Wednesday, August 30, 2017

கனமழையால் மிதக்குது மும்பை : முடங்கியது இயல்பு வாழ்க்கை
பதிவு செய்த நாள்29ஆக
2017
20:49



மும்பை: நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை, இரண்டு நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மிதக்கிறது. மேலும், மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது, மும்பை நகர மக்களுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநிலம் முழுவதும், சமீபகாலமாக மழை பெய்து வருகிறது.

தலைநகர் மும்பையில், கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் துவங்கிய மழை, நேற்று காலை வரை, விடிய விடிய பெய்தது. இதனால், மும்பையின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடந்த, 34 மணி நேரத்தில், சத்திரபதி சிவாஜி ரயில் நிலைய பகுதிகளில், 268 மி.மீ. மழையும், கலாபாவில், 218 மி.மீ., மழையும் பதிவானது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல சாலைகளில், வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மும்பையின் முக்கிய போக்குவரத்தான மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது; பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
கடந்த, 2005ல் மும்பையில் பெய்த கனமழைக்கு இணையான அளவு, தற்போது மழை பெய்து வருவதாக, மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகளுக்காக, தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், மேலும், மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என, வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்தும், மும்பையின் பெரும்பாலான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியிருப்பதாலும், அவசியமிருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரும்படி, மாநில அரசும், மும்பை மாநகராட்சி யும் எச்சரித்துள்ளது. நிலைமைக்கு ஏற்ப விடுமுறை விடும்படி, நிறுவனங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மறக்க முடியாத 2005 : கடந்த, 2005, ஜூலை, 27ல், மும்பையில், 944 மி.மீ., மழை பெய்தது; இதுவே நாட்டில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழை. அதற்கு முன், 1910, ஜூலை, 12ல், மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியில், 838 மி.மீ., மழை பதிவானதே சாதனையாக இருந்தது.

மும்பையில், தொடர்ந்து பெய்த மழையில், 108 பேர் உயிரிழந்தனர். அதில், 25 பேர், காரில் இருந்தபோது, வெள்ளத்தில் மூழ்கி இறந்தனர். மும்பைக்கு மிகப் பெரிய பாதிப்பை, 2005ல் பெய்த கனமழை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

NEWS TODAY 24.11.2024