By என். செந்தில்குமார்
First Published : 23 November 2015 12:56 AM IST
வரலாறு என்றாலே கடந்த காலம் தானே? அதை எதற்காக நாம் அறிந்துகொள்ள வேண்டும்? என்ற கேள்வி பொதுவாகப் பலருக்கும் இருக்கிறது. வரலாறு என்பது கடந்த காலம் அல்ல. அது, நிகழ்காலத்தை நிர்ணயிக்கும் விசை. எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகின்ற மறைமுக சக்தி.
மன்னன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்? அவனது செயல்பாடுகள் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கி.மு. 262-இல் நிறுவப்பட்ட அசோகரது கல்வெட்டுகளில் ஒன்றைப் பாருங்கள். அதன் முக்கியத்துவம் இன்றும்கூட எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது.
"மாமன்னராகிய நான் எந்த நேரத்திலும் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், தேரில் பயணம் செய்து கொண்டிருந்தாலும், வேறு எந்த இடத்தில் எப்படி இருந்தாலும், அரசு அலுவலர்கள் மூலம் மக்களின் பிரச்னைகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் எனக்கு அனுப்பப்பட வேண்டும். அதன்மூலம் மட்டுமே மக்களின் பிரச்னைகளை உடனடியாக என்னால் கவனிக்க முடியும்.
கொடை மற்றும் நலத்திட்டப் பொது அறிவிப்புகள் தொடர்பாக நான் வாய் வார்த்தைகளாகப் பிறப்பித்திருக்கும் ஆணைகள் அல்லது அமைச்சர்களுக்கு வந்து சேரும் அவசர உத்தரவுகள் தொடர்பாக யாருக்காவது ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அது தொடர்பான தகவல்கள் உடனடியாக மன்னராகிய என்னிடம் வந்து சேர வேண்டும்.
இதை என்னுடைய கடமையாக நினைக்கிறேன். அதைச் சிறப்பாகச் செய்ய நான் கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆகவே, வேலைகளைத் தாமதமின்றி உடனே முடிக்க வேண்டும். மக்களின் நலத்தை முன்னெடுப்பதைவிட முக்கியமான வேலை ஏதும் இல்லை. இந்தத் தர்ம ஆணை வெகு காலத்துக்கு இருப்பதற்காகவும், வருங்கால சந்ததியினரும் இதன்படி நடந்து உலகின் நலத்தைப் பேணுவதற்காகவும் கல்வெட்டில் எழுதப்படுகிறது' - இவ்வாறு அந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டு உணர்த்தும் உண்மையை ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் எப்போதும் நினைவில் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு, இப்போது இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களின் மன ஆறுதலுக்குக்கூட மத்திய அரசு வாய்த் திறக்காமல் மெளனம் சாதிப்பது.
அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தமிழகத்தில், குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் நேரிட்டுள்ள சேதங்களை முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசிடம் விளக்கிக் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதிலும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் இப்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், 23-ஆம் தேதிக்குள் (திங்கள்கிழமை) தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், மத்திய அரசின் பிற நிதியுதவிகளைக் கோரியும் விரிவான மனு, மத்திய அரசிடம் அளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அப்போது தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் பேசியபோது, மத்தியக் குழு தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்தார் என்பது தமிழக அரசு சார்பில் வெளியாகியுள்ள செய்தி.
இதேபோல், அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் மழை நிவாரணப் பணிகளுக்காகவும், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காகவும் மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் என்று அம் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மழை பாதித்துள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகளுக்கு உதவ வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் ஆகியோருக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நடைமுறைகள் இந்தக் காலத்தில் தேவைதானா? அமெரிக்காவிலும், பிரான்ஸிலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நேரிட்டால், ஏன் பாகிஸ்தானில் ஏற்பட்டால்கூட அடுத்த சில மணி நேரங்களுக்குள் வருத்தம் தெரிவிக்கும் இந்திய பிரதமருக்கு தமிழகத்திலும், ஆந்திரத்திலும் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களை அந்தந்த மாநில அரசுகள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.
நாட்டில் இயற்கைப் பேரிடர்கள், சீற்றங்கள் ஏற்படும்போது மத்தியில் ஆளும் அரசு தாமாகவே முன்வந்து பாதிப்புக்குள்ளான மாநிலங்களுக்குத் தேவையான நிதியை ஒதுக்கி நிவாரணப் பணிகளைத் தொடங்கியிருக்க வேண்டும்.
மாநிலத்திலிருந்து கிடைக்கும் உற்பத்தி வரி, விற்பனை வரி, வருமான வரி என அத்தனை வரிகளையும் உயரதிகாரத்துடன் பெற்றுக் கொள்வதை தார்மீகக் கடமையாகக் கொண்டுள்ள மத்திய அரசுக்கு, பாதிக்கப்படும் மாநில மக்களுக்குத் தானே முன்வந்து உதவ வேண்டியதும் தமது தார்மீகக் கடமை என்பது தெரியாதா?
பிரதமர் மோடி பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது, நாட்டுக்காக உழைத்தவர்களையும், அவர்களது தியாகங்களையும் நாம் நினைவுக்கூர வேண்டும். வரலாற்று நிகழ்வுகளை நாம் எப்போதும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பார்.
அவர், தற்போது மாமன்னர் அசோக சக்ரவர்த்தியின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்திருப்பாராயின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்கூட சொல்லாத நிலையை அவர் கடைப்பிடித்திருக்கமாட்டார். நேரடியாக பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு வருகைத் தந்து நிவாரணப் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டிருப்பார்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்கிறது சிலப்பதிகாரம்.
No comments:
Post a Comment