Tuesday, April 25, 2017

ஜனாதிபதி தேர்தல்: 10 அம்சங்கள்

தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 2012ம் ஆண்டு ஜூலை, 25ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவர், ஐந்து ஆண்டுகள் அப்பதவியை வகிக்க வேண்டும். அதன்படி, வரும் ஜூலை, 25ம் தேதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்தி, புதிய ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும். இந்த தேர்தல் தொடர்பாக, 10 முக்கிய அம்சங்கள் வருமாறு:




1. ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் ஓட்டு போட முடியாது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள், 31 சட்டசபைகளின் எம்.எல்.ஏ.,க்கள் தான் ஓட்டு போட வேண்டும். அந்த வகையில், 784 எம்.பி.,க்கள், 4,114 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட உள்ளனர்.

2. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் விதிகள் - 1974ன் கீழ், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு, 'எலக்ட்ரோல் காலேஜ்' என, பெயர். இதன்படி ஒரு எம்.பி.,யின் ஓட்டு மதிப்பு, 708. ஆனால், ஒரு எம்.எல்.ஏ.,யின் ஓட்டு மதிப்பு, அவர் சார்ந்த சட்டசபையின் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்படும். அதன்படி, உ.பி., எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்பு, 208. மிக குறைந்த ஓட்டு மதிப்பு கொண்டது சிக்கிம் மாநில எம்.எல்.ஏ., தான். அவரது ஓட்டு மதிப்பு, 7 .
3. நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு புறமும், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றொரு புறமும் உள்ளன.

இதுதவிர இந்த இரண்டு தரப்பையும் விருப்பாமல், அ.தி.மு.க., உள்ளிட்ட ஆறு மாநில கட்சிகள் மூன்றாவது தரப்பில் உள்ளன.

4. பா.ஜ., கூட்டணியில், 23 கட்சிகள் உள்ளன. இவர்களிடம், மொத்தம், 1,691 எம்.எல்.ஏ.,க்கள், 418 எம்.பி.,க்கள் உள்ளனர். ஓட்டு மதிப்புபடி பார்த்தால், எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுமதிப்பு, 2,41,757 ; எம்.பி.,க்கள் ஓட்டு மதிப்பு,2,95,944 என, மொத்தம், 5,37,683 ஓட்டு மதிப்பு உள்ளது. ஒட்டு மொத்த ஓட்டு மதிப்பில் இது, 48.64 சதவீதமாகும்.

5. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும், 23 கட்சிகள் உள்ளன. இவர்களிடம், 1,710 எம்.எல்.ஏ.,க்கள், 244 எம்.பி.,க்கள் உள்ளனர். மொத்த எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு மதிப்பு, 2,18,987; எம்.பி.,க்கள் ஓட்டு மதிப்பு, 1,73, 460 என மொத்தம், 3,91,739 ஓட்டு மதிப்பு உள்ளது. ஒட்டு மொத்த ஓட்டு மதிப்பில் இது, 35.47 சதவீதம்.

6. இரண்டு கூட்டணிகளிலும் சேராத தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க., ஒடிசாவை சேர்ந்த பிஜு ஜனதா தளம், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஆந்திராவை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சி, அரியானாவை சேர்ந்த இந்திய தேசிய லோக் தளம் கட்சி ஆகியவை தனியாக உள்ளன. இவர்களிடம், 510 எம்.எல்.ஏ.,க்கள், 109 எம்.பி.,க்கள் உள்ளனர். இந்த தரப்பின், எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு, 71,495; எம்.பி.,க்கள் ஓட்டு மதிப்பு, 72,924 என மொத்த ஓட்டுக்களின் மதிப்பு, 1,44,302. இது ஒட்டுமொத்த ஓட்டு மதிப்பில், 13.06 சதவீதமாகும்.

7. இந்த கணக்குபடி பார்த்தால், காங்., கூட்டணியை விட, பா.ஜ., கூட்டணிக்கு, 13 சதவீத ஓட்டு மதிப்பு அதிகமாக உள்ளது.

சமீபத்தில் நடந்த உ.பி., பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநில தேர்தல்களில் பா.ஜ., கூடுதல் எம்.எல்.ஏ.,க்களை பெற்றது அந்த கூட்டணியின் ஜனாதிபதி தேர்தல் ஓட்டு மதிப்பை, 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

8. காங்., கூட்டணியுடன், எந்த கூட்டணியிலும் சேராத ஆறு கட்சிகளின் ஜனாதிபதி தேர்தல் ஓட்டு மதிப்பை சேர்த்தால் கூட, பா.ஜ., சற்று முன்னிலையில் தான் உள்ளது. பா.ஜ., கூட்டணி ஓட்டு மதிப்பு, 48.64 சதவீதம்; காங்., கூட்டணியின் ஓட்டு மதிப்பான, 35.47 சதவீதத்துடன், ஆறு கட்சிகளின் ஓட்டு மதிப்பான, 13.06 சதவீதத்தை சேர்த்தால் கூட, 48.53 சதவீதம் தான் வரும். இது பா.ஜ.,வை விட சிறிதளவு குறைவு தான்.

9. ஜனாதிபதி தேர்தலில் மெஜாரிட்டி ஓட்டுக்களை பெற, ஆறு கட்சிகளில் ஒன்று அல்லது இரண்டு கட்சிகளை இழுத்தால் கூட, பா.ஜ., சாதித்து விடும். ஆனால், இந்த ஆறு கட்சிகளை தங்கள் வசம் இழுத்தால் கூட காங்., கூட்டணியால் சாதிக்க முடியுமா என்பது சந்தேகமே.

10 பா.ஜ., கூட்டணி, காங்., கூட்டணி, ஆறு கட்சிகள் தரப்பு என மூன்று தரப்பையும் சேராத சிறு கட்சிகளும் ஜனாதிபதி தேர்தல் ஓட்டு போட உள்ளன. இந்த கட்சிகளிடம், ஓட்டு மதிப்பில், 3 சதவீதம் உள்ளது. வழக்கமாக இதுபோன்ற சிறிய கட்சிகள், ஆளும் கட்சிக்கே சாதகமாக ஓட்டு அளிக்கும் என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...