Saturday, November 21, 2015

மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளக்குழு பரிந்துரை

logo


47 லட்சம் ஊழியர்களுக்கும், 52 லட்சம் பென்ஷன் தாரர் களுக்கும் 7–வது சம்பளக்குழு ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மத்திய அரசாங்கம், தனது ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் உள்ள சம்பளவிகிதம், மற்றும் அலவன்சுகளை சீரமைக்கவும், அதுபோல பென்ஷன் தொகையை மாற்றி அமைக்கவும், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளக்குழு அமைப்பது வழக்கம். முதலாவது சம்பளக்குழு 1946–ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த சம்பளக்குழு மத்திய அரசாங்க ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம்
ரூ.35 ஆக நிர்ணயித்தது. தொடர்ந்து 1959–ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 2–வது சம்பளக்குழு ரூ.80 ஆகவும், 1973–ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 3–வது சம்பளக்குழு
ரூ.185 ஆகவும், 1986–ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 4–வது சம்பளக்குழு ரூ.750 ஆகவும், 1996–ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 5–வது சம்பளக்குழு ரூ.2,550 ஆகவும், 2006–ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 6–வது சம்பளக்குழு ரூ.6,650 ஆகவும் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை நிர்ணயித்தது.

பொதுவாக சம்பளக்குழுக்கள் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து அறிக்கை தாக்கல் செய்ய 18 மாதங்களை எடுத்துக்கொள்ளும். ஆனால், இப்போது நீதிபதி மாத்தூர் தலைமையிலான 7–வது சம்பளக்குழு, 2014–ம் ஆண்டு பிப்ரவரிமாதம் நியமிக்கப்பட்டது. மரபுப்படி கடந்த ஆகஸ்டு மாதம் தன் பரிந்துரையை அளித்து இருக்கவேண்டும். ஆனால், கூடுதலாக 3 மாதங்கள் எடுத்துக்கொண்டு நேற்று முன்தினம் பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் மத்திய அரசாங்க ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

அதாவது மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு இந்த சம்பளக்குழு 23.55 சதவீத சம்பளஉயர்வு கிடைக்கும் வகையில் வழிவகை செய்துள்ளது. இதன்மூலம் அரசாங்கத்துக்கு கூடுதலாக ஆண்டுக்கு ஒரு லட்சத்து 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இந்த தொகையில் 73 ஆயிரத்து 650 கோடி ரூபாய் பொது பட்ஜெட்டிலும், 28 ஆயிரத்து 450 கோடி ரூபாய் ரெயில்வே பட்ஜெட்டிலும் ஒதுக்கப்படவேண்டியதிருக்கும். இந்த பரிந்துரையை அப்படியே நடைமுறைப்படுத்தவேண்டும் என்பது கட்டாய மல்ல. இ தை பரிசீலிக்க நடைமுறைப்படுத்தும் செயலகம் அரசின் செலவீனத்துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த செயலகம் ஆராய்ந்து அளிக்கும் கருத்துக்களை அரசாங்கம் பரிசீலித்து சம்பள உயர்வு தொடர்பான இறுதி அறிவிப்பை அநேகமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் தாக்கல் செய்யும் பொது பட்ஜெட்டில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிவிப்புத்தான் அமலுக்கு வரும்.

இந்த பரிந்துரையில் ஒப்பந்த ஊழியர்கள் ஊதியம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. செயல்திறன் அடிப்படையில் சம்பளம் என்ற பரிந்துரை வரவேற்கப்படத்தக்கது. என்றாலும், செயல்திறனை நிர்ணயிக்கும் அளவுகோல் வெளிப்படையாக இருக்க நல்லமுறைகள் உருவாக்கப் படவேண்டும். இந்த பரிந்துரை நடைமுறைப்படுத்தப் படும்போது மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தாலும், அவர்களிடமிருந்து மக்களும் அதிகமாக எதிர்பார்ப்பார்கள். 7–வது சம்பளக்குழு பரிந்துரையை பரிசீலித்து அமலுக்கு வரும்போது, மத்திய அரசாங்க ஊழியர்களுக்கும், பென்ஷன்தாரர்களுக்கும் கிடைக்கும் வருமான உயர்வினால் அவர்களுக்கு வாங்கும் சக்தி அதிகரிக்கும். இதனால் வர்த்தகம், சேவைகள் பெருகும். அவர்களின் சேமிப்பும் நிச்சயமாக உயரும். இந்த வகையில் நிச்சயமாக பொருளாதாரம் மேம்படும். மத்திய அரசாங்க ஊழியர்களும் தங்களுக்கு கிடைக்கும் ஊதிய உயர்வை, மக்களுக்கு இன்னும் அதிகமாக சேவை செய்ய தங்களுக்கு வழங்கப்படும் ஊக்கமாக மனதில்கொண்டு பணியாற்றவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024