Wednesday, August 30, 2017

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை புரட்டியெடுத்தது ஹார்வி புயல் தாக்கி 9 பேர் பரிதாப சாவு: 1.30 கோடி பேர் பாதிப்பு; 30,000 பேர் மீட்பு

2017-08-30@ 01:25:38




ஹூஸ்டன் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹார்வி புயல் தாக்குதலில் 9 பேர் பலியாகினர். 1.30 கோடி பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை ஆகஸ்ட் 26ல் ஹார்வி என்ற பயங்கர புயல் தாக்கியது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்த இந்த புயலால் மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. அத்துடன் தொடர்ந்து கனமழையும் கொட்டுவதால் கோடிக்கணக்கான மக்கள் மிகுந்த இன்னலுக்குள்ளாகி உள்ளனர். வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் மீது மரங்கள் வேருடன் சாய்ந்து பெருத்த சேதத்தை உருவாக்கின. மின்சாரம், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் ஏராளமான பகுதிகள் இருளில் மூழ்கின. சுமார் 50 அங்குல அளவுக்கு பெய்த மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இந்த புயல் மற்றும் வெள்ளத்துக்கு இதுவரை 9 பேர் பலியாகினர். இதில் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க வேனில் புறப்பட்டுச்சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதில் 4 பேர் குழந்தைகள். அமெரிக்காவின் நான்காவது மிகப்பெரிய நகரமான ஹூஸ்டன் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 26ம் தேதி தொடங்கி நேற்று வரை அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தேசிய நெஞ்சாலைகள், வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. அங்கு வசித்த ெபாதுமக்கள் உயரமான அடுக்குமாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஹூஸ்டன் தவிர விக்டோரியா, கார்பஸ் கிறிஸ்டி ஆகிய நகரங்களில் பாதிப்பு அடைந்தன. பலத்த மழை காரணமாக ஆற்று தண்ணீர் நகரத்துக்குள் புகுந்ததால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், புயல் பாதித்த பகுதிகளில் 12 ஆயிரம் தேசிய பாதுகாப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 30 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த பணிகளை மாகாண அதிகாரிகளுடன் இணைந்து அமெரிக்க அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. மழை காரணமாக பள்ளிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

200 இந்திய மாணவர்களுக்கு உதவி

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்த 200 இந்திய மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அமெரிக்கா வாழ் இந்தியர்கள் 200 மாணவர்களுக்கும் உணவு மற்றும் தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். ஷூஸ்டன் இந்திய பிரதிநிதி அனுபம்ராய் மாணவர்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறார். அதே போல் ஏரி வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழத்தில் படித்த இந்திய மாணவர்கள் ஷாலினி, நிகில்பாட்டியா ஆகியோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதில் ஷாலினியின் உடல்நிலை நேற்று சிறிது முன்னேற்றம் கண்டது. ஆனால் நிகில் பாட்டியா அதே நிலையில்தான் உள்ளார்.

டிரம்ப் நேரில் ஆய்வு

ஹார்வி புயல் பாதித்த பகுதிகளை அதிபர் டிரம்ப் நேற்று பார்வையிட்டார். புயல் மற்றும் வெள்ள பாதிப்பை பேரழிவு என பிரகடனம் செய்திருந்த டிரம்ப், அங்கு நிவாரண பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகளை வெகுவாக பாராட்டி னார்.

விமான நிலையங்கள் மூடல்

அமெரிக்காவை தாக்கிய ஹார்வி புயலால் ஹூஸ்டனில் உள்ள விமான நிலையங்கள் மூடப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விமான நிலைய செய்தி தொடர்பாளர் கூறுகையில், புயலால் ஹூஸ்டன் நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இங்குள்ள ஜார்ஜ் புஷ் சர்வதேச விமான நிலையம் மற்றும் வில்லியம் ஹாபி விமான நிலையம் ஆகியவற்றின் விமான ஓடுபாதைகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. வெள்ள நிலைமை சீராகும் வரை இந்த விமான நிலையங்கள் மூடப்படும். அதன் பின்னரே விமான நிலையம் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

* ஹூஸ்டன் நகரில் மட்டும் 5,500 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மேயர் சில்வெஸ்டர் டர்னர் தெரிவித்தார்.
* வெள்ளத்தில் சிக்கி மக்களை மீட்க 16 விமானங்கள் இரவு, பகலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டெக்சாஸ் கவர்னர் கிரேக் அபாட் தெரிவித்தார்.
* மழை நேற்றும் இடைவிடாது கொட்டியது. இந்த வார இறுதியில்தான் மழை நிற்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024