Wednesday, August 30, 2017

வீட்டிலேயே பரிசோதனைகள் செய்துகொள்ளலாமா?

2017-08-24@ 12:39:40




நன்றி குங்குமம் டாக்டர்

டாக்டர் எனக்கொரு டவுட்டு

வீட்டில் இருந்தபடியே முதியவர்கள் சுவாசக் கோளாறை சரி செய்யும் கருவி, சுகர் மானிட்டர், பி.பி. பரிசோதனை, இன்சுலின் ஊசி போடுதல் போன்றவற்றைமுதியவர்கள் வீட்டிலேயே செய்யலாமா? அதனால் ஆபத்து ஏதேனும் உண்டா?சந்தேகத்துக்கு விளக்கம் அளிக்கிறார் பொதுநல மருத்துவர் சிவராம் கண்ணன்.

‘‘இன்றைய வாழ்க்கை முறையில், முதியவர்கள் பெரும்பாலான நேரங்களில் வீட்டில் தனியாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களைக் கவனித்து கொள்ளக்கூட யாரும் இருப்பது இல்லை. முக்கியமாக, வயதானவர்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் வகையில் என்ன மாதிரியான பிரச்னைகள் ஏற்படும் என்பதை நன்றாக தெரிந்தவர்கள் அவர்களுடன் இருப்பது மிகவும் குறைவு.

இந்த நிலையில், வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள் அடிப்படை மருத்துவ பரிசோதனைகளான ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகிய பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லதுதான். ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்கள் செயற்கை சுவாச கருவியை உபயோகிக்கலாம். அதேபோன்று நீரிழிவு நோயாளிகள் சுகர் மானிட்டர் மூலம் குளுக்கோஸ் அளவை பரிசோதித்துக் கொள்வதும், தாங்களாகவே இன்சுலின் ஊசி போட்டு கொள்வதும் பாதுகாப்பானதுதான். ஆபத்து ஒன்றும் இல்லை.

சிகிச்சைக்காக வரும் முதியவர்களுக்கு யாருடைய உதவியும் இல்லாமல், தாங்களாகவே இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவும், சுகர் மற்றும் பி,பி. பரிசோதனை செய்வதையும், செயற்கை சுவாச கருவி உபயோகப்படுத்துதலையும் பாதுகாப்பானது என்றே அறிவுறுத்துகிறோம். அது மட்டுமல்லாமல் இன்சுலின் போன்ற மருத்துவ உபகரணங்களை பாதுகாப்பாக உபயோகிக்கும் முறையையும் சொல்லிக் கொடுத்து அனுப்புகிறோம்.

எனவே, முதியவர்கள் வீட்டிலேயே சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது. குழப்பம் எதுவும் வேண்டியது இல்லை. அதே நேரத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ ஆலோசனை பெறுவதும், மருத்துவருடன் தொடர்பில் இருப்பதும் இதில் முக்கியமானது என்பதை முதியவர்கள் மறக்க வேண்டாம்.’’

- விஜயகுமார்

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024