Monday, April 24, 2017

நீட்' தேர்வு கூடாது... "நீட்' தவிர்க்க முடியாதது!

By DIN  |   Published on : 24th April 2017 04:23 AM  |   
dinamani-neet
விவாதத்தில் நடுவராக செயல்பட்ட சென்னை விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் கே.கணேசனுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் 'தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன். உடன் (இடமிருந்து) கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபா
Ads by Kiosked
தமிழக மாணவர்களுக்கு "நீட்' தேர்வு தேவையா அல்லது தேவையில்லையா என்று விவாதிக்கும் வகையில் "நீட்: சிந்திப்பதா? சந்திப்பதா? என்ற தலைப்பிலான சிறப்பு விவாதம் "தினமணி சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சமூக நீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரான "நீட்' தகுதித் தேர்வு தமிழகத்துக்குத் தேவையில்லை என "சிந்திப்பது' என்ற தலைப்பில் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி, ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் வாதிட்டனர்.
வாக்கு வங்கிக்காக, தேசிய தகுதித் தேர்வு எதிர்க்கப்படுகிறது. 'நீட்' தகுதித் தேர்வால் இடஒதுக்கீடு பாதிக்கப்படப்போவது இல்லை. அப்படி இருக்கும்போது, இதை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன? தகுதித் தேர்வை எதிர்ப்பது, தமிழக மாணவர்களின் நலனைப் பாதிக்கும் என "சந்திப்பது' என்ற தலைப்பில் பேசிய அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ. கலாநிதி, பேராசிரியர் தி.ராசகோபாலன், டாக்டர் எல்.பி.தங்கவேலு ஆகியோர் வாதிட்டனர்.
இரு அணியினரின் வாதங்களையும் கேட்ட நடுவர் கே. கணேசன், நீட் தேர்வில் சில குறைபாடுகள் உள்ளன. சமச்சீர் கல்வியின் தரத்தை உயர்த்தும் வரை தகுதித் தேர்வுகள் வேண்டாம் என்று ஒரு தரப்பினரும், தகுதித் தேர்வுகள் அனைத்தும் ஒருவரின் திறமையை படம்பிடித்து காட்டக்கூடியவை எனவே அவை அவசியம் என்று மற்றொரு தரப்பினரும் வாதிட்டனர். இருதரப்பினரும் தங்கள் பக்க நியாயத்தை வெளிப்படுத்தினர். இதில் எது சரி என்ற முடிவுக்கு வருவதை பார்வையாளர்களிடமே விட்டு விடுகிறேன் என்று கூறினார்.
இளநிலை மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) சேருவதற்கு "நீட்' தகுதித் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு தரப்பினர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். "நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டப் பேரவையில் ஒருமனதாக சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு காத்திருக்கிறது. இதனால், 2017-18 கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ். சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுமா அல்லது "நீட்' அடிப்படையில் நடைபெறுமா என்ற குழப்பத்தில் மாணவர்கள் உள்ளனர்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ்
"நீட்' தகுதித் தேர்வை பொருத்தவரை சி.பி.எஸ்.இ. (மத்திய பாடத் திட்டம்) தரத்துக்கு நடத்தப்படுகின்ற ஒரு தேர்வு. இந்தியாவில் தென் மண்டலத்தில் 59,000 மாணவர்கள் சி.பி.எஸ்.இ. தேர்வு எழுதுகின்றனர். இதில் தமிழகத்திலிருந்து 12,000 மாணவர்கள்தான் எழுதுகின்றனர்.
ஆனால், தமிழகத்தில் ஆண்டுக்கு 9 லட்சம் மாணவர்கள் சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் படிக்கின்றனர். இவர்கள் சி.பி.எஸ்.இ. அடிப்படையில் நடத்தக் கூடிய ஒரு தகுதித் தேர்வை எதிர்கொள்ள முடியுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.
ஒரு போட்டித் தேர்வு என்றால் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் நடப்பதுதான் சரியாக இருக்க முடியும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டம் கொண்டுவருகின்ற போதுதான் இது சாத்தியப்படும்.
இன்றைய நிலையில் தமிழகம் இதற்கு தயாராக இல்லை. தகுதித் தேர்வுக்கு தமிழகம் தயாராக அடுத்த 8 ஆண்டுகள் தேவைப்படும்.
இந்தச் சூழலில் தகுதித் தேர்வை நடத்தினால் தமிழகத்தில் மொத்தமுள்ள 3,400 எம்.பி.பி.எஸ். இடங்களில், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 3,000 இடங்களில் சேர்ந்துவிடுவர். மீதமுள்ள 400 இடங்கள்தான் சமச்சீர் கல்வியின் கீழ் படித்த 9 லட்சம் மாணவர்களுக்கு கிடைக்கும்.
எனவே, "நீட்' தகுதித் தேர்வு என்பது தமிழகத்துக்கும், சமூக நீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது. இது இன்றைக்குத் தேவையில்லை.
தமிழகத்தில் 1984-இல் தான் நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது வெறும் 15 சதவீத கிராமப்புற மாணவர்கள்தான் மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது.
பின்னர், நுழைவுத் தேர்வு ரத்தான உடன் 2007 இல் 65 சதவீத கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். எனவே, இன்றைய சூழலில் "நீட்' தகுதித் தேர்வுக்கு தமிழகம் தயாராக இல்லை.
சமச்சீர் கல்வி, சி.பி.எஸ்.இ. தரத்துக்கு உயர்த்தப்பட வேண்டும். தரமான, கட்டணம் இல்லாத, சுமை இல்லாத கல்வியைக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதன் பிறகு எத்தனை போட்டித் தேர்வுகள் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளட்டும். அதுவரை தகுதித் தேர்வுகள் வேண்டாம்.

நீதிபதி ஹரிபரந்தாமன்
"நீட்' தகுதித் தேர்வு கட்டாயமாவதற்கு உச்ச நீதிமன்றம் காரணமல்ல. மத்திய அரசு இயற்றிய சட்டம்தான் அதற்குக் காரணம்.
நமது அரசியலமைப்புச் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநில உரிமைகளை வலியுறுத்துகிறது. ஆனால், "நீட்' மாநில உரிமைக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் வைக்கும் வேட்டாகும்.
தமிழக அரசு 31-1-2017 அன்று, சட்டப்பேரவையில் ஒரு சட்டம் கொண்டுவந்தது. அந்தச் சட்டம் அனைத்துக் கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
எனவே, தமிழக அரசின், தமிழக மக்களின் நோக்கம் "நீட்' வேண்டாம் என்பதுதான். ஆனால், மூன்று மாதங்கள் ஆகிவிட்டபோதும் மத்திய அரசு எந்தவொரு பதிலையும் இதுவரை தரவில்லை. குடியரசுத் தலைவரிடம் ஒப்புதலும் பெற்றுத்தரவில்லை. இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாகும்.
தமிழகத்தில் 1984 இல் அறிமுகம் செய்யப்பட்ட நுழைவுத் தேர்வு, பின்னர் 2006 இல் ரத்து செய்யப்பட்டது. பிளஸ்-2 அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதற்கு வணிக ரீதியிலான தனியார் பயிற்சி மையங்கள் பெருகியதும், அவை ஏழை மாணவர்களிடம் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டதுமே காரணம். இப்போது "நீட்' நுழைவுத் தேர்வை கட்டாயமாக்குவதால், தனியார் பயிற்சி மையங்கள் மீண்டும் அதிக அளவில் உருவெடுத்து, கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதற்கே வழிவகுக்கும்.
எனவே, தகுதித் தேர்வை ரத்து செய்துவிட்டு, பிளஸ்-2 அடிப்படையிலேயே மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்படவேண்டும்.

பேராசிரியர் தி. ராசகோபாலன்
"நீட்' தகுதித் தேர்வை எதிர்ப்பது ஏன் தெரியுமா? மத்தியில் உள்ள அரசு இதை கொண்டுவந்த காரணத்தால், இதை எதிர்க்க வேண்டும் என ஓட்டு வங்கிக்காகவே, அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால், தகுதித் தேர்வை கட்டாயமாக்கியது மத்திய அரசு அல்ல. இதைக் கட்டாயமாக்கியது உச்ச நீதிமன்றம்.
மருத்துவப் படிப்புக்கு நாடு முழுவதும் பலதரப்பட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதால், பங்கேற்க முடியாமல் பாதிக்கப்பட்ட சிம்ரன் ஜெயின் என்ற மாணவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இனி எந்த மாநிலமும் தனித் தனி நுழைவுத் தேர்வுகளை நடத்தக் கூடாது. நாடு முழுவதும் உள்ள மருத்துவ இடங்கள் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில்தான் பொது நுழைவுத் தேர்வை உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதன் அடிப்படையிலேயே, "நீட்' தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ள பயிற்று மொழியோ அல்லது சி.பி.எஸ்.இ. பாடத் திட்டமோ தடை அல்ல. தமிழ் மொழியில், மாநில பாடத்திட்டத்தில் படித்த பலர் சாதனை படைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் பணியாற்றும் 275 ஐஏஎஸ் அதிகாரிகளில் 150 பேர் தமிழகத்தில் இருந்துவந்த ஐஏஎஸ் அதிகாரிகள். ஐஏஸ் தேர்வு எழுத முடிகின்ற தமிழக மாணவர்கள், ஏன் "நீட்' தகுதித் தேர்வை எதிர்கொள்ளக் கூடாது?
அதுமட்டுமின்றி இந்த 'நீட்' தகுதித் தேர்வால் இடஒதுக்கீடு பாதிக்கப்படப்போவதும் இல்லை. அப்படி இருக்கும்போது, இதை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன?

முன்னாள் துணைவேந்தர் ஏ. கலாநிதி
தமிழகத்தில் மாணவர்களுடைய தரம் வெகுவாகக் குறைந்துபோயுள்ளது. இதை எவரும் ஒத்துக்கொள்வதில்லை.
உலகத்திலேயே மிகப் பழைமையான முதன்மை மொழி தமிழ்தான். இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது சம்ஸ்கிருதம்.
தமிழ் மொழியில் திருக்குறள், திருமந்திரம் என பல இலக்கியங்கள் படைக்கப்பட்டன. அதுபோல சம்ஸ்கிருதத்தில் பல வேதங்கள் உள்பட மிக ஆழமான கருத்துகளையுடைய படைப்புகள் உருவாக்கப்பட்டன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஒரு தமிழன் திருக்குறளை எழுதியிருக்கிறார் என்றால், தமிழ் மொழிக்கு அப்படிப்பட்ட திறமை இருக்கிறது என்பதுதான் உண்மை.
இந்த மொழிக்கே உண்டான திறமையை நாம் பயன்படுத்த, கடந்த 600 ஆண்டுகளாக நமது ஆட்சியாளர்கள் விடவில்லை. நம்மை எழ விடாமல் தடுக்கின்றனர்.
பள்ளிகளில் பிளஸ்-1 பாடம் நடத்தப்படுவதே இல்லை. இது பெற்றோர், ஆசிரியர்கள், ஒருசில அரசியல்வாதிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் தெரிந்தும் தெரியாததுபோல் இருக்கின்றனர்.
1984 இல் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. அப்போது நடத்திய கருத்துக் கணிப்பில், இதில் கிராமப்புற மாணவர்களும் சிறந்து விளங்குகின்றனர் எனத் தெரியவந்தது.
பின்னர் சில ஆண்டுகள் கழித்து 2006 இல் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால், அப்போது கருத்துக் கணிப்போ அல்லது கல்வியாளர்களின் கருத்தோ கேட்கப்படவில்லை. ஒரே இரவில், அரசியல்வாதிகளே இந்த முடிவை எடுத்தனர். வாக்கு வங்கிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இன்றைக்கும் இதே வாக்கு வங்கிக்காக, தேசிய தகுதித் தேர்வு எதிர்க்கப்படுகிறது. இது நம்மை மேலும் கீழே தள்ளக்கூடிய செயல். எனவே, மாணவர்கள் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு
"நீட்' தேர்வு வருவதற்கு உச்ச நீதிமன்றம் காரணம் அல்ல. தகுதித் தேர்வை நடத்த தயாராக இருக்கிறீர்களா என உச்ச நீதிமன்றம் கேட்டதற்கு, மத்திய அரசு வழக்குரைஞர்தான் நாங்கள் தயார் என்று கூறினார். பின்னர், சில மாநிலங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக உச்சநீதிமன்றத்தில் அடுத்த நாள் அரசு வழக்குரைஞர் தெரிவித்தார். எனவே, நீட் தகுதித் தேர்வுக்கு காரணம் உச்சநீதிமன்றம் அல்ல.
மத்திய அரசு 2016 மே மாதம் சட்டம் இயற்றுகிறது. அதில், நாடு முழுவதும் நீட் கட்டாயமாக்கப்படுகிறது எனக் கூறிவிட்டு, இதை விரும்பாத மாநிலங்களுக்கு 2016-17 கல்வியாண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டது. இந்த விலக்குக்கு 30 காரணங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாடத் திட்டம் சமச்சீராக இல்லை என்பதும் ஒன்று.
2016-17 ஆம் ஆண்டுக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கூறிய காரணம், 2017-18 ஆம் ஆண்டில் மாறிவிட்டதா? மத்திய பாடத் திட்டமும், மாநில பாடத் திட்டமும் சமச்சீராகிவிட்டதா?
எனவே, இன்றைய தேதி வரை இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டிருக்கின்றது.
"நீட்' தேர்வைக் கட்டாயமாக்குவது பள்ளிக் கல்வி முறையை, பயிற்சி மைய முறையாக மாற்றுவதற்குதான் வழிவகுக்கும். பள்ளிக் கல்வி முறையில் கேள்வி கேட்கமுடியும். ஆனால், பயிற்சி மைய முறையில் கேள்வி கேட்க முடியாது. சிந்திக்கும் திறனையே பாதிக்கும் செயல்.

டாக்டர் எல்.பி. தங்கவேலு
இன்றைய கால கட்டத்தில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கே நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இப்படி இருக்கும்போது மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது?
"நீட்' தகுதித் தேர்வை இனி தவிர்க்கவே முடியாது. எனவே, அதை எதிர்கொள்ள நமது மாணவர்களை எப்படித் தயார்படுத்துவது என்பது குறித்துதான் நாம் சிந்திக்க வேண்டும்.
தமிழக மாணவர்கள் திறமையானவர்கள்தான். ஆனால், "நீட்' தகுதித் தேர்வை எதிர்கொள்கிற அளவுக்கு பாடத் திட்டத்தை மேம்படுத்தாமல் மாணவர்களின் திறனை குறைத்ததற்கு மாறி மாறி ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள்தான் காரணம்.
மாநில இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு இருக்காது, மருத்துவர்களின் தரத்தை உயர்த்தவும், நன்கொடைகளைத் தடுக்கவும் தகுதித் தேர்வு அவசியம். ஹிந்தி, ஆங்கிலத்திலும் தேர்வு நடத்தப்படும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படவில்லை.
என்.சி.இ.ஆர்.டி. பரிந்துரைத்துள்ள பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே "நீட்' தேர்வு நடத்த இருக்கிறோம் போன்ற உறுதிகளை அளித்த பின்னரே இந்தச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது.
எனவே, தகுதித் தேர்வை எதிர்ப்பது, தமிழக மாணவர்களின் நலனைப் பாதிக்கும்.
தீர்வு என்ன?: நடுவர் கணேசன்
இந்தத் தகுதித் தேர்வுகள் அனைத்தும், ஒருவரின் திறமையை படம்பிடித்துக் காட்டக்கூடியவை. எனவே அவை அவசியம்.
ஆசிரியர்களுக்கு பொறுப்பேற்கும் தன்மையே மிகவும் குறைந்துவிட்டது. அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்ற 2.5 லட்சம் பேரில் வெறும் 4,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி மேலும் மேம்படுத்த வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. சமச்சீர் கல்வியை மேம்படுத்தவேண்டும் என்பதோடு, அதை மாணவர்களுக்கு புரியும் வகையில் ஆசிரியர்கள் சொல்லித் தரவேண்டும்.
இருந்தாலும் நீட் தகுதித் தேர்வில் சில குறைபாடுகள், சூழ்நிலைகள் எதிர் தரப்பில் முன்வைக்கப்பட்டன. அதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு எது சரி, எது தவறு என்ற ஒரு சுமுகத் தீர்வு காண்பதை பார்வையாளர்களிடமே விட்டுவிடுகிறேன் என்றார் நடுவர் கணேசன்.

நிறைவுரை: "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன்
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் 9 லட்சம் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதுபோல, ஒரு பொது நுழைவுத் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என முடிவு செய்யும் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துக் கொள்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆனால், அதே நேரத்தில் நுழைவுத் தேர்வே வேண்டாம், எந்தப் போட்டியும் வேண்டாம் என்ற நிலை வருமானால், மாணவர்களின் தன்னம்பிக்கை வளராமல் போய்விடும்.
எனவே, நுழைவுத் தேர்வு தேவைதான். அதேநேரம், பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண் இரண்டையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதனடிப்படையில் மருத்துவம், பொறியியல் சேர்க்கை நடத்தவேண்டும். இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். மேலும், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், பத்தாம் வகுப்பு வரையிலான அடிப்படைக் கல்வி அரசு கல்வியாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக தரமான அரசுக் கல்வியாக இருக்க வேண்டும். உயர்நிலைப் பள்ளி வரை தனியார் மயம் ஏற்புடையதல்ல. பள்ளிக் கல்வி தனியார் மயத்திலிருந்து விடுவிக்கப்படவேண்டும்.

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...