Tuesday, August 29, 2017

'விவேகம்' விமர்சன சர்ச்சை: பாடகர் ஸ்ரீனிவாஸின் ஃபேஸ்புக் பதிவால் மீண்டும் சர்ச்சை

Updated : 28 Aug 2017 20:46 IST

ஸ்கிரீனன்

‘விவேகம்’ படத்தில் அஜித் மற்றும் ஸ்ரீனிவாஸ் | கோப்புப் படம்
'விவேகம்' விமர்சன சர்ச்சை குறித்த பாடகர் ஸ்ரீனிவாஸின் ஃபேஸ்புக் பதிவால் மீண்டும் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியானது. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. இதில் மாறன் என்பவரது விமர்சனம் திரையுலகினர் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.
மாறனின் விமர்சனத்துக்கு திரையுலகினர் பலரும் சமூக வலைதளத்தில் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். இந்த சர்ச்சைக் குறித்து பாடகர் ஸ்ரீனிவாஸ் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் புதிய விளக்கமொன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தைப் பற்றிய ஒருவரது விமர்சனத்தின் மீது திரைத்துறைக்குள்ளேயே ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன, எந்த ஒரு திரைப்படத்தையும் யாரும் விமர்சனம் செய்வதற்கு அடிப்படை உரிமை உள்ளது. இன்றைய உலகில் இத்தகைய போக்குகளை நிறுத்த முடியாது.
பொதுமக்களை துப்பாக்கி முனையில் நிறுத்தி நீங்கள் கொடுக்கும் குப்பைகளை பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. பொதுமக்களையும் விமர்சிப்போரையும் மதிக்க வேண்டும். இன்று எவர் வேண்டுமானாலும் ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்யலாம். இந்த உண்மைக்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும்.
எனவே தான் அவருடைய திரைவிமர்சனங்கள் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது, அந்த விமர்சனங்களில் அவர் எவ்வளவு பாரபட்சமின்றி செயல்படுகிறார் என்பது என்னை உண்மையிலேயே கவர்ந்தது. அவர் சில படங்களை குப்பை என்று தள்ளிவிடுகிறார்.
எனக்கு அவரது பார்வைகள் மீது முழு ஒப்புதல் உண்டு. அதே போல் சில படங்களுக்கு அவர் காத்திரமாகப் பாராட்டவும் செய்துள்ளார். விக்ரம் வேதா படத்தை அவர் பாராட்டியதன் இணைப்பை நான் பகிர்கிறேன்
இவ்வாறு ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீனிவாஸின் ஃபேஸ்புக் பதிவு அஜித் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. மேலும், சில ரசிகர்கள் அவர் கூறுவது சரியே என்று அதனை ஷேர் செய்தும் வருகிறார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024