Tuesday, August 29, 2017

ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துறே : தனியார் ஆம்புலன்ஸ்கள் அடாவடி தாங்கலை

பதிவு செய்த நாள்28ஆக
2017
20:46




'ஆளே இல்லாத கடையில், யாருக்கு டீ ஆத்துறே' என்ற சினிமா காமெடி போல், நோயாளிகளே இல்லாமல், அசுர வேகத்தில் பறக்கும், தனியார் ஆம்புலன்ஸ்களின் அடாவடி செயல்கள் அதிகரித்து வருவதாக போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் குவிகின்றன.

தமிழக அரசின் போக்குவரத்து துறையின் கணக்கின் படி தமிழகத்தில், 9,603 ஆம்புலன்ஸ்கள் இயக்கத்தில் உள்ளன. இதில், 108 அவசரகால ஆம்புலன்ஸ்கள், 782, அரசு மருத்துவமனை, தீ அணைப்புத்துறை, போலீஸ் உள்ளிட்ட பிற அரசு துறைகளின் கட்டுப்பாட்டில், 1,210 ஆம்புலன்ஸ்கள் உள்ளன.

சலுகைகள் : உயிர்காக்கும் பணிகளில் ஈடுபடும் ஆம்புலன்ஸ்களுக்கு, பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சாலைகளில் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரிந்தாலும் செல்லலாம், ஒரு வழிப்பாதையில் செல்ல அனுமதி, வாகனங்களை முந்திச் செல்ல தாராள அனுமதி, பிற வாகனங்கள் ஆம்புலன்ஸ்களுக்கு வழி விட வேண்டும் என்பன, உட்பட சாலை விதிகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ்கள், தனியாரின் பராமரிப்பில் உள்ள ஆம்புலன்ஸ்கள், நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு இடையே சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது, சிவப்பு விளக்கை எரிய விடுகின்றனர்.
மேலும், சைரன் சப்தம் கேட்கும் போது, வாகன ஓட்டிகள் யாராக இருந்தாலும், அவற்றுக்கு வழி விட்டுச் செல்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், நோயாளிகள் இல்லாத நிலையில், ஊழியர்களை ஏற்றிச் செல்லும் போதும், மருந்து, மாத்திரைகள், மருத்துவமனைக்கு தேவையான பொருட்களை ஆம்புலன்ஸ்களில் ஏற்றி வரும் போதும், தேவை இல்லாமல், சைரனை ஒலிக்க விட்டு, செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

புகார் : இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, போலீசாரின் உழைப்பும் வீணடிக்கப்படுகிறது. இது குறித்து, போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. 'நோயாளிகள் இல்லாத நேரங்களில், ஆம்புலன்ஸ்களில் சைரன் எழுப்புவதற்கு தடை விதிக்க, மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும்' என, போக்குவரத்து பிரிவு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர்கள் கூறியதாவது: மாநகருக்குள், ஆம்புலன்ஸ் ஒன்று, ஒலி எழுப்பிய படி வரும் போது, போலீஸ் மைக்கில், நாங்களே தகவல் கொடுத்து ஆம்புலன்ஸ்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கிறோம். இதில், சில நேரங்களில், சில சிக்னல்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. ஆம்புலன்சில் உள்ள நோயாளிகளின் உயிருக்கு மதிப்பளித்து, மனிதாபிமான அடிப்படையில், இந்த பணிகளை செய்கிறோம். இதை தனியார் ஆம்புலன்ஸ்கள் தவறாக பயன்படுத்துகின்றன. நோயாளிகள் இல்லாத வாகனங்களை, சோதனை செய்யவும், அவர்கள் நோயாளிகள் இல்லாமல் சைரன் ஒலி எழுப்பி சென்றால், அவற்றை பறிமுதல் செய்யவும், மத்திய, மாநில அரசுகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024