Thursday, August 31, 2017

நோயால் இறந்த ஆடுகளின் இறைச்சி: 'ஆந்த்ராக்ஸ்' தாக்கும் அபாயம்
பதிவு செய்த நாள்31ஆக
2017
00:19

விருதுநகர்: நோயால் பாதிக்கப்பட்டு இறந்த ஆட்டு இறைச்சியை சாப்பிடுவதால், 'ஆந்த்ராக்ஸ்' நோய் தாக்கும் அபாயம் உள்ளது. செப்டம்பரில் ஆடுகளை பொதுவாக அடைப்பான் எனும் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கும். இந்நோயால் இறந்த ஆட்டின் உடலில் இருந்து வெளியேறும் ரத்தம் உறையாமல் இருக்கும். இந்த ரத்தத்தில் ஆந்த்ராக்ஸ் கிருமி இருக்கும். காயம் ஏற்பட்ட மனிதர் களின் காயப்பகுதியில் உறையாத ரத்தம் தெரித்தால், அவர்களையும் கிருமி தாக்கும். மேலும், இந்நோயால் இறந்த ஆட்டுஇறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு ஆந்த்ராக்ஸ் பாதிப்பு அதிகம்.
விருதுநகர் உட்பட சில மாவட்டங்களில் ஆடு வதைக்கூடம் செயல்படாமல் உள்ளன. பாதுகாப்பு, மருத்துவ சோதனை, கண்காணிப்பு போன்றவை இல்லாமல் நினைத்த இடத்தில் ஆடுகளை வெட்டி, இறைச்சி விற்பனை நடக்கிறது. இதில், நோயால் இறந்த ஆடுகளை விற்கும் அபாயம் இருப்பதால் அசைவ பிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கால்நடைத் துறை மண்டல இணை இயக்குனர் ஜெகதீசன் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், வத்திராயிருப்பு பகுதி யில் மட்டும் கடந்த ஆண்டு செப்டம்பரில் அடைப்பான் நோய் பாதிப்பு இருந்தது. அதற்கான ஊசிகள் போடப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. இந்தாண்டு இப்பாதிப்பு ஏற்படாமல் இருக்க, இரு மாதம் முன்னரே தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது.அடைப்பான் நோய் தாக்கப்பட்ட ஆடுகளுக்கு காய்ச்சல் ஏற்படும். கழுத்தில் கட்டி இருக்கும். மூக்கு, ஆசன வாயில் ரத்தம் வெளியேறும். இந்த ரத்தம் உறையாமலும் இருக்கும். இது போன்ற அறிகுறிகள் இருந்து, இறந்த ஆடுகளின் உடலை கால்நடை டாக்டர்கள் ஆலோசனைப்படி புதைக்க வேண்டும். இதுபோன்ற நோய் தாக்கி இறந்த ஆட்டின் இறைச்சியை சாப்பிட்டால், மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024