Friday, November 6, 2015

இது இப்படித்தான்!

Dinamani

By ஆசிரியர்

First Published : 05 November 2015 01:40 AM IST


வோக்ஸ்வேகன் கார் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ள மூன்று விதமான டீசல் கார்களின் புகை மாசு குறித்து சோதித்ததில், "குறிப்பிடத்தக்க விதிமீறல்' இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்திய அரசு இந்தக் கார் நிறுவனத்துக்கு காரணக்கேட்பு கடிதம் அனுப்பியுள்ளது.
இந்திய வாகனங்கள் ஆய்வுக் கழகம் நடத்திய சோதனையில், வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஜெட்டா, ஆடி ஏ4, வென்ட்டோ ஆகிய மூன்று வகை கார்களிலும் புகை மாசு தொடர்பாக இந்த நிறுவனம் உறுதி கூறிய அளவைவிடக் கூடுதலாக நச்சுப்புகை வெளிப்படுவது தெரியவந்துள்ளது.
இந்தச் சோதனை திடீரென நடத்தப்படவில்லை. அமெரிக்கா அரசு இந்த கார் நிறுவனத்தின் மோசடியைக் கண்டுபிடித்து, ஒவ்வொரு காருக்கும் 37,500 அமெரிக்க டாலர் அபராதம் விதித்தது. அதன்படி, அமெரிக்காவில் இந்த நிறுவனம் விற்பனை செய்துள்ள 4.82 லட்சம் கார்களுக்கு மொத்தம் 1,800 கோடி அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 40% வீழ்ச்சியடைந்து, வணிகமும் படுத்துவிட்ட நிலையில், இனி இவர்கள் மீண்டெழுவார்கள் என்பதே சந்தேகம்தான்.
இந்த கார் நிறுவனம் தனது கார்களில் ஒரு மென்பொருளைப் பொருத்தியுள்ளது. இந்த மென்பொருள் கார்கள் நின்ற நிலையில் இயங்கும்போது வெளிப்படும் புகையின் நச்சுப் பொருளை (கார்பன் மோனாக்ûஸடு, நைட்ரஜன் ஆக்ûஸடு, ஹைட்ரோ கார்பன் அளவை) கட்டுப்படுத்தும். ஆனால், வாகனம் சாலையில் ஓடும்போது இந்த மென்பொருள் இயங்காது. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் புகையில் நச்சுப் பொருள் வெளியேறும்.
இந்நிறுவனம் நுகர்வோரிடம் உறுதி கூறும் அளவைக் காட்டிலும் 10% முதல் 40% அதிகமாக நச்சுப்புகை இருப்பதை அமெரிக்க வாகன ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். இதையடுத்து, அமெரிக்காவில் வோக்ஸ்வேகன் கார் விற்பனை நிறுத்தப்பட்டது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி நாடுகள் இந்த நச்சுப்புகை குறித்து ஆய்வைத் தொடங்கியுள்ளன. சீனாவில் இந்நிறுவனம் டீசல் கார்கள் விற்பதற்கு 2003 முதலாகவே தடை உள்ளது. பெட்ரோல் கார்கள் மட்டுமே அங்கே விற்பனை செய்கிறார்கள். இந்நிலையில், இந்தப் பிரச்னை எழுந்தவுடன் இந்தியாவும் இந்தக் கார்களில் சோதனை நடத்த உத்தரவிட்டு, தற்போது முடிவுகள் இந்நிறுவனத்தின் விதிமீறல்களை வெளிப்படுத்தியுள்ளன.
அமெரிக்கா, ஐரோப்பாவில் இத்தகைய நச்சுப்புகைக்கு மிகப்பெரும் முக்கியத்துவம் தரப்படுகிறது என்றால், இந்தியாவில் அவ்வாறான முக்கியத்துவம் இல்லை. இந்தியாவில் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஆடி ஏ4, வென்ட்டோ, ஜெட்டா டீசல் கார்கள் வைத்திருப்போர் எண்ணிக்கை மிகக் குறைவு. மேலும், இந்த நிறுவனம் தங்கள் விற்பனையின்போது நுகர்வோருக்கு கூறும் அளவை விட நச்சுப்புகை அதிகம் என்பது அமெரிக்க ஆய்வின் முடிவு. ஆனால், அமெரிக்க நச்சுப்புகை அளவுகோல் மிகவும் குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதைவிட இரு மடங்கு அதிகம்.
தில்லி உள்ளிட்ட பல பெருநகர்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 2.5 கிராம் கார்பன் மோனாக்ûஸடு நச்சுப்புகை அனுமதிக்கப்பட்ட அளவு. மற்ற நகர்களில் இன்னும் அதிகம். இந்த அளவும்கூட ஏட்டில்தான் உள்ளது, நடைமுறையில் இல்லை. இங்கு இதைக் கண்டறியும் நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் இல்லை. ஒரு டீசல் கார் உற்பத்தியாளர் கூறிக்கொள்ளும் அளவைக் காட்டிலும் நச்சுப்புகை அதிகம் வெளிப்படும் என்றால், அந்தக் கார் தயாரித்த நிறுவனத்துக்கு என்ன அபராதம் என்பது குறித்து எந்தவிதமான தெளிவும் இந்திய அரசிடம் இதுவரை இல்லை.
ஜெனரல் மோட்டார்ஸ் 1.14 லட்சம் டவேரா கார்களை இந்தியாவில் விற்பனை செய்தது. இந்த டீசல் கார்கள் தரமற்றவை என்பது தனியார் அமைப்புகள் மூலம் வெளிப்பட்ட நேரத்தில், அனைத்து கார்களையும் இந்நிறுவனம் திரும்பப் பெற்றுக்கொண்டது. ஆனால், இதற்காக எந்தவிதமான அபராதமும் சட்டப்படி விதிக்கப்படவில்லை. வளர்ச்சி பெற்ற நாடுகளில் இது நடக்காது. அமெரிக்காவில் ஒரு வாகனத்துக்கு இவ்வளவு என அபராதம் விதிக்கப்படும். இங்கே அதுவே கையூட்டாகப் பெறப்படுமே தவிர, சட்டப்படி வசூலிப்பதற்கான எந்த விதிமுறையும் இதுவரையிலும் இல்லை.
வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டீசல் கார்களே நச்சுப்புகையைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றன என்றால், ஏனைய நிறுவனங்களின் வாகனங்களுடைய நிலைமை அதைவிட மோசமாகத்தான் இருக்கும். ஆனால், சாலையில் அனைத்து கார்களும் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.
மேலும், ஒரு லிட்டர் டீசலில் 0.005% சல்பர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதிமுறைப்படி தில்லி உள்ளிட்ட 13 பெருநகரங்களில் மட்டுமே தரமான டீசல் விநியோகிக்கப்படுகின்றன. இந்தியாவின் மற்ற நகரங்களில் விற்பனையாகும் டீசலில் இதைவிடக் கூடுதல் அளவில் சல்பர் உள்ளது. இதை நம்மால் சீர்மை படுத்தவும் முடியவில்லை. கட்டுப்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை.
நச்சுப்புகை அளவு மட்டுமல்ல, கார் மற்றும் இரு சக்கர தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விற்பனைக்காக நுகர்வோரிடம் சொல்லும் உத்தரவாதங்கள் பலவும் வெறும் ஏட்டில்தான் இருக்கின்றன. இரு சக்கரம், மூன்று சக்கர வாகன விற்பனையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 70 கிலோ மீட்டர் என்று சொல்லி விற்கிறார்கள். ஆனால், அது சாலையில் ஓடும்போது அவர்கள் சொன்னது உண்மையாக இருப்பதில்லை.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் எந்த அளவுக்கு செயல்படுகின்றன என்பது ஊரறிந்த ரகசியம். நுகர்வோர் விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படாதவரை சட்டங்களும் விதிகளும் கையூட்டுப் பெறுவதற்குத்தான் உதவுமே தவிர, மக்களுக்குப் பயனளிக்காது. விழிப்புணர்வை யார் ஏற்படுத்துவது என்பதுதான் கேள்வி.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024