Tuesday, August 29, 2017

அதிமுகவில் உச்சகட்ட மோதல்: குழப்பத்தில் தொண்டர்கள்

Published : 28 Aug 2017 19:00 IST

மு.அப்துல் முத்தலீஃப்

ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைப்புக்குப் பிறகு அதிமுகவில் மோதல் இன்னும் உச்சத்துக்கு சென்றுள்ளதால் கட்சியும் ஆட்சியும் தப்புமா? தங்களுக்கு யார் நிர்வாகி என தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். சாதாரண நிர்வாகிகளும் குழப்பத்தில் உள்ளனர்.
அதிமுக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியை கண்டுள்ளது. 1972-ல் எம்ஜிஆர் அதை உருவாக்கிய போது அபிமானம் மிக்க தொண்டர்களாலும் , நிர்வாகிகளாலும் வழி நடத்தப்பட்டது. எம்ஜிஆர் என்ற சக்தி அனைவரையும் கட்டிப் போட்டிருந்தது.
கட்சிக்குள் ஒரு வித சுதந்திரமும் நெகிழ்வுத்தன்மையும் இருந்தது. ஆனாலும் தலைமைக்கு நிகராக கருத்துக்களை கூறும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களும் இருந்தனர். அதன் பின்னர் எம்ஜிஆர் நோய் வாய்ப்பட்ட போது அதிமுக இரண்டு கோஷ்டிகளாக பிரிந்திருந்தது.
1987-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் இது பகிரங்கமாக வெளிப்பட்டு மூன்றே ஆண்டுகளில் ஆட்சிக் கவிழ்ப்பில் போய் முடிந்தது. ஜானகி, ஜெயலலிதா என இரண்டு அணிகள் பிரிய 1989 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது.
ஜெயலலிதா தலைமையின் கீழ் கட்சி மீண்டும் ஒன்றிணைய கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் ஜெயலலிதா கட்சியை தனக்குக் கீழ் கொண்டு வந்தார். அதன் பின்னர் அதிமுகவில் ஒரே குரல் ஜெயலலிதாவின் குரல் என்றாகிப் போனது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா ஆளுமையின் கீழ் கட்சி வந்தது. மீண்டும் ஒற்றைத்தலைமையின் கீழ் கட்சி செல்கிறது என்கிற நிலையில் ஓபிஎஸ் நீக்கப்பட அவர் தனி அணியானார். அதிமுக 1988-க்குப் பிறகு மீண்டும் ஓபிஎஸ், எடப்பாடி அணி என இரண்டாக ஆனது.
இந்த முறை சசிகலா என்கிற ஒரே தலைமையின் வழிகாட்டுதல் படி எடப்பாடி முதல்வர் ஆனதால் ஆட்சி கவிழவில்லை. ஆனாலும் சசிகலா சிறைக்கு செல்ல பிரிந்திருந்த ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைய முயற்சிக்க தினகரன் விலக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாத தினகரன் பின்னர் வேகம் காட்டத் துவங்கினார். திடீரென ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைந்தன. ஓபிஎஸ் மீண்டும் கட்சிப் பதவி,  துணை முதல்வர் என பதவிக்கு வர, சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு நீக்குவோம் என்ற திடீர் அறிவிப்பால் அதிமுகவில் ஆரம்பமானது பூகம்பம்.
துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் ஏற்கெனவே பலரை நியமித்திருந்தார் தினகரன். தற்போது எழுந்துள்ள சூழ்நிலையில் அடுத்தடுத்த அதிரடியாக இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி, நடவடிக்கைகளில் இறங்க தற்போது மிகப்பெரும் குழப்பத்தில் அதிமுக தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அடுத்தடுத்த நடவடிக்கைகளால் முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடியை தினகரன் நீக்குவார், இனி தினகரன் கைகாட்டுபவர்தான் முதல்வர் என்று தினகரன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். தேர்தல் ஆணையத்தால் சசிகலா அங்கீகரிக்கப்படவில்லை அதனால் அவர் நியமித்த தினகரன் நியமனமும் செல்லாது என்கின்றனர் அதிமுக அணியினர்.
தினகரன் தரப்பில் கிட்டத்தட்ட 75 சதவிகித கட்சி நிர்வாகிகள் மாவட்டச்செயலாளர்கள் நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தினகரனே துணை பொதுச்செயலாளர் இல்லை எனும்போது நீக்கமும் நியமனமும் எப்படி செல்லும் என்று தீர்மானம் நிறைவேற்றி பழைய நிர்வாகிகளே நீடிப்பார்கள் என்று அறிவித்துள்ளனர் அதிமுக அணியினர்.
இதனால் மிகவும் குழம்பிப்போய் நிற்பது தொண்டர்களே என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். ஆளுங்கட்சி என்பதால் பல்வேறு கோரிக்கைகளுடன் வரும் கட்சித்தொண்டர்களும், அடிமட்ட நிர்வாகிகளும் யாரைக் கேட்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
ஆட்சி நிலைக்குமா? கலைக்கப்படுமா? என்பது பற்றி குழப்பத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதை அவர்கள் தினம் தினம் ஒவ்வொரு அணியாக மாறுவதை வைத்து புரிந்துக்கொள்ள முடிகிறது என்கிறார் அரசியல் ஆர்வலர் ஒருவர்.
முதல் நாள் காலை தினகரன் தரப்புக்கு ஆதரவாக பேசும் ஏ.கே.போஸ் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மாலையில் மரியாதைக்காக சந்தித்தேன் என்று பேட்டி அளிக்கின்றார். இவையெல்லாம் அவர்கள் மத்தியில் உள்ள குழப்பத்தையே காட்டுகிறது என்றார்.
இது போன்ற குழப்பத்திற்கு என்னதான் காரணம் என்று அரசியல் விமர்சகர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியது, சசிகலா இருக்கும் வரை அவரை பொதுச் செயலாளராக அங்கீகரித்தது இந்த அணியினர் தான்.
இப்போது தினகரன் பத்தாண்டுக்கு முன்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் அவரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுபவர்கள் அன்று தினகரன் தலைமையை மனமுவந்து ஏற்றுக்கொண்டவர்களே.
இப்படி தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக்கொள்வதால் தான் இப்படிப்பட்ட உச்சகட்ட குழப்பத்தில் அதிமுக உள்ளது என்று தெரிவித்தார். மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ஆளுக்கொரு விதமாக பேட்டி அளிப்பது தொண்டர்களை மேலும் குழப்பத்தில் தான் ஆழ்த்தும் ஆகவே மோதல் முடிவுக்கு வரும் வரை இது தொடரத்தான் செய்யும் என்று கூறினார்.
மறுபுறம் ஒருவரை நீக்கும் போது நீக்கம் செல்லாது என்பவர்கள் அதை எதிர்த்து போராட்டம் நடத்துவதேன், கொடும்பாவி கொளுத்துவதேன். நாடாளுமன்ற உறுப்பினர் குமார் தன்னை நீக்கியவுடன் முதல்வரை நீக்க முடியுமா என்று கேட்க முதல்வரின் மாவட்டச்செயலாளர் பதவியையும் தினகரன் பிடுங்கினார்.
அப்படியானால் இவர்கள் தினகரனை இன்னும் துணை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. இப்படி தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிகொள்வதால் தான் இப்படிப்பட்ட உச்சகட்ட குழப்பத்தில் அதிமுக உள்ளது என்று தெரிவித்தார்.
மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ஆளுக்கொரு விதமாக பேட்டி அளிப்பது தொண்டர்களை மேலும் குழப்பத்தில் தான் ஆழ்த்தும் ஆகவே மோதல் முடிவுக்கு வரும் வரை இது தொடரத்தான் செய்யும் என்று கூறினார்.
இது போன்ற குழப்பங்கள் குறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் ஆவடி குமாரிடம் கேள்வி எழுப்பினோம்.
சசிகலா நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது , அவரால் நியமிக்கப்பட்ட தினகரன் நியமனத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பொதுக்குழுவில் தீர்மானம் போடுகிறீர்கள் , அதே நேரம் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளை தினகரன் நீக்கினால் போராட்டம், ஆர்ப்பாட்டம், தினகரன் கொடும்பாவியை எரிக்கிறீர்களே ஏன்?
அதை நிர்வாகிகள் செய்வதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆங்காங்கே உள்ள தொண்டர்கள், அவருடைய செயலை கண்டிப்பதற்கு உரிமை இருக்கிறது, போராட்டம் நடத்துகிறார்கள். அதற்கு கட்சி வழிகாட்டுதல் காரணம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. எனக்கு ஒரு பாதிப்பு என்றால் என்னைச் சேர்ந்தவர்கள் கோபத்தினால் எதிர்ப்பை வெளிக்காட்டலாம் அல்லவா?
அப்படியானால் தொண்டர்கள் தினகரனை தங்கள் கட்சியின் துணை பொதுச்செயலாளராகத்தான் இன்றும் பார்க்கிறார்கள் என்று கருதலாமா?
நீங்கள் கேட்பது அதிசயமாக உள்ளது. அவர் மன நோயாளி போல் எதையாவது செய்தால் யாராவது தடுத்தாலோ குறை சொன்னாலோ யார் பொறுப்பாக முடியும். அதற்கு தொண்டர்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். இன்று கட்சி உள்ள நிலையில் இன்று அவர் தேவையில்லாத குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறார் என்பதற்காக தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.
அப்படியானால் தினகரன் குழப்பத்தை ஏற்படுத்துவதால் தான் தொண்டர்கள் எதிர்ப்பை தெரிவிக்க போராட்டம் நடத்துகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?
ஆமாம். அதற்குத்தான் எதிர்ப்பு. அவருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை என்று தெளிவாக முடிவு எடுத்துள்ளோம். ஆனால் அவர் அதற்கு பிறகும் அதிமுகவுக்கும் தனக்கும் தொடர்பு இருக்கிறது என்று நடந்து கொள்கிறார்.
அவர் எந்த அமைப்புக்கும் கட்டுப்படுவதில்லை, அவராகவே எதாவது பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் அதை ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களில் வரும் செய்தியை பார்த்து அதனால் பாதிக்கப்படுவதாக நினைக்கும் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றார் ஆவடி குமார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024