Wednesday, August 30, 2017

ஓணம் பண்டிகைக்காக தித்திக்கும் மலையாள வெல்லம்: திருவில்லிபுத்தூரில் தயாரிப்பு

2017-08-29@ 21:28:56




திருவில்லிபுத்தூர்: ஓணம் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு திருவில்லிபுத்தூரில் ‘மலையாள வெல்லம்’ தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவில்லிபுத்தூரை பொறுத்தவரை விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. விவசாயிகள் கடன் வாங்கியாவது விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திருவில்லிபுத்தூர் விவசாயிகள் தங்களது நிலங்களில் அதிகளவு கரும்பு பயிரிட்டு வருகின்றனர். அறுவடை செய்த கரும்பு, ஆலைகளில் அரைக்கப்பட்டு வெல்லமாக தயாரித்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

அந்த வகையில் திருவில்லிபுத்தூரில் கூம்பு வடிவிலான வெல்லம், உருண்டை வடிவிலான வெல்லம் என இரண்டு வகையான வெல்லம் தயாரிக்கப்படுகிறது. கூம்பு வடிவிலான வெல்லம் நாட்டு வெல்லம் என்றும், உருண்டை வெல்லம் உருட்டு வெல்லம் என்றும் அழைக்கப்படுகிறது. உருட்டுவெல்லத்தை மலையாள மக்கள் விரும்பி பயன்படுத்துவதால் இதனை ‘மலையாள வெல்லம்’ எனவும் அழைப்பதுண்டு. திருவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும் மலையாள வெல்லம் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.
ஓணம் பண்டிகையை கேரள மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவர்.

ஓணத்தின் போது வீடுகளில் பல்வேறு வகையான இனிப்பு வகைகளை செய்து அசத்துவர். இனிப்பு பலகாரத்தில் திருவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும் வெல்லம் முக்கிய இடம்பிடிக்கும். ஓணம் பண்டிக்கை நெருங்குவதால் திருவில்லிபுத்தூரில் மலையாள வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தயாரிக்கும் வெல்லத்தை நேரடியாகவும், வியாபாரிகள் மூலம் கேரளாவிற்கு விவசாயிகள் அனுப்பி வருகின்றனர்.

பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, ஈரோடு போன்ற பகுதிகளிலிருந்து வெல்லம் தயாரிக்கும் தொழிலாளர்கள் அதிகமாக வரவழைக்கப்பட்டு மலையாள வெல்லம் தயாரிக்கும் பணி இரவு-பகலாக நடந்து வருகிறது. இதுகுறித்து மலையாள வெல்லம் ஆலை உரிமையாளர் ஒருவரிடம் கேட்டபோது, ‘இங்கு தயாரிக்கப்படும் வெல்லம் சுவையானவை. ஓணம் பண்டிகை நெருங்குவதால் வெல்லத்தின் தேவை அதிகமாக இருக்கும். எனவே வெளியூர்களில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்து தயாரிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளோம்’ என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024