Thursday, August 31, 2017

“மாணவிகள் சுகாதார தூதர்களாக செயல்பட வேண்டும்” கலெக்டர் ரோகிணி அறிவுரை


“டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவிகள் சுகாதார தூதர்களாக செயல்பட வேண்டும்“ என்று கலெக்டர் ரோகிணி அறிவுரை வழங்கினார்.

ஆகஸ்ட் 30, 2017, 04:30 AM
சேலம்,

சேலம் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வந்தாலும், 15-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். தற்போது சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள நர்சிங் விடுதி மாணவிகளுக்கும் சமீபத்தில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு குணப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் கலெக்டர் ரோகிணி ரா.பாஜிபாகரே சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு ஆகிய பகுதிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் அவர்கள் உடன் வந்திருந்தவர்களிடம் மருத்துவமனையில் சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார். மேலும், அந்த குழந்தைகளின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

அங்கு ஒரே படுக்கையில் 2 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். அதைத்தொடர்ந்து பணியில் இருந்த டாக்டர் மற்றும் நர்சுகளிடம் காய்ச்சலுக்கான சிகிச்சை பெற்றுவரும் 2 குழந்தைகளை எக்காரணம் கொண்டும் ஒரே படுக்கையில் வைத்து சிகிச்சை அளிக்க கூடாது என அறிவுறுத்தினார்.

இதையடுத்து கலெக்டர் ரோகிணி மருத்துவமனை வளாகத்தில் உள்ள செவிலியர் விடுதி பகுதிக்கு சென்று சுகாதாரம் முறையாக பராமரிக்கப்படுகின்றதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார். அதிக அளவில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்க்கவரும் நபர்கள் டீ கப்புகள், சிரட்டைகளை ஆங்காங்கே வீசி எறிந்து சென்றுள்ளதை கண்டார்.

உடனே கலெக்டர் ரோகிணி அவற்றை கையில் எடுத்து அப்புறப்படுத்தினார். அப்போது அங்கிருந்தவர்களிடம் இதுபோன்ற பொருட்களை ஆங்காங்கே வீசக்கூடாது என அறிவுறுத்தினார். மேலும் வளாகத்தை சுகாதாரமாக வைத்திருக்க கலெக்டர் ரோகிணி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அத்துடன், குப்பைகளால் நோய்தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதையும் சுட்டிக்காட்டி தொடர்ச்சியாக கூடுதல் பணியாளர்களை கொண்டு மருத்துவமனை வளாகத்தை தூய்மை படுத்தும் பணியினை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து சேலம் அரசு கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் மாணவிகள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி தூய்மையான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பள்ளியில் பயின்று வரும் மாணவிகளிடம் டெங்கு குறித்து ஒவ்வொருவரும் தங்கள் பெற்றோரிடம் எடுத்து கூறி சேலம் மாவட்டத்தை காய்ச்சல் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு ஒவ்வொரு மாணவியும் சுகாதார தூதர்களாக செயல்பட வேண்டும் என்றார்.

இந்த ஆய்வின்போது அரசு ஆஸ்பத்திரி டீன் கனகராஜ், துணை இயக்குனர் (சுகாதாரம்) பூங்கொடி மற்றும் டாக்டர்கள் உடன் சென்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024