Sunday, April 2, 2017

 
பிரதமர் அலுவலக உத்தரவின்பேரில் நாடு முழுவதும் அமலாக்க துறை அதிரடி சோதனை நடத்தியது. சென்னையில் 13 இடங்களில் இந்த சோதனை நடந்தது. 
 
புதுடெல்லி, 

 நாடு முழுவதும் ஷெல் கம்பெனிகள் என்று அழைக்கப்படுகிற 1,155 போலி நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பெயரளவில் மட்டுமே இயங்குகின்றன. குறிப்பாக எந்த தொழிலிலும் அல்லது வர்த்தகத்திலும் ஈடுபடாமல், சட்ட விரோத பண பரிமாற்றம் ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.

இவற்றின்மூலம் 22 ஆயிரம் பேர் பலன் பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த ஷெல் கம்பெனிகள் ரூ.13 ஆயிரத்து 300 கோடி அளவுக்கு சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பிரதமர் அலுவலகம் அதிரடி

கடந்த நவம்பர் 8–ந் தேதி ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து, பிரதமர் நரேந்திர மோடி எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் இந்த ஷெல் கம்பெனிகள் மூலம் 550 பேர் ரூ.3,900 கோடி அளவுக்கு கருப்பு பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

இப்படி சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிற ஷெல் கம்பெனிகளில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்துக்கு பிரதமர் அலுவலகம் அதிரடியாக உத்தரவிட்டது.

100 இடங்கள்

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் உள்ள 16 மாநிலங்களில் குறைந்தது 100 இடங்களில் அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்தின் குழுக்கள் அதிரடி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டன.

பி.எம்.எல்.ஏ. என்னும் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டம் மற்றும் பெமா என்னும் அன்னிய செலாவணி பராமரிப்பு சட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட இந்த சோதனைகள், சென்னை, கொல்கத்தா, டெல்லி, ஆமதாபாத், சண்டிகார், பாட்னா, பெங்களூரு, ராஞ்சி உள்ளிட்ட பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.சென்னையை பொறுத்தமட்டில், 8 ஷெல் கம்பெனிகளுடன் தொடர்புடைய 13 இடங்களில் இந்த சோதனை நடவடிக்கையை அமலாக்கப்பிரிவு இயக்குனரக குழுக்கள் நடத்தி உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசியல் பிரபலங்கள்

சோதனை நடத்தப்பட்ட இடங்களில், சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மராட்டிய மாநில முன்னாள் துணை முதல்–மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சகன் புஜ்பால், ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதியின் தம்பி ஆனந்தகுமார் உள்ளிட்டோருடன் தொடர்புடைய நிறுவனங்களும் அடங்கும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

மும்பையில் 20 போலி இயக்குனர்களுடன் 700 போலி நிறுவனங்களை ஒருவர் நடத்தி வந்து இப்போது சிக்கியுள்ளார். இவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சகன் புஜ்பாலுக்குரிய ரூ.46.7 கோடி சட்டவிரோத பணத்தை, சட்டபூர்வ பணமாக மாற்றித்தந்துள்ளார் என சொல்லப்படுகிறது.

நேற்று நடத்தப்பட்ட சோதனைகளின்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையில் யாரும் கைது செய்யப்படாத போதும், சந்தேகத்துக்கு உரிய நபர்களிடம் அமலாக்கப்பிரிவு இயக்குனரக குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024