Wednesday, August 30, 2017


மருந்து வாங்க பணமின்றி எஸ்.ஐ., தவிப்பு

பதிவு செய்த நாள்29ஆக
2017
23:01




சேலம்: உடல் நிலை பாதிப்பால், மருத்துவமனையில் சிகிச்சை பெறும், எஸ்.எஸ்.ஐ., மருந்து வாங்க கூட பணமின்றி, தவிக்கிறார். சேலம், தளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் நல்லதம்பி, 57. ஓமலுார் சப் டிவிஷனில், சிறப்பு ரோந்து வாகனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி பூங்கொடி, 43. இவர்களுக்கு, 23 - 27 வயதில் மூன்று மகள்கள். ஒரு மகன். மூத்த பெண் திருமணமாகி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பெற்றோருடன் வசிக்கிறார். இரண்டாவது பெண், தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார். இவருக்கு, செப்., 12ல் திருமணம் நடக்க உள்ளது.

மகளின் திருமண செலவு : ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, 2012ல் பணி காரணமாக மதுரை சென்றார். அங்கு பணியின்போது, மயங்கி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது.

முதலுதவி சிகிச்சைக்கு பின், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, ஒரு மாதம் சிகிச்சை பெற்றார். கடந்த ஜூலை, 30ல், ரத்த அழுத்தம் அதிகரித்து மயங்கி விழுந்தார்.சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ஆப்பரேஷன் முடித்தும், நினைவு திரும்ப வில்லை.

இரண்டாவது மகள் திருமணத்துக்கு வைத்திருந்த, பணத்தை மருத்துவமனையில் செலவு செய்துள்ளனர். தற்போது, மருந்து வாங்க கூட, உறவினரின் உதவியை நாட வேண்டிய நிலை உள்ளது.

இன்சூரன்ஸ் பலனில்லை : இதுகுறித்து, நேற்று முன்தினம் இரவு, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை, ஓமலுார் போலீசார் நல்லதம்பியை சந்தித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். ஆனால், அரசு, மாவட்ட போலீஸ் சார்பில் உதவுவது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. இதனால், அவருக்கு உதவ நினைப்பவர்கள், 94981 68093 என்ற எண்ணில் அழைக்கலாம்.

இதுகுறித்து, கண்ணீர் மல்க அவரது மனைவி பூங்கொடி கூறியதாவது: போலீசில், 35 ஆண்டுகளுக்கு மேலாக, கணவர் நேர்மையாக பணிபுரிகிறார். ஆறு ஆண்டுகளாக, எங்கள் சம்பளத்தில் பெரும் தொகை, மருத்துவ செலவுக்கே போய்விட்டது. போலீசில், கணவருக்கு வழங்கிய ஸ்டார் நியூ ெஹல்த் இன்சூரன்ஸ் கார்டு, எந்த விதத்திலும் பயன்தரவில்லை. முதல்வரும், போலீஸ் உயர் அதிகாரிகளும், என் கணவரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் பழனிசாமியின் மாவட்டமான சேலத்தில், அவரது கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையில் பணிபுரிந்தவரின் குடும்பம், சிக்கலான நிலையில் உள்ளதால், முதல்வர் உதவ வேண்டும் என, மாவட்ட போலீசார் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024