Wednesday, August 30, 2017

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு : 50 லட்சம் பேருக்கு தாமதம்

பதிவு செய்த நாள்29ஆக
2017
21:12




ரேஷன் ஊழியர்கள் அலட்சியத்தால், 50 லட்சம், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்குவது தாமதமாகி வருகிறது. தமிழகத்தில், 1.92 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. மத்திய அரசின், 'ஆதார்' எண் விபர அடிப்படையில், ஸ்மார்ட் கார்டு வழங்க, அரசு முடிவு செய்தது. 

அதன்படி, ஏப்ரல் முதல், காகித ரேஷன் கார்டுக்கு பதில், ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று வரை, 1.42 கோடி குடும்பங்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மக்களிடம் வாங்கிய ஆதார் விபரங்களில், புகைப்படம் தெளிவாக இல்லாததுடன், பிழைகளும் இருந்தன. அந்த கார்டுகளின் விபரம், ரேஷன் கடைகளில் உள்ளது. 

கடை ஊழியர்கள், அந்த கார்டுதாரர்களை அழைத்து, சரியான விபரங்களை பெறுமாறு, உணவு துறை அதிகாரிகள் கூறினர். ஆனால், பல ஊழியர்கள், அந்த பணியை செய்யவில்லை. 

இதனால், 50 லட்சம் பேருக்கு, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைத்து விபரங்களையும் சரியாக வழங்கி விட்டதால், கார்டு வந்து விடும் என, யாரும் காத்திருக்க வேண்டாம். ஸ்மார்ட் கார்டு கிடைக்காதவர்கள், தாங்கள் பொருட்கள் வாங்கும் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும்; அங்கு, பிழை திருத்த பட்டியலில், தங்களின் பெயர் இருக்கிறதா என்பதை பார்த்து, சரியான விபரங்களை வழங்க வேண்டும். அங்கு பெயர் இல்லை என்றால், கடை ஊழியரிடம் முகவரி கேட்டு, உணவு வழங்கல் உதவி ஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும். அங்கு, தன் கார்டின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். சரியான பதில் கிடைக்கவில்லை எனில், சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள உணவு வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024