Monday, April 24, 2017

இது தவறான முடிவு

By இரா. கதிரவன்  |   Published on : 24th April 2017 02:01 AM  |   
சில தினங்களுக்கு முன்னர் ஒரு செய்தி சில பத்திரிக்கைகளில் வெளியாகியிருந்தது.
உத்தரப் பிரசதேசத்தில், உத்தரப் பிரசதேச நவ நிர்மாண் சேனை என்ற அமைப்பின் சார்பாக, மீரட் நகரத்தில் சுமார் 50 பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன.
அம்மாநிலத்தில் தங்கிப் படிப்பவர்கள்,தொழிலில் ஈடுபடுவோர், வேலையில் இருக்கும் காஷ்மீரை சார்ந்தவர்கள் யாவரும் உத்தரப் பிரசதேசத்தை விட்டு உடனடியாக வெளியேறிவிட வேண்டும். இல்லையேல் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தனர் என்பதே செய்தியாகும்.
காஷ்மீரில், இந்திய பாதுகாப்புப் படையினை சார்ந்த வீரர்கள் மீது கல் எறிதல் போன்ற சம்பவங்களிலும் வன்முறையிலும் ஈடுபடும் காஷ்மீரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும் - எதிர்வினை ஆற்றும் விதமாகவும் இந்த அறிவிப்பு என்றும் கூறப்பட்டது.
உங்கள் உறவினர்கள், பாதுகாப்பு வீரர்கள் மீது கல் எரிந்து துன்பப்படுத்தும் போது, நீங்கள் இங்கே நிம்மதியாக இருக்க முடியாது என்று சொல்லப்பட்டது. உள்ளூர் மக்களுக்கு, காஷ்மீரைச் சார்ந்தவர்களை - முழுமையாக ஒதுக்கி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.
குறிப்பாக, காஷ்மீரிகளுக்கு தங்க இடம் - பால் - பத்திரிகை - வங்கிகளில் கணக்கு போன்ற வசதிகள் செய்து தர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இந்தியாவின் அறிவியல் வல்லுநர்கள் ஒரே சமயத்தில் பல துணைக் கோள்களை விண்ணில் செலுத்தும் சாதனையை செய்வது எனும் முன்னேற்றமான - பெருமை படும் தகவல்கள் ஒருபுறம் என்றால், இன்னொரு புறம், வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத அளவுக்கு வெட்கக்கேடான விஷயங்களும் நிகழ்வது ஒரு விந்தையான முரண் ஆகும்.
காஷ்மீரில், படை வீரர்களுக்கு எதிராக அந்தப் பகுதியில் தவறாக வழி நடத்தப்படும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் செய்யும் காரியங்களை நியாயப்படுத்த முடியாது.
ஆனால், அதற்கான எதிர்வினை எனும் பெயரில் நாட்டின் வேறு ஒரு பகுதியில் செய்யப்படும் சட்டத்துக்கு புறம்பானவற்றை ஏற்றுக் கொள்ள முடியுமா? ஒரு தவறை இன்னொரு தவறு சரி செய்து விடுமா?
ஒரு மாநிலத்தில் நிகழும் தவறான சம்பவங்களுக்கு, இன்னொரு மாநிலத்தில் இருக்கும் அப்பாவி மக்களை அச்சுறுத்துவதும் - துன்புறுத்துவதும் எந்த வகையில் நியாயம்? இது ஏற்றுக் கொள்ளக் கூடியதா?
அமெரிக்காவில் நமது இந்தியர்கள் சிலர் தேவையற்ற அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பதையும், சிலர் கொல்லப்பட்டதையும் கண்டு நாம் ஒவ்வொருவரும் மனம் பதைக்கிறோம். ஆனால், நமது தேசத்தில், ஒரு மாநிலத்தில் இப்படி நிகழ்வதை எப்படி நாம் ஏற்றுக் கொள்ள முடியும்?
அது மட்டுமல்ல, இத்தகைய அணுகுமுறை வெற்றி கண்டால், அதனையே பிற மாநிலங்களும் கைக்கொள்ளக் கூடும்.
வல்லான் வகுத்ததே வாய்க்கால் அல்லது தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் எனும் நிலை உருவாக இது வழி வகுக்கும்.
மேலும், இதுபோன்ற வன்முறைக்கு கிடைக்கும் வெற்றி என்பது, உண்மையில் மக்களிடையே நிரந்தர பிளவை ஏற்படுத்தும். தவிரவும், சாமானிய மக்கள் சட்டம் - நீதி ஆகியவற்றின் மீது வைக்கும் நம்பிக்கையையும் இழக்கச் செய்து விடும். இது ஒரு நல்ல முடிவு அல்ல.
இதன் நீட்சி - அதீத கற்பனையாக கூட இருக்கலாம். ஆனாலும் அந்த கற்பனை மனதில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொரு மாநிலமும், தனது அண்டை மாநிலத்தோடு ஏதேனும் ஒரு வகையில் சில தீர்வு எட்டப்ப படாத பிரச்னைகளை வைத்திருக்கிறது.
இதனைக் காரணம் காட்டி சிலர் வன்முறையைக் கையில் எடுத்து, பிற மாநிலத்தவரை வெளியேறச் செய்வது என்ற நிலை ஏற்படுமேயானால், பல்வேறு மாநிலத்து மக்களிடையே பரஸ்பர நம்பிக்கை - நல்லெண்ணம் - நல்லுறவு போன்றவை தகர்த்தெறியப்படும்.
ஒரு மொழி பேசுவோர் இன்னொரு மொழி பேசும் மாநிலத்துக்குள் இருப்பது, ஒரு குறிப்பிட்ட மதத்தினர் வேறு மதத்தவரோடு இணக்கமாக வசிப்பது போன்றவற்றுக்கு குந்தகம் ஏற்படும். மக்கள் தங்கள் மாநிலத்தில் மட்டுமே,அச்சமின்றி வாழ முடியும் ஒரு சூழலை நோக்கி நாடு
செல்லலாமா?
அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் - பெரும்பாலோர் தினக்கூலி வேலை செய்வோர் - ஓட்டல்களில் வேலை செய்தவர்கள் - மாணவர்கள் } சில லட்சம் பேர் பெங்களூரு நகரை விட்டு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வதந்தியின் அடிப்படையில் வெளியேறினர்.
பின்னர் அஸ்ஸாம், கர்நாடக அரசுகள் தலையீட்டில் அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. இருப்பினும், அந்த மக்களின் மனதில் பய உணர்வு, தாங்கள் அந்நியர்களோ என்ற உணர்வு எழுந்ததை தவிர்க்க இயலவில்லை.
ஒருபுறம் தேசிய ஒருமைப்பாட்டை பற்றி, வேற்றுமையிலும் ஒற்றுமை என்று பேசி வருகிறோம். இன்னொரு புறம், சில தீய சக்திகள் அத்தகைய நல்ல விஷயங்களை குழி தோண்டிப் புதைக்க எத்தனிப்பது வருத்தம் தருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்கள் அண்டை மாநிலம் ஒன்றில் பெரும் அச்சுறுத்தலுக்கும் - அபாயத்துக்கும் உள்ளாக்கப்பட்டபோது, தமிழகத்தில் மக்கள், அமைதிக்கு பங்கம் வாராமல் பெரும் அமைதி காத்தனர். தமிழகத்தில் வசிக்கும் அந்த அண்டை மாநில மக்களுக்கு எந்த வித இடையூறும் அச்சுறுத்தலும் தராதிருந்தனர்.
தமிழக அரசும் அம்மக்கள் மீது எந்த வன்முறைக்கும் இடம் அளிக்காது என்பதனை உறுதிபட தெளிவுபடுத்தியது. எந்த பகுதியிலும் எவருக்கும் எந்தவொரு தீங்கும் நிகழாது இருந்தது.
இத்தகைய நல்ல முன்னுதாரணத்தை பிற மாநிலங்களும் கவனிக்க வேண்டும். கடைப்பிடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...