Wednesday, August 30, 2017

சொந்த ஊருக்கு உடல்கள் வர 10 நாட்களாகும் : லண்டனில் சாலை விபத்தில் மூவர் இறந்த விவகாரம்


பதிவு செய்த நாள்29ஆக
2017
22:43


காஞ்சிபுரம்: லண்டனில் விபத்துக்குள்ளாகி இறந்த, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூவரின் உடல்களை கொண்டு வர, பத்து நாட்களாகும் என, தெரிய வந்துள்ளது. விரைந்து அவர்களின் உடல்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள மண்டப தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 63. இவரது மகன் மனோரஞ்சன், 35, தன் மனைவி சங்கீதாவுடன், 30, சென்னையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில், 'விப்ரோ' எனும் இந்திய நிறுவனத்தில் ஓர் ஆண்டு ஒப்பந்த பணிக்காக, மனைவி சங்கீதாவுடன் கடந்த ஜனவரி மாதம் மனோரஞ்சன் லண்டன் சென்றுள்ளார்.
லண்டனை சுற்றிப்பார்க்க தன் தந்தை பன்னீர்செல்வம், தாய் வள்ளி, அத்தை தமிழ்மணி, மாமா அறச்செல்வம் ஆகியோரை மனோரஞ்சன் அழைத்துள்ளார்.
அதன் படி, 18ம் தேதி நான்கு பேரும் லண்டன் சென்றுள்ளனர்.
மனோரஞ்சனின் அத்தை தமிழ்மணி, மாமா அறச்செல்வம் ஆகியோர் டில்லியில் வசித்துள்ளனர். லண்டன் சென்ற நான்கு பேரும், அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்து வந்தனர்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை, 3:00 மணிக்கு, வெம்பிளே என்ற இடத்திற்கு மினி பஸ் ஒன்றில் பயணம் செய்த போது, இரண்டு கன்டெய்னர் லாரிகள் இவர்கள் சென்ற மினி பஸ் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில், மினி பஸ்சில் இருந்த பன்னீர்செல்வம், அவரது தங்கை தமிழ்மணி, 50, தங்கையின் கணவர் அறச்செல்வம், 58, ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

அதே மினிபஸ்சில் இருந்த, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த மேலும் நான்கு பேரும், மினி பஸ்சை ஓட்டிய, கேரளாவைச் சேர்ந்த, பென்னி என்பவரும் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில், மனோரஞ்சன், அவரது மனைவி சங்கீதா, பன்னீர்செல்வத்தின் மனைவி வள்ளி ஆகியோர் படுகாயமடைந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்களின் உடல்களை காஞ்சிபுரத்திற்கு கொண்டு வர, பன்னீர்செல்வத்தின் சகோதரர், சண்முகசுந்தரம், நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அதை தொடர்ந்து, உடல்களை கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை அருகே திருமழிசையில் வசித்து வரும் பன்னீர்செல்வத்தின் மருமகன் சங்கரன், லண்டன் செல்ல, 'விசா' கிடைத்திருக்கிறது. உறவினர்களின் உடலையும், காயமடைந்த அனைவரையும் அழைத்து வர இன்று அவர் லண்டன் புறப்படுகிறார்.
அதுபோல, டில்லியில் வசிக்கும் தமிழ்மணியின் மகன் அருண் என்பவர், 'விசா' கேட்டு விண்ணப்பித்துள்ளார். 

லண்டனில் பணியாற்றி வரும் மனோரஞ்சனின் மனைவி சங்கீதாவின் சொந்த ஊர் குடியாத்தம். இந்த ஊரிலிலிருந்து, சங்கீதாவின் சகோதரர்களான வெங்கடசுப்ரமணியம் மற்றும் வெங்கட நாராயணமூர்த்தி ஆகியோரும் லண்டன் செல்ல, 'விசா' கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
விசா கேட்டுள்ள உறவினர்கள், லண்டன் சென்று, இறந்தவர்களின் உடலையும், காயமடைந்த உறவினர்களையும் பாதுகாப்பாக அழைத்துவர இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டன் சென்று உறவினர்களை மீட்டு, உடல்களை கொண்டு வர, ௧௦ நாட்கள் ஆகும் என்கின்றனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு அளிப்பதால், ஒரு வாரத்திற்குள் உடல்களை கொண்டு வரலாம் என, எதிர்பார்க்கிறோம். யாரும் எதிர்பாராத நிலையில் நடைபெற்ற இந்த விபத்து வேதனையளிக்கிறது.

சண்முகசுந்தரம், பன்னீர்செல்வத்தின் சகோதரர், காஞ்சிபுரம்

No comments:

Post a Comment

NEWS TODAY 24.11.2024