Thursday, April 27, 2017

முதுகலை மருத்துவ படிப்பில் சேர்க்கை : நீதிபதி உத்தரவுக்கு எதிராக 'அப்பீல்'

பதிவு செய்த நாள்26ஏப்
2017
23:42

சென்னை: முதுகலை மருத்துவப் படிப்புகளில், மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி, மாணவர்களை சேர்க்கும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, 10க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மனுக்களுக்கு விரிவான பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

டாக்டர்கள் அப்பீல் : 'முதுகலை மருத்துவப் படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழான இடங்களில், அரசு பணியில் உள்ள டாக்டர்களை சேர்க்கும் போது, இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி, ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், 10க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். சென்னையைச் சேர்ந்த, டாக்டர் பிரபு தாக்கல் செய்த மனு: அரசு பணியில் இருக்கும் டாக்டர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மதிப்பெண்கள் குறித்து, மருத்துவக் கல்வி தேர்வுக் குழு வெளியிட்டுள்ள விளக்க குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.தேசிய தகுதி நுழைவுத் தேர்வான, 'நீட்' எழுதி, 1,500க்கு, 1,020 மதிப்பெண்கள் பெற்றேன். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, அரசு டாக்டராக இருப்பதால், 'வெயிட்டேஜ்' மதிப்பெண்கள் பெற, எனக்கு உரிமை உள்ளது.

கோவையைச் சேர்ந்த, டாக்டர் ராஜேஷ் வில்சன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை பின்பற்றவும், 'நீட்' தேர்வில் பெற்ற மதிப்பெண்ணில், 30 சதவீதத்தை கூடுதலாக சேர்க்கும்படியும் கோரியிருந்தார்; அதை, நீதிமன்றம் ஏற்றது. உயர் நீதிமன்ற உத்தரவால், நான் பாதிக்கப்பட்டு உள்ளேன். 'நீட்' தேர்வுக்காக, தேசிய தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தகவ லில், 'அரசு பணியில் இருக்கும் டாக்டர்களை, முதுகலை மருத்துவப் படிப்புகளில் சேர்ப்பதற்கு, மாநில அரசுகள் விதிமுறைகளை வகுத்துக் கொள்ளலாம்' என, கூறப்பட்டு உள்ளது. இதை, உயர் நீதிமன்ற தனி நீதிபதி பரிசீலிக்கவில்லை. எனவே, மாநில அரசுகள் கொண்டு வந்த விதிமுறைகள், மாணவர் கள் சேர்க்கைக்கு பொருத்த மானவை. மருத்துவக் கல்விக்கான தேர்வுக் குழு வெளியிட்ட விளக்க குறிப்பின்படி, அரசு பணியில் உள்ள டாக்டர்கள், 'நீட்' தேர்வு எழுதினோம். 'நீட்' தேர்வில், நான், 1,020 மதிப்பெண்கள் பெற்றும், அரசு பணியில் இருந்ததற்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் பெறும் உரிமையை இழக்கிறேன். எனவே, உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை, அந்தஉத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசுக்கு அதிகாரம் : இம்மனுக்கள், நீதிபதிகள், எச்.ஜி.ரமேஷ், டீக்காராமன் அடங்கிய,'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள், பி.வில்சன், கே.எம்.விஜயன் உள்ளிட்டோரும், மருத்துவ கவுன்சில் சார்பில், வழக்கறிஞர், வி.பி.ராமன், அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி ஆகியோரும் ஆஜராகினர். மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதாடும் போது, ''முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு, நீட் தேர்வு மதிப்பெண்களையும், மாநில அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கை மற்றும் வழிமுறைகளையும் பின்பற்றி, மாணவர்கள் சேர்க்கையை நடத்த, அரசுக்கு அதிகாரம் உள்ளது,'' என்றார்.
இதையடுத்து, மனுக்களுக்கு விரிவான பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு, டிவிஷன் பெஞ்ச் தள்ளி வைத்து உள்ளது.

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...