புற்றுநோயிலிந்து மீண்டு வந்த போராளியின் உண்மைக் கதை)
எனக்கு மார்பகப் புற்றுநோய் என்று உறுதி செய்த பிறகும் டாக்டர் சுப்பையாவின் வார்த்தைகள், வாழ்க்கை மீதான நம்பிக்கையைக் கூட்டின. நானும் என் கணவரும் மகிழ்ச்சியோடு மருத்துவமனையைவிட்டு வெளியே வந்தோம். என் மனதைப் பிரதிபலிப்பது போலவே வானம் நிர்மலமாக இருந்தது. வீடு திரும்பும் வழியெல்லாம் என் உறவுகளுக்கு இதை எப்படிச் சொல்வது என்று யோசித்துக்கொண்டே வந்தேன்.
மறைத்துவைப்பதால் எதுவும் ஆகப்போவதில்லை. தவிர, பகிர்ந்துகொள்ளும்போதுதான் வேதனையும் பாதியாகும். வீட்டுக்கு வந்ததும் என் மாமனாருக்கு போன் செய்தேன். கோவில்பட்டி பக்கத்தில் இருக்கும் கடம்பூர் கிராமத்தில் இருக்கிறார் அவர். அன்பும் இனிமையும் ஒருங்கே அமைந்தவர் அவர். அதிர்ந்துகூட பேசத் தெரியாது அவருக்கு. அன்பு ஒன்றே ஆக்கும் சக்தி என்பதற்கு நல்ல உதாரணம் என் மாமனார்தான். என்னை அவர் இன்னொரு மகளாகத்தான் பார்த்தார். நான் கேட்காமலேயே நிறைய செய்வார்.
புத்தாடைகள் வாங்கிவந்து ஆச்சரியம் தருவார். ஊரிலிருந்து வரும்போதெல்லாம் எனக்குப் பிடித்தத் திண்பண்டங்கள் வாங்கிவருவார். அவரைப் போல எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பது சாத்தியமா என்று பலமுறை யோசித்திருக்கிறேன். அப்படியொரு இளகிய மனம் கொண்டவரிடம் எப்படி இதைச் சொல்வேன் என்று நினைத்துக்கொண்டேதான் போன் செய்தேன். விஷயத்தைச் சொன்னதும் அந்தப் பக்கம் எந்தச் சத்தமும் இல்லை. அந்தச் சில நிமிட மௌனம் அவரது பயத்தையும் பதற்றத்தையும் சொன்னது. ‘என்னம்மா இப்படி ஆயிடுச்சே’ என்றார். ‘நீங்க இப்படி பேசக் கூடாது மாமா.
நீங்க மனசு உடையக் கூடாது. நீங்கதான் உறுதியா இருந்து எங்களுக்கு நம்பிக்கை தரணும்’னு சொல்லி அவரைச் சமாதானப்படுத்தினேன். கிட்டத்தட்ட அவரிடம் நானும் என் கணவரும் ஒரு மணி நேரம் பேசினோம். கடைசியாக என் மாமனார், ‘அவதான் அப்படிப் போய் சேர்ந்துட்டான்னு பார்த்தா அந்த வியாதி உனக்கும் வந்துடுச்சே’ என்று சொன்னார். அந்த வார்த்தைகள்தான் என்னைக் கொஞ்சம் அசைத்துவிட்டன.
காரணம் என் மாமியாரும் இளம் வயதிலேயேமார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். நான் என் மாமியாரின் புகைப்படத்தை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆனால் அவரைப் பற்றி என் மாமனாரும் கணவரும் எவ்வளவோ பேசியிருக்கிறார்கள். அவர்களின் பேச்சில் இழையோடு அன்பைப் பார்க்கும்போதே, அத்தனை அற்புதமான மாமியாருடன் இருக்கக் கொடுத்துவைக்கவில்லையே என்று தோன்றும்.
உலகின் அன்பு மொத்தத்துக்கும் உருவம் கொடுத்தால் அதுதான் என் மாமியார். எப்போதும் சிரித்த முகத்துடன் வேலை செய்தபடியே இருப்பார். நன்றாக ஓடியாடிக் கொண்டிருந்தவர், கொஞ்சம் கொஞ்சமாக உடல் மெலிந்தார். என்னென்னவோ வைத்தியம் செய்து பார்த்தும் என்ன வியாதி என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. நாளுக்கு நாள் அவர் உருக்குலைந்துகொண்டே போனார்.
ஒரு நாள் என் மாமனார் வீட்டுக்குத் தெரிந்தவர் ஒருவர்தான் அது மார்பகப் புற்றுநோயாக இருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். அந்த நாளில் புற்றுநோய் குறித்துப் போதுமான விழிப்புணர்வு இல்லை. அதற்கான சிறப்பு மருத்துவ வசதிகளும் குறைவு. இருந்தாலும் என் மாமனார் மனம் தளராமல் தன் மனைவியை கேரளாவுக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்திருக்கிறார். அப்போதும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. உடலும் மனமும் வேதனைப்பட்டு என் மாமியார் இறந்தபோது அவருக்கு 36 வயது!
மரணிக்க வேண்டிய வயதா அது? அப்போது என் கணவரும் நாத்தனாரும் பள்ளிக் குழந்தைகள். திடகாத்திரமாக இருந்த தன் அம்மா, தன் கண் எதிரிலேயே உருக்குலைந்து மடிந்துபோனதை என் கணவரால் ஜீரனிக்கவே முடியவில்லை. அந்த நாட்களின் வேதனையைப் பலமுறை என்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். தாயில்லாமல் வளரும் பிள்ளைகளின் மனவேதனை எப்படியிருக்கும் என்பதற்கு என் கணவரும் நாத்தனாருமே சாட்சி.
மருத்துவ வசதியும் விழிப்புணர்வும் இருந்திருந்தால் தங்கள் அம்மாவைக் காப்பாற்றியிருக்க முடியுமே என்ற கவலை இப்போதும் என் கணவருக்கு உண்டு. தன் தாயின் இழப்பு தந்த பயமோ என்னவோ, எனக்கு மார்பகப் புற்றுநோய் என்று தெரிந்த நொடியில் இருந்து என்னை அதிலிருந்து காப்பாற்றிவிட வேண்டும் என்ற துடிப்பு அவருக்கு. மறந்தும்கூட என்னிடம் அவநம்பிக்கையாகப் பேசியதில்லை.
தன் மனைவியைத் தன்னிடமிருந்து பறித்துக்கொண்ட புற்றுநோய் தன் மருமகளுக்கும் வந்துவிட்டதே என்று மறுகும் மாமனாரை என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியாமல் தவித்தேன். உடனே சுதாரித்துக் கொண்டேன். நான் உடைந்து போனால் வயதான அவரும் நிச்சயம் நம்பிக்கை இழந்துவிடுவார். ‘என்னம்மா இப்படி ஆகிடுச்சே’ என்று பரிதவித்தவரை நானும் என் கணவரும் சமாதானப்படுத்தினோம்.
‘நீங்களே இப்படி உடைஞ்சு போனா எப்படி மாமா? நீங்கதான் எனக்கு ஆறுதல் சொல்லணும். நீங்க தைரியமா இருந்ததான் நானும் எல்லாத்தையும் கடந்துவர முடியும்’னு சொன்னேன். அன்னைக்குக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவர்கிட்டே பேசினோம். அதுக்குப் பிறகுதான் அவர் ஓரளவுக்கு சமாதானமானார்.
என் மேல் அக்கறை கொண்ட இன்னொரு புகுந்தவீட்டுச் சொந்தம் என் கணவரின் தங்கை நித்யா. அவள் திருமணமாகி திருவாரூரில் இருக்கிறாள். வளர்ந்த குழந்தை அவள், மெல்லிய மனது கொண்டவள். தன் அண்ணன் மேல் வைத்திருக்கும் பாசத்தில் ஒரு சதவீதமும் குறையாமல் என் மீதும் பாசம் கொண்டவள். அவளிடம் சொன்னால் தாங்கிக் கொள்வாளா என்ற தயக்கத்துடன்தான் போன் செய்தேன்.
ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட மிக பக்குவத்துடன் நடந்துகொண்டாள் அவள். ஒரு வேளை அவள் அழுதால் நானும் உடைந்துவிடுவேன் என்று நினைத்தாளோ என்னவோ. ‘எதுவும் ஆகாது, கவலைப்படாதீங்க. எல்லாம் சரியாகிடும்’னு பெரிய மனுஷி மாதிரி சொன்னா. அந்த அணுகுமுறை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நாம சோர்ந்துபோய் இருக்கும்போது இப்படி யாராவது ஆறுதல் சொன்னா இதமாத்தானே இருக்கும்? அப்படியொரு இதத்தை அவளுடைய பேச்சு தந்தது.
எனக்குப் புற்றுநோய் வந்த விஷயத்தை நான் என் அப்பாவிடம் சொல்லவில்லை. அம்மாதான் விஷயத்தை அவரிடம் சொன்னார். அப்பா எப்பவுமே கண்டிப்பான ஆளு. எல்லாமே ஒரு ஒழுங்குமுறையில இருக்கணும்னு நினைப்பார். அப்படித்தான் எங்களையும் வளர்த்தார். எந்தப் பிரச்சினையா இருந்தாலும் அதைத் தள்ளி நின்னு அலசுவார். உணர்ச்சிவசப்படறதால எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாதுன்னு அவருக்குத் தெரியும்.
எதையுமே தர்க்கப்பூர்வமாதான் அணுகுவார். ரொம்ப உறுதியானவர். அம்மா மூலமா விஷயம் கேள்விப்பட்டு என்கிட்டே அப்பா பேசினார். பேச்சுல ஒரு சின்ன பிசிறுகூட இல்லை. ரொம்ப தெளிவா, நம்பிக்கையா பேசினார்.
என்னைச் சுற்றியிருக்கும் சொந்தங்களின் அன்பிலும் நம்பிக்கையிலுமே எனக்குப் பாதி வியாதி குணமானது போல இருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் எனக்கு ஆபரேஷன். சுற்றுலாவுக்குத் திட்டமிடுவது போல மொத்தக் குடும்பமும் என் ஆபரேஷனுக்கு திட்டமிட்டது.
No comments:
Post a Comment