Saturday, April 29, 2017

கலப்படம் என்னும் நஞ்சு

By அருணன் கபிலன்  |   Published on : 29th April 2017 01:32 AM  
|  
பல்வேறு பொருள்கள் கூட்டாகக் கலந்து பக்குவப்படுத்திச் சமைக்கப்படுதலே உணவு. எந்தெந்தப் பொருள்கள் என்ன விகிதத்தில் இருக்க வேண்டும் என்பது கலத்தலின் விதிமுறை. கலவை சரியில்லாமல் போனால் உணவு மட்டுமல்ல உணர்வும் கூட கெட்டுப் போகும்.

அளவுக்கு அதிகமானால் அமுது கூட நஞ்சாவது கலத்தலில் உள்ள குறைபாட்டினால்தான். திருமணம் என்பதன் பொருளே கலத்தல்தான். ஆணும் பெண்ணுமாக அன்றி, இரு குடும்பத்தாரும் அவர்தம் உறவினரும் ஒன்றாக இணைந்து கொள்வதே கலத்தல் என்னும் மணம் ஆகும்.

'செம்புலத்து மண்ணில் நீர் கலப்பதைப் போல அன்புடைய நெஞ்சங்கள் ஒன்றோடொன்று கலப்பதுதான் காதல்' என்று பேசுகிறது சங்க இலக்கியம்.
கலத்தலின் நேர் எதிரி கலப்படம். தரமான ஒன்றோடு தரமற்ற மற்றொன்றைக் கலப்பதனால் முழுமையும் நலம் கெட்டு விடுவதே கலப்படத்தின் பெரிய தீமை.

பெருங்குடத்துப் பாலில் சிறு துளி நஞ்சு போலக் கலப்படம் எத்தனை பெரிய சக்தியையும் வலுவிலக்கச் செய்து தீமையாக்கி விடும். பண்டத்தை மட்டுமல்ல, நாட்டையே அழிக்கும் நஞ்சு கலப்படம்.

அரிசியில் கல்லாகவும், பாலில் நீராகவும் காபிப் பொடியில் புளியங்கொட்டையாகவும் மிளகில் பப்பாளி விதையாகவும் மெல்ல மெல்ல வளர்ந்து, இன்றைக்குக் கலப்படம் இரசாயனங்களின் உதவியுடன் செயற்கைத் தன்மையோடு கூடிய நஞ்சாக மாறிச் சமுதாயத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி எனக் கலப்படங்களின் விசுவரூபங்கள் மனிதகுலத்தையே நடுங்க வைத்திருக்கின்றன.
உணவுப் பொருள்கள்தான் என்றில்லை, நோய்க்குத் தீர்வாகும் மருந்துப் பொருள்களிலும் இந்தக் கலப்படங்கள் உள்ளன. பொய்யான பெயர்களில் தொடங்கிப் போலியான வண்ணங்கள் வரைக்கும் மருந்துகளிலேயே அதன் ஆதிக்கம் விரிவடைந்திருக்கிறது.

நோய்தீர மருந்து வாங்கித் தின்ற காலம்போய் கலப்பட மருந்து வாங்கித் தின்றதனால் நோய் அதிகரித்த கதைகள் இப்போது வலம் வந்து கொண்டிருக்கின்றன.

அதைவிடக் கொடிய கலப்படம் மொழிக்கு நேர்ந்திருப்பது. தமிழ்மொழி இயல்பாக அயல்மொழிச் சொற்களைத் தழுவிக் கொண்டு ஒன்றோடொன்று கலந்துகொள்வது தொல்காப்பியர் காலம் தொட்டே அனுமதிக்கப்பட்டு வந்திருக்கிறது. அது பலமொழி வளங்களையும் ஒருமொழிக்குக் கொண்டு சேர்த்து குறிப்பிட்ட மொழிக்கு வளர்ச்சியையும் தரும்.

ஆனால் அங்கும் கலப்படம் உருவானால் என்ன செய்ய முடியும்? இயல்பு நிலையில்லாமல் ஒரு மொழியைச் சிதைத்து மற்றொரு மொழியையும் சிதைத்துக் குளறப்படுகிற மொழியாடல் மொழிக்கலப்படம் என்பதன்றி வேறென்ன?

இன்றைய உலகமயமாக்கலின் நிர்ப்பந்தத்தில் பிறமொழிக் கலப்பில்லாமல் பேசுவது சாத்தியமில்லைதான். ஆனால் அதற்காக வலிந்து முறைபிறழ்ந்து பிறமொழிகளைத் திணித்துக் கொண்டு தாய்மொழிக்கே சேதம் விளைவிப்பது சரியா?

'பண்ணித் தமிழ்' என்றொரு குறியீட்டுச் சொல் இப்போது வழக்கில் இருந்து வருகிறது. 'குக்' பண்ணி, 'ஷேர்' பண்ணி, 'ஹெல்ப்' பண்ணி என்று இருமொழிகளையும் கலப்படமாக்கிப் பேசுவது அழகாகவா இருக்கிறது? இப்படிப் பேசுவதைத்தான் 'பண்ணித் தமிழ்' என்ற குறியீடு அறிவிக்கிறது.
இதுபோல 'பட் ஆனா' என்றொரு சொல்லாடலும் உண்டு. இதைக் கற்றறிந்தவர்களும் கலப்படப்படுத்துகிறார்கள். 'பட்' என்னும் ஆங்கிலச் சொல்லுக்கும் 'ஆனால்' என்னும் தமிழ்ச் சொல்லுக்கும் பொருள் ஒன்றுதான். இதைத் தெரிந்தும் தெரியாமலும் சேர்த்துச் சேர்த்துப் பேசுகிறவர்களை என்னென்பது?

அதைப் போலவே ஒருமொழிக்குரிய உச்சரிப்பைக் கொண்டு தமிழ்மொழியைப் பேசுவதும் நிகழ்கிறது. பிறமொழியாளர்கள் தமிழ்மொழியைக் கற்றுக் கொள்வதைப் போலவே நமது தமிழ்க் குழந்தைகளும் அவ்வாறு பேச முயல்கிறார்கள்.

அவர்கள் தமிழ்ச் சொற்களை ஆங்கில எழுத்துகளில் எழுதிவைத்துக் கொண்டு படிக்கிறார்கள். இதனால் தமிழுக்குரிய மென்மையும் கூர்மையும் சிதைவுபடுகிறது. இது இன்னொரு வகையான கலப்படம். இப்படிப் பல கலப்படங்கள் இன்றைக்குத் தமிழ்மொழிக்குள் தூவப்படுகின்றன.

எந்த மொழிச் சொற்களையும் தமிழ்மொழி எதிர்க்கவேயில்லை. ஆனால், அது இயல்புதவறிக் கட்டாயமாகத் திணிக்கப்படுகிறபோது இரு மொழிகளுக்கும் பிளவு வந்து விடுகிறது. இதுதான் கலப்படத்தால் விளையும் தீமை.
இது நீளுமென்றால் பின்னால் வருகிற இளந்தலைமுறைக்கு இதுவே மொழியின் இலக்கணம் என்பது எழுதப்படாத சட்டமாகி விடாதா? நாம் செல்லும் பாதையைத்தான் நமது பிள்ளைகள் பின்பற்றுவார்கள்.

இவ்வாறான தவறை யாரோ அறியாதவர்கள், பாமரர்கள் செய்தால் பரவாயில்லை. உலகம் முழுவதும் தனது பெருமையாலும் தொன்மையாலும் சிறப்புப் பெற்றிருக்கிற தமிழ்மொழியைத் தன் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களுமா இப்படிச் செய்வது தமிழ் எல்லாவற்றையும் தாங்கும் தன்மை பொருந்திய மொழி. எத்தகைய பிழைகளையும் அறியாமைகளையும் கொச்சைகளையும்கூட மன்னித்து அதற்கும் இலக்கண விளக்கம் தந்து விட்டுத் தன்திறம் குன்றாது அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்.

ஆனால், அதன் பெருமை உணராத பிள்ளைகளாக நாமே இருக்கலாமா? நம் தாயின் உணவிலே நாமே கலப்படம் செய்தல் எப்படிச் சிறப்பாகும்?
இதுதான் இன்றைய நிலை. கலப்படம் உணவுப் பொருள்களில் மட்டும் இல்லை. உணர்வுப் பொருளான உயிர்ப் பொருளான மொழியிலும் கலந்து விட்டது. தமிழக்கு அமுதென்று பேர்.

அமுதை நோக்கிக் கடையப்பட்டதுதான் பாற்கடல். எனினும் முதலில் வெளிப்பட்டது என்னவோ ஆலகால நஞ்சு. நஞ்சை விலக்கினால்தான் அமுதத்தைப் பெற முடியும். ஆதலால் கலப்படம் என்னும் நஞ்சை நீக்கி விட்டு தூயதமிழாகிய அமுதத்தைப் பருகுவோம்.

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...