Saturday, April 29, 2017

படமுடியாதினி துயரம்!

By ஜெயபாஸ்கரன்  |   Published on : 29th April 2017 05:43 AM  |
jayabaskaran
தமிழ்நாட்டில் அரசின் மது வணிகத்திற்கு எதிரான சமூகப் போராட்டங்களும், சட்டப் போராட்டங்களும் முன் எப்போதையும் விடக் கூடுதலாக வீரியம் பெற்றுள்ளன. மது வணிகம் தனியார் வசமிருந்தபோது நிகழ்ந்த கேடுகளைக் காட்டிலும் பலநூறு மடங்கு அதிகமான கேடுகள் அரசின் மது வணிகத்தால் நிகழ்வதாலும், இன்னமும் நிகழ்ந்து கொண்டிருப்பதாலும் தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் போராட்டங்கள் நாள்தோறும் வெடித்துக் கொண்டிருக்கின்றன.
மிக அதிக அளவில் பெண்களும், இளைஞர்களும், மாணவ - மாணவிகளுமே அத்தகையப் போராட்டங்களை முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாக அவர்கள் காவல் துறையினரின் கடுமையான அடக்குமுறைகளுக்கும் தாக்குதல்களுக்கும் ஆளாக நேருகிறது.
சமூகத்தின் மற்ற பல பிரச்னைகளுக்காக வீதியில் இறங்கிப் போராடுகின்ற பழக்கமில்லாத தமிழ்நாட்டுப் பெண்கள், அரசின் மது வணிகத்திற்கு எதிராக தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத, மற்றவர்களால் கட்டுப்படுத்தவும் முடியாத சீற்றத்தோடு போராடுகிறார்கள்.
அதற்குக் காரணம், தங்களது குடும்ப ஆண் உறவுகளின் தீவிர மதுப்பழக்கமும் அதன் விளைவாக அவர்கள் அன்றாடம் அனுபவித்து வருகின்ற அவலங்களுமேயாகும்.
திடீர் திடீரென ஆங்காங்கே பெண்களால் நடத்தப்படுகின்ற மதுக்கடை எதிர்ப்புப் போராட்டங்களால் தமிழகக் காவல்துறைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்பாராத பணிச்சுமைகள் கூடிக்கொண்டிருக்கின்றன. திருட்டு, விபத்து, வன்முறைகள், போராட்டங்கள், வழக்குகள் போன்ற தமிழ்நாட்டின் வழக்கமான பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கே போதிய வசதிகளற்றும், காவலர்களின் பற்றாக்குறைகளோடும் தவித்து வருகின்ற தமிழகக் காவல்துறைக்கு தற்போதைய மதுக்கடை எதிர்ப்புப் போராட்டங்கள் மிகக் கூடுதலான சுமைகள் தான் என்பதில் ஐயமில்லை.
ஒரு பக்கம் நாடு தழுவிய அளவில் மதுவினால் ஏற்படக்கூடிய பிரச்னைகளையும், மற்றொரு பக்கம் மதுஎதிர்ப்புப் போராட்டங்களால் ஏற்படக்கூடிய பிரச்னைகளையும் ஏக சக்தியாக இருந்து கையாளவேண்டிய நிலைக்கு நமது காவல்துறை தள்ளப்பட்டிருக்கிறது.
பல ஊர்களில் குடிநீர் கேட்டும், மதுக்கடைகளை எதிர்த்தும் ஒன்றுதிரண்டு போராடுகின்ற பெண்களிடம் சமாதானம் பேசி அப்போதைக்கு பிரச்னையைச் சமாளிப்பதற்கு தமிழக காவல்துறையினர் தங்களைப் பழக்கப்படுத்திக்கொண்டு விட்டனர்.
எது எப்படியிருப்பினும் தமிழக அரசின் மது வணிகத்திற்கு எதிரான இன்றையக் காலக்கட்டதின் போராட்டங்களும், விழிப்புணர்வுப் பரப்புரைகளும் உச்சக்கட்ட வீரியத்தை எட்டியுள்ளன. அதன் காரணமாக தமிழ்நாட்டில் அரசு மதுவணிகம் மெல்ல மெல்ல தன் அந்திமத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இது பெரிதும் வரவேற்கத் தக்கவொரு சமூக மாற்றமாகும்.
தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தின் பல அரசியல் கட்சிகள் மது எதிர்பபில் தங்களையும் இணைத்துக் கொள்வதற்கான மூல காரணியாக இருந்தவர் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு.
மதுவுக்கு எதிரான பல்வேறு வகையான சமூகப் போராட்டங்களோடு சேர்ந்து சட்டப் போராட்டங்களையும் முன்னெடுத்தாக வேண்டிய அவசியம் கருதி, அவர் நிறுவிய வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் சார்பில் அப்பேரவையின் தலைவர் வழக்கறிஞர். கே.பாலு, ஏறக்குறைய 5 ஆண்டுக்காலம் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசின் மதுவணிகத்திற்கு எதிராக வழக்கு நடத்தினார்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மதுபோதையில் வாகனங்களை இயக்குவதன் காரணமாக அதிக அளவில் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்வதை மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து - தேசிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தனது ஆய்வில் கண்டறிந்தது.
அந்த ஆய்வை மேற்கோள் காட்டி தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுவியுள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று 01.12.2011-ஆம் நாள் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தி கடிதம் அனுப்பியது. ஆனால் தமிழக அரசோ தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி தனது மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களிலும் மதுக்கடைகளையும் குடிப்பகங்களையும் அதிக அளவில் நடத்திக் கொண்டிருந்தது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தின் ஆய்வறிக்கையையும் அதன் அறிவுறுத்தலையும் முன்வைத்து பா.ம.க. தரப்பில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகச் செயலாளர், தமிழ்நாடு மதுத்தடுப்பு மற்றும் ஆயத்தீர்வைத் துறைச் செயலாளர், தமிழக காவல்துறைத் தலைவர், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு தனித்தனியே கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டது.
அது எவ்வித பயனையும் தராத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு 31.08.2012-ஆம் நாள் விசாரணைக்கு ஏற்கப்பட்டு பல கட்டங்களில் விரிவான விவாதங்கள் நடந்தன. அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட காரணங்கள் உயர் நீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை.
வழக்கின் அத்தனைக் கூறுகளையும் விரிவாக ஆய்வு செய்து விவாதித்து சென்னை உயர்நீதிமன்றம் 25.02.2013-ஆம் நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கியது. தமிழக அரசு வரும் 31.03.2013-ஆம் நாளுக்குள் தமிழ்நாட்டில் மாநில தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரம் உள்ள மதுக்கடைகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பதே அந்தத் தீர்ப்பாகும்.
அந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்த தமிழக அரசும் டாஸ்மாக் நிறுவனமும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. உச்சநீதிமன்றத்திலும் அவ்வழக்கு பல கட்டங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியே என்று உறுதி செய்து நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளையும் குடிப்பகங்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று 15.12.2016-ஆம் நாள் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்தீர்ப்பைப் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையால் மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் கடந்த 31.03.2017-ஆம் நாள் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பினை மீண்டும் உறுதிசெய்து அன்றைய தினமே நெடுஞ்சாலையோர மதுக்கடைகளையும்,குடிப்பகங்களையும் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
அவகாசம் கேட்டுக் காலம் கடத்தவோ முடியாத நிலையில் தமிழக அரசும் டாஸ்மாக் நிறுவனமும் பணிந்தன.
அதனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் 3,321 மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட்டன. இந்த எண்ணிக்கை தமிழ்நாட்டின் மொத்த கடைகளில் பாதிக்கும் மேல் ஆகும். சாலைகளில் இருந்த கடைகள் மட்டுமல்ல நட்சத்திர விடுதிகளின் குடிப்பகங்கள் உட்பட ஆயிரக்கணக்கான குடிப்பகங்களும் மூடப்பட்டுவிட்டன.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்த மதுக் கடைகளில் பாதிக்கும் மேற்பட்ட கடைகள் இப்போது இல்லை. கும்பகோணம் நகரில் இருந்த 23 மதுக்கடைகளும் மூடப்பட்டு விட்டதால் அந்நகரம் இப்போது உண்மையான கோயில் நகரமாக மாறியுள்ளது.
அதேபோல சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டுவிட்டதால் ஏற்காடு இப்போது உண்மையான சுற்றுலா நகரமாக மாறியுள்ளது. இன்றைய காலக்கட்டத்திற்கு இப்படியொரு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லையெனில் இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அனைத்து வகையிலும் மோசமான பல பின்னடைவுகளைச் சந்தித்திருக்கும்.
இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மொத்தம் 135 வழக்குரைஞர்கள் வாதாடியுள்ளனர். அவ்வளவையும் மீறி ஓர் உண்மையான அறவுணர்வுக்கும், சமூக மேம்பாட்டிற்கும் கொடுக்கப்பட்ட பரிசாகவே இந்தத் தீர்ப்பை வரவேற்க வேண்டியிருக்கிறது.
இப்போது இந்தத் தீர்ப்புக்குப் பிறகு சாலைகளுக்குப் பெயரை மாற்றி அவற்றில் மதுக்கடைகளை பழையபடி திறக்க தமிழக அரசு முடிவெடுத்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு மற்றும் ஆங்காங்கே வெடித்துக் கிளம்புகிற மது எதிர்ப்புப் போராட்டங்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டின் மொத்த மதுக்கடைகளையும் மூடிவிடுவதுதான் சரியாக இருக்கும்.
போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு தமிழக மக்கள்  குறிப்பாக பெண்கள்  மதுவின் தொல்லைகளை அனுபவித்து விட்டார்கள். மதுக்கடைகளை மொத்தமாக மூடும்வரை ஓயக்கூடாது என்கிற விழிப்புணர்வையும் பெற்றுவிட்டார்கள்.
சூழ்நிலையின் தேவைகருதி தமிழ்நாட்டின் மதுக்கடைகளை அரசு உடனடியாக மூடியாக வேண்டும். அப்படியொரு நடவடிக்கைக்காக தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான பெண்கள் தங்களது குழந்தை
களோடு காத்திருக்கிறார்கள்.
கட்டுரையாளர்:
கவிஞர்.


No comments:

Post a Comment

NMC to reduce workload of resident doctors by lowering NEET PG cut-off

NMC to reduce workload of resident doctors by lowering NEET PG cut-off  To utilise the workforce efficiently, pre-clinical and para-clinical...