிறத்தில், வாழை இலையைப் போன்றே மடக்கி எடுத்துச் செல்லும் வகையில். என்ன ஒரு சாதுரியம்?
சரி, பொட்டலமாக வாங்கிக் கொண்டுபோய் இருப்பிடத்தில் வைத்து சாப்பிடலாம் என்றால் சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், அவியல் அனைத்தும் பிளாஸ்டிக் பையில்தான்.
முன்பெல்லாம், மளிகை கடைக்குச் செல்வோர் துணிப் பையைக் கொண்டு செல்வர். இப்போது அதை எல்லாம் எடுத்துச் சென்றால் கேவலம் என்ற நினைப்பு. பிளாஸ்டிக் பைகளில் வாங்கி வருகிறோம். கூடவே தீராத வியாதிகளையும் என்பதை மறந்து போகிறோம்.
பிளாஸ்டிக் பையில் சூடான காபி, டீ போன்ற திரவத்தைப் பொட்டலமிடும்போதோ அல்லது கொதிக்கும் எண்ணெய்யில் பிளாஸ்டிக் மேல் உறைகளை முக்கும்போதோ, சூடான உணவுப் பொருள்களை அதில் வைக்கும்போதோ அதிலிருந்து "பிஸ்பினால்-ஏ' (BisphenolA) என்ற வேதிப்பொருள் இயல்பான அளவைவிட சுமார் 55 மடங்கு அதிகமாக வெளியேற்றப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அந்த வேதிப்பொருள் கலந்த உணவுப் பொருள்களை மனிதர்கள் உட்கொள்ளும்போது அவை ரத்த ஓட்டத்தில் கலந்து உடலில் உள்ள நாளமில்லாத சுரப்பிகளின் செயல்பாட்டை மாற்றி அமைக்கின்றன.
அதனால், மூளை கட்டமைப்பில் சேதம், பதற்றம், படிக்கும் குழந்தைகளுக்குப் படிப்பில் கவனம் செலுத்த முடியாமை, நோய் எதிர்ப்புத் தன்மை குறைதல், பெண் குழந்தைகள் முன்னமே பூப்பெய்தல், இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பு, மலட்டுத்தன்மை, முறையற்ற பாலின நடவடிக்கை, விந்து திரவ சுரப்பு குறைதல் என எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மனித வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது இந்த பிளாஸ்டிக். கடந்த 1862-இல் லண்டன் மாநகரில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் முதல் முறையாக மனிதனால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக்கை காட்சிக்கு வைத்தார் அலெக்ஸாண்டர் பார்க்ஸ் என்பவர்.
அன்றுமுதல், குழந்தைகளின் விளையாட்டுப் பொம்மைகள் தொடங்கி பெரிய கார் பாகங்கள் வரையில் இன்று பிளாஸ்டிக் இல்லாத பொருள்களே இல்லை என்றாகி விட்டது.
விலை குறைவு, எடை குறைவு, உலோகத்துக்கு இணையான வலிமை போன்ற காரணங்களால் ஆரம்ப காலங்களில் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது இந்த பிளாஸ்டிக். இன்று புலி வாலைப் பிடித்த கதையாக மாறிவிட்டது.
சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வரும் இந்த பிளாஸ்டிக் அழிய சுமார் 400 முதல் 1,000 ஆண்டுகள் வரை ஆகுமாம்.
ஆதலால்தான் எதிர்கால சந்ததிக்கு பாதுகாப்பான, பழுதற்ற உலகை விட்டுச் செல்வோம் என்ற எண்ணத்துடன் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்போம் என அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வீதி, வீதியாக கோஷத்துடன் வலம் வருகின்றன. என்ன பயன்? பாத்திரத்தையும், பையையும் கையில் எடுக்கத் தயக்கம்காட்டும் வரையில் பிளாஸ்டிக்குக்கு மரணமில்லை.
No comments:
Post a Comment