Thursday, August 31, 2017

புளுவேல் விளையாட்டுக்கு இன்னொரு பலி: மதுரையில் மாணவர் தற்கொலை
பதிவு செய்த நாள்
ஆக 30,2017 21:48

திருப்பரங்குன்றம், மதுரை விளாச்சேரி மொட்டமலை பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி பேக்கரியில் மாஸ்டராக உள்ளார், இவரது மனைவி டெய்சி ராணி.
இவர்களது மகன் விக்கி,19, தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்தார்.
நேற்று ஜெயமணி வழக்கம் போல் வேலைக்கு சென்று, மாலை 6:30 மணிக்கு வீடு திரும்பினார். 

வீட்டின் உள்ளே வந்த அவர் அறை ஒன்றில் தன் மகன் விக்கி துாக்கில் பிணமாக தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ஆஸ்டின்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார்.அங்கு வந்த போலீசார் விக்கியின் இடது கையில் 'புளூவேல்' என்று
எழுதியிருப்பதை கண்டறிந்தனர்.




இன்றைய இளைஞர்களின் உயிரை வாங்கும் 'புளூவேல்' 'கேம்'மை விக்கி தொடர்ந்து விளையாடியதால், இந்த விபரீதம் ஏற்பட்டது தெரிய வந்தது. தாய் டெய்சியும் வேலைக்கு செல்வதால், வீட்டில் தனியாக இருந்த விக்கி, தாயின் சேலையில் துாக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

ஏற்கனவே சில மாநிலங்களில் இந்த விளையாட்டால் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், மதுரையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது வேதனையான விஷயம். இந்த 'கேம்' குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டால் மட்டும் தான் உயிர் பலியை தடுக்க முடியும்

புளூவேல் - ரெட் அலர்ட்

'ஸ்மார்ட் போன்' குறித்து அதிகம் தெரியாத பெற்றோர்கள் 'புளூவேல்' கேம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இந்த 50 நாள் 'சேலேன்ஜ் கேம்' ஆன்ட்ராய்டு ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படுகிறது. போனில் 'இன்ஸ்டால்' செய்ததும் விளையாடலாம்.

விளையாடும் நபருக்கு ஒவ்வொரு நாளும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். உதாரணமாக 'உன் கையில் பிளேடு வைத்து 3 முறை கிழி, அதை போட்டோ எடுத்து அனுப்பு. அதிகாலை எழுந்து பேய் படம் பார், அதை செல்பி எடுத்து எனக்கு அனுப்பு. 

ரயில்வே டிராக்கில் நில், உயரமான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய். அதை வீடியோ எடுத்து பேஸ்புக், டுவிட்டரில் பதிவேற்று. அப்போது தான் நீ விளையாட்டில் வெற்றி பெறுவாய்,' என்றெல்லாம் கட்டளைகள் வந்து கொண்டே இருக்கும்.

இதை எல்லாம் நான் செய்ய மாட்டேன் என்று சொல்லவும் முடியாது, ஏன் என்றால் இந்த 'கேம்'மை இன்ஸ்டால் செய்ததும், உங்கள் போனில் இருக்கும் எண்கள் உட்பட அனைத்து தகவல்களும் இந்த கேமின் சர்வருக்கு சென்றுவிடும். நீங்கள் கேம் சொல்லும் டாஸ்க்கை செய்யவில்லை என்றால் போனில் உள்ள தகவல்களை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் போனுக்கு அனுப்பப்படும் என்று மிரட்டல் தகவல் வரும். 'கேம்'மில் டாஸ்க் செல்லும் 'மேப்' நீல திமிங்கலம் வடிவத்தில் இருப்பதால், இதற்கு 'புளூவேல்' என்று பெயர் வைத்துள்ளனர்.

ஸ்மார்ட் போன்களை 'ஹேக்' செய்யக் கூடிய நபர்களால் இந்த கேம் இயக்கப்படுவதால் தான், நம் தகவல்கள் திருடப்படுகிறது என்பதை புரிந்து கொண்டு இந்த 'கேம்'மை விளையாடாமல் தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 24.11.2024