Thursday, August 31, 2017

மும்பையில் கனமழைக்கு 8 பேர் பலி வெள்ளம் வடிந்ததால் இயல்பு நிலை திரும்புகிறது


மும்பையில் பெய்த கன மழைக்கு 8 பேர் பலியானார்கள். தற்போது வெள்ளம் வடிந்ததால் இயல்பு நிலை திரும்புகிறது.

ஆகஸ்ட் 31, 2017, 05:00 AM
மும்பை,

மும்பையில் நேற்று முன்தினம் வரலாறு காணாத அளவிற்கு பலத்த மழை கொட்டியது. நேற்று முன்தினம் காலை முதல் நேற்று நள்ளிரவு 12 மணி வரையிலான நேரத்தில் மும்பையில் 316 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

இதனால் நகரில் உள்ள எல்லா சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கின. தண்டவாளங்கள் மழைநீரில் மறைந்தன. எனவே ரெயில், சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பொதுமக்கள் எங்கும் செல்ல முடியாமல் அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கி இருந்தனர். ரெயில், பஸ்களில் நடுவழியில் சிக்கிய மக்கள் சுமார் 12 மணி நேரங்களுக்கு மேல் அதிலேயே இருக்க வேண்டிய அவலமும் அரங்கேறின.

8 பேர் சாவு

மும்பையில் பெய்த வரலாறு காணாத மழைக்கு தானே, பால்கர் உள்ளிட்ட இடங்களில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டும், மரம் முறிந்து விழுந்தும் மொத்தம் 8 பேர் வரை பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. டாக்டர் உள்பட 13 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை மீட்பு படையினர் தேடி வருகிறார்கள்.

சாலைகள், தண்டவாளங்களில் தேங்கிய வெள்ளநீரை வடிய வைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சியினர் நேற்று முன்தினம் விடிய விடிய மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

எனினும் நேற்று அதிகாலை 2 மணிக்கு பிறகே கிழக்கு மற்றும் மேற்கு விரைவு நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து ஓரளவு சீராக தொடங்கியது. எனினும் நேற்று காலை வரை மின்சார ரெயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. எனவே இதை சமாளிக்க சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இயல்பு நிலைக்கு திரும்புகிறது

வெள்ளம் வடிந்து வருவதால் மத்திய ரெயில்வேயில் ரெயில் போக்குவரத்து நேற்று மதியத்திற்கு பிறகே தொடங்கியது. மேற்கு ரெயில்வேயில் காலை முதலே ரெயில் சேவை தொடங்கியது. பஸ், ரெயில் போக்குவரத்து தொடங்கியதை அடுத்து நேற்று மும்பையில் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்ப தொடங்கியது.

இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். எனினும் வானிலை ஆய்வு மையம் மீண்டும் பலத்த மழை பெய்யும் என அறிவித்து இருந்ததால் நேற்று பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை.

பள்ளி, கல்லூரிகள் தவிர பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல அரசு அலுவலகங்களும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடியே காணப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 24.11.2024