Friday, August 11, 2017

எம்பிபிஎஸ்: 85% உள் ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது- உச்ச நீதிமன்றம்

By DIN  |   Published on : 11th August 2017 12:47 PM  |
SC

புது தில்லி: மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நீட் தேர்வு என்பது நாடு முழுவதும் பொதுவான ஒன்று. அப்படி இருக்கையில் மருத்துவ சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசாணை கொண்டு வந்தது ஏன்? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், பிற மாநிலங்கள் கொண்டு வராதபோது தமிழகம் மட்டும் ஏன் கொண்டு வந்தது? மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு என்பது செல்லாது. தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என்றும் உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களின் நலன் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்று தமிழக அரசின் வழக்குரைஞர் விளக்கம் அளித்தார்.
எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து தஞ்சாவூரைச் சேர்ந்த சி.பி.எஸ்.இ மாணவர் தர்ணீஷ் குமார் சார்பில் அவரது தாயார் சி.கயல்விழி உள்பட 10-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திர பாபு, ஜூன் 22-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ததோடு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் புதிய தகுதிப் பட்டியல் வெளியிட்டு, அதன்படி கலந்தாய்வை நடத்த வேண்டும் என ஜூலை 14-ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள்ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.
தமிழக அரசின் மனுவில், தமிழகத்தில் உள்ள 6,877 பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் 95 சதவீத மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் கடமை, பொறுப்பு அரசுக்கு உள்ளது என்பதை தனி நீதிபதி கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.
அதே போன்று, நீட் தேர்வு வினாக்களை மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தயாரித்துள்ளது. தேர்வில் 50 சதவீத கேள்விகள் மட்டுமே மாநிலப் பாடத்தில் இருந்து கேட்கப்பட்டன.
இது, மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை விட சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
எனவே, வேறுபட்ட கல்வி வாரியங்களில் பயின்ற மாணவர்களிடையேயான வித்தியாசத்தை சீர் செய்ய, ஒதுக்கீடு வழங்குவதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை. மேற்குறிப்பிட்ட காரணங்களால் மாநில பாடத்திட்டம், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை சமமாகக் கருத முடியாது. எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டது.
மேல் முறையீட்டு மனு தள்ளுபடி: இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் நூட்டி ராம் மோகனராவ், எம்.தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர், இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு: நிகழாண்டு (2017 - 18) எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையை ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவாக எடுக்க வேண்டும். இதற்கு மேல் மாணவர்கள் சேர்க்கையை தாமதப்படுத்தக்கூடாது. தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக் கொள்வதற்கான போதிய முகாந்திரங்கள் இல்லை. ஆகையால், அரசின் மேல் முறையீட்டு மனு உள்ளிட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்.
மேலும் , இந்த வழக்கைப் பார்க்கும்போது தமிழகம் முழுவதிலும் சமமற்ற நிலை மற்றும் பல இடங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லை என்று தெரிகிறது. அதேபோன்று, தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பள்ளிகள் போதியளவில் இல்லை.
அந்த வசதி இருக்கும் பள்ளிகளில், அதற்கான தரம் மற்றும் வசதிகள் மேம்படுத்தப்படாமலோ அல்லது கண்காணிக்கப்படாமலோ இருக்கிறது. மாணவர்களை வேறுபடுத்திப் பார்க்கும் அரசின் கொள்கையானது இயற்கைக்கு முரணானது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகள்தான் உயர்கல்விக்கான நுழைவுவாயிலாக உள்ளது. ஆகையால், மாணவர்களின் அறிவு மற்றும் திறமையை மேம்படுத்தும் நோக்கில், பாடத் திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை மாற்றி அமைக்க வேண்டும்.
மேலும் தேசிய அளவிலான தரத்தில் குறையாத வகையில், போட்டித் தேர்வில் பங்கேற்கும் வகையில் மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில் 3 முதல் 5 ஆண்டு இடைவேளையில் அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப பாடத்திட்டத்தை மேம்படுத்தி மாற்றியமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. எனினும், தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றமும் மறுத்துவிட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024