Tuesday, April 25, 2017



தமிழகத்தில் இன்று 'பந்த்:' பஸ்கள் ஓடுமா?
தமிழகத்தில், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இன்று நடத்தும், 'பந்த்'திற்கு, வணிகர் சங்கங்கள், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் சூழல் உள்ளது. ஆனால், 'பஸ்கள் வழக்கம் போல இயங்கும்; மக்கள் கவலைப்பட வேண்டாம்' என, அரசு அறிவித்துள்ளது.




வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, தி.மு.க., - காங்., - மார்க்சிஸ்ட் கம்யூ., - இந்திய கம்யூ., - விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள், இன்று, மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றன. இதற்கு ஆதரவு தரும்படி, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கத்தினருக்கு கடிதம் எழுதினார். அதையேற்று, போக்குவரத்து தொழிற்சங்கங்களும், வணிகர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இது குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா விடுத்துள்ள அறிக்கையில், 'பந்த்தில், பேரமைப்பில் உள்ள, 6,000 வணிகர் சங்கங்கள், 62 வணிக அமைப்புகள், 21 லட்சம் வணிகர்கள் பங்கேற்பர்' என, தெரிவித்துள்ளார்; ஓட்டல்களும் இயங்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
'பஸ்களை இயக்கப் போவதில்லை' என, அரசுபோக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஆட்டோக்கள், கால் டாக்சிகள் ஓடாது எனவும், தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால், தமிழகத்தில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க வாய்ப்புள்ளது.
அரசு எச்சரிக்கை அதேநேரத்தில், பந்த் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க, தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அரசு பஸ்கள் எந்த பாதிப்பும் இன்றி வழக்கம் போல இயக்கப்படும் என,அறிவிக்கப்பட்டுள்ளது. 

'பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும்; போராட்டத்தில் பங்கேற்கும் பால் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எச்சரித்துள்ளார். தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 4,850 பெட்ரோல் பங்க்குகளும் வழக்கம் போல இயங்கும் என, கூட்டமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆசிரியர் சங்கங்களும், 'போராட்டத்தில் பங்கேற்பதில்லை' என, அறிவித்துள்ளன.

லீவ், வார விடுப்பு கிடையாது

பஸ் ஊழியர்களுக்கு உத்தரவு'போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்படும்' என, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று அறிவித்தார். அத்துடன், அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கும், அரசு நேற்று அனுப்பிய சுற்றறிக்கை:
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அனைவரும், இன்று கண்டிப்பாக பணிக்கு ஆஜராக வேண்டும். 'பந்த்'தில், தொழிலாளர்கள் ஈடுபடக்கூடாது. தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்பு, வார விடுப்பு மற்றும் பணி ஓய்வு உடனே ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'பந்த்'துக்கு ஆதரவு தெரிவித்துள்ள தொழிற்சங்கத்தினர் கூறுகையில், 'அரசு போக்குவரத்து கழகத்தில், தினக்கூலி, சேமநல பணியாளர்கள், 20 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். அவர்கள் மூலம்பஸ்களை இயக்க, அரசு முயற்சிக்கிறது' என்றனர். 

அரசு ஊழியர்கள் காலவரையற்ற 'ஸ்டிரைக்'

தமிழக அரசு ஊழியர்கள், இன்று முதல் காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்துவதால், அரசு பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, தமிழக அரசு ஊழியர்கள் சங்க பொதுச்செயலர் அன்பரசு கூறியதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்; சத்துணவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட, ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, வலியுறுத்தி வந்தோம். 

அரசு கண்டு கொள்ளாததால், முறைப்படி அரசுக்கு, 'ஸ்டிரைக்' நோட்டீஸ் கொடுத்துள்ளோம். இதன்படி, காலவரையற்ற, 'ஸ்டிரைக்' இன்று துவங்குகிறது. இதில், மாநிலம் முழுவதும், 4.5 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும், வருவாய் துறை, வணிக வரித்துறை உள்ளிட்ட, பல்வேறு துறை சார்ந்த சங்கங்களும் பங்கேற்பதால், அரசு அலுவலகங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆசிரியர் சங்கங்கள் இதில் பங்கேற்பதில்லை என, முடிவு செய்துள்ளன.

அதிகாலை பணிக்கு வரபோலீசாருக்கு உத்தரவு

இன்று முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், போலீசார், அதிகாலையிலேயே பணிக்கு வர வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க, மாநிலம் முழுவதும், ஒரு லட்சம் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். சென்னையில், 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

- நமது நிருபர் குழு -

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...