Tuesday, April 25, 2017

சிவப்பு விளக்கு சுழலாது!

By ஆசிரியர்  |   Published on : 24th April 2017 01:57 AM  |   
மக்களால் மக்களுக்காக மக்களை ஆளத் தேர்ந்தெடுக்கப்படும் அரசில், மக்களைவிட அதிகப்படியான சலுகைகளை அமைச்சர்களும், அதிகாரவர்கமும் அனுபவிப்பது ஜனநாயக முரண். சர்வதேச அளவில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட இடர்காலச் சேவைகளும், தீயணைப்பு மற்றும் காவல்துறை வாகனங்களும் மட்டும்தான் சிவப்பு விளக்குப் பொருத்திக் கொள்வது வழக்கம். ஆனால் நமது இந்தியாவிலோ, அமைச்சர்கள் மட்டுமல்ல, அதிகாரவர்கத்தினர் எல்லோருமே சிவப்பு விளக்குப் பொருத்தப்பட்ட வாகனங்களில் வளைய வருவது, அவர்களது பதவியின் கெளரவமாகவும், அதிகாரத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மே மாதம் 1-ஆம் தேதி முதல் எந்தவொரு சிறப்பு மரியாதைக்குரிய குடிமகனும் இந்தியாவில் சிவப்பு விளக்கு சுழலும் வாகனத்தில் வலம் வர முடியாது என்று துணிந்து முடிவெடுத்திருக்கிறது. குடியரசுத் தலைவர், பிரதமர், தலைமை நீதிபதிகள், முதலமைச்சர்கள் என்று யாருமே இனி சிவப்பு விளக்கு சுழலும் வாகனத்தில் பயணிக்க முடியாது. இடர்கால சேவைகளுக்கான ஆம்புலன்ஸ்களும், தீயணைப்பு வாகனங்களும், காவல்துறை வாகனங்களும் சுழலும் நீல விளக்கு பயன்படுத்திக் கொள்வது அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
அதிகாரவர்க்கத்தினரால் சிவப்பு விளக்கு தவறாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட பொது நல வழக்கில் 2013-இல் உச்சநீதிமன்றம், இந்த வழக்கத்திற்குக் கண்டனம் தெரிவித்
திருந்தது. சிவப்பு விளக்கு சுழலும் வாகனங்களில் வலம் வருவது என்பது காலனிய ஆட்சிக்கான அதிகார வர்க்கத்தின் மனோநிலையி
லிருந்து நமது ஆட்சியாளர்கள் இன்னும் விடுபடாததைக் காட்டு
கிறது என்றும், குடிமக்களை அடிமையாகக் கருதும் அதிகார மமதையின் நீட்சிதான் "சிவப்பு விளக்கு' சுழலும் வாகனங்கள் என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தான் பதவிக்கு வந்ததும் உடனடியாக சிவப்பு விளக்கு சுழலும் வாகனங்களுக்கு முடிவுகட்டினார். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்
பின், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தத்தம் மாநிலங்களிலும் சிவப்பு விளக்குக் கலாசாரத்திற்கு முடிவு கட்டினர். இப்போது பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுமைக்கும் ஒரேயடியாக சிவப்பு விளக்கு கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டிருக்கிறார். பாராட்டுகள்.
வாகனங்களில் சிவப்பு விளக்கு சுழலாது என்பதால் நமது அமைச்சர்களும், அதிகாரிகளும் எல்லா சிறப்பு சலுகைகளையும் இழந்துவிடுவார்கள் என்று அர்த்தமில்லை. விமான நிலையங்களில் அவர்கள் வரிசையில் நிற்கப் போவதில்லை; சுங்கச்சாவடிகளில் அவர்களது வாகனங்கள் கட்டணம் செலுத்தப் போவதில்லை;
ஏன், நீல விளக்கு சுழலும் காவல்துறை வாகனங்கள் முன்னால் செல்லாமல் அவர்கள் பயணிக்கப் போவதும் இல்லை. ஆனாலும்கூட, பொதுமக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டிக் கொள்ளும் காலனிய அடையாளத்தைத் துறந்திருக்கிறார்கள் என்பது வரை மகிழ்ச்சி.
மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் கடினமான பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சில சலுகைகள் தரப்பட வேண்டும்தான். ஆனால் அதையே தங்களது உரிமைகளாக அவர்கள் கருதும்போது, தேர்ந்தெடுத்தவர்கள் சிறுமைப்படுத்தப்படுகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று, உறுப்பினர்களின் சம்பளத்தை ஆண்டொன்றுக்கு ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாகவும், படியை ரூ.45,000-த்திலிருந்து ரூ.90,000 ஆகவும் உயர்த்தப் பரிந்துரைத்திருக்கிறது. இன்றைய நிலையில் இந்தியாவில் தனிநபர் வருவாயைவிட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் ஆறு மடங்கு அதிகம். பிரிட்டனில் இரண்டு மடங்கும், அமெரிக்காவில் மூன்று மடங்கும் இருக்கும்போது இங்கே ஆறு மடங்கு!
அவர்களது சம்பளம் உயர்த்தப்பட வேண்டுமா, கூடாதா என்பதல்ல பிரச்னை. நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் சம்பள உயர்வை தங்களுக்குத் தாங்களே நிர்ணயித்துக் கொள்கிறார்களே, அதுதான் வேடிக்கை. அமெரிக்காவில் 1970 முதல், அமெரிக்க அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு
ஏற்றாற்போல நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.
எல்லாவற்றையும்விட வேடிக்கை, நமது நாடாளுமன்ற உறுபினர்களில் 84% உறுப்பினர்கள் கோடீஸ்வரர்கள். இவர்கள் மக்களுக்குச் சேவை செய்வதற்காகத் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருப்பதாகக் கூறுபவர்கள்!
சிறப்புச் சலுகைகள் பெறுவதிலும், சாமானியக் குடிமக்களி
லிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்வதிலும் அதிகாரவர்க்கம் அரசியல்வாதிகளுக்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. அரசு வீட்டுமனைகள் ஒதுக்கீட்டிலாகட்டும், அரசு செலவில் வெளிநாடு சுற்றிவருவதிலாகட்டும், தங்கள் வீட்டு வேலைக்கு அரசு ஊழியர்களை பயன்படுத்துவதிலாகட்டும் அதிகாரிகள் இப்போதும்கூட பிரிட்டிஷ் காலனிய அதிகாரிகளின் செயல்பாடுகளைத் தொடர்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
சிவப்பு விளக்கை வாகனங்களிலிருந்து அகற்றுவதுடன் நின்றுவிடக்கூடாது இந்த ஞானோதயம். சுதந்திரம் அடைந்தபோது காங்
கிரஸ் கொடியும் தேசியக் கொடியும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருந்தது அன்றைய ஆட்சியாளர்களுக்குத் தங்களது அதிகாரத்தைப் பாதுகாக்க உதவியது, சாதகமாகவும் இருந்தது. உலகில் இந்தியாவைத் தவிர வேறு எந்த ஜனநாயக நாட்டிலும் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியாக கொடி கிடையாது. அரசியல்கட்சிகளுக்கு சின்னம் தேவைதான். ஆனால் கொடி எதற்காக? சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...