Saturday, April 29, 2017

சார் - பதிவாளர்களுக்கு தினமும் ரூ.500 அபராதம் : வருமான வரித்துறை கெடுபிடி

பதிவு செய்த நாள் 28 ஏப்
2017

23:39 'தமிழகத்தில், 10 லட்சம் ரூபாய்க்கும் மேலான சொத்து பரிமாற்ற விபரங்களை தராத, சார் ---- பதிவாளர்களுக்கு, தினமும், 500 ரூபாய் அபராதம்' என, வருமான வரித்துறை, 'கெடுபிடி' போட்டுள்ளதால், பதிவுத்துறையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சொத்து பரிமாற்றத்தில் ஈடுபடுவோர், அது குறித்த உண்மை தகவலை, வருமான வரித்துறையிடம் தெரிவிக்காமல் மறைப்பதால், வரி ஏய்ப்பு நடக்கிறது. இவர்களை கண்காணிக்க, வருமான வரி சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, ஐந்து லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்து பரிமாற்றங்களின் போது, விற்பவர்கள், வாங்குபவர்களின் பான் எண் அல்லது படிவம் - 60ஐ, சார் - பதிவாளர்கள் பெற வேண்டும். இந்த விபரங்களை, வருமான வரித்துறைக்கு அனுப்ப வேண்டும். ஆனால், பெரும்பாலான சார் - பதிவாளர்கள், இந்த விஷயத்தில், அலட்சியமாக செயல்படுவதால், சொத்து பரிமாற்ற விபரங்கள், வருமான வரித்துறைக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில், பதிவுத்துறை தலைமையகத்தில், உயர் அதிகாரிகளுடன், வருமான வரித்துறையினர், சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். அதில், அபராதம் விதிப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: வருமான வரி சட்ட திருத்தப்படி, 2016 ஏப்., 1க்கு பின், 10 லட்சம் ரூபாய் மதிப்புக்கு மேலாக, சொத்து பரிமாற்றம் செய்தோரின் விபரங்களை, உடனே அனுப்ப உத்தரவிடப் பட்டுள்ளது. அவ்வாறு அனுப்பாத சார் - பதிவாளர்களுக்கு, 2016 செப்., 1 முதல் நாள் ஒன்றுக்கு, 200 ரூபாயும், 2017 மே, 2க்கு பின், 500 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். அப்படியும், தகவல் அனுப்பாத சார் - பதிவாளர்களுக்கு சிறை தண்டனை விதிக்கவும், சட்டத்திருத்தத்தில் வழி உள்ளது என, வருமான வரித்துறையினர் சுட்டிக்காட்டினர். இதனால், 10 லட்சம் ரூபாய்க்கும் மேலான, சொத்து பரிமாற்ற விபரங்களை அனுப்பும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். வருமான வரித்துறை, 'கெடுபிடி'யால், பதிவுத்துறை அதிகாரிகள், பதற்றம் அடைந்துள்ளனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...