மாத விலக்கு நாட்களில் விடுப்பு : கேரள சட்டசபையில் விவாதம்
பதிவு செய்த நாள்12ஆக
2017
00:22
திருவனந்தபுரம்: மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, மாத விலக்கு நாட்களில், விடுப்பு அளிப்பது குறித்து, கேரள சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. ''இது குறித்து, விரைவில் முடிவெடுக்கப்படும்,'' என, மாநில முதல்வர், பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கோரிக்கை : கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த, முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. மாநில அரசின் பல துறைகளில் பணியாற்றும் பெண்கள், மாத விலக்கு நாட்களில், உடல், மன ரீதியில் மிகவும் சிரமப்படுவதாகவும், எனவே, மாத விலக்கு நாட்களில், அவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்றும், பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இயற்கையானது : இது குறித்து, சட்டசபையில் நேற்று, காங்., உறுப்பினர், கே.எஸ்.சபரிநாதன் பேசியதாவது: பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள். மாத விலக்கு காலங்களில், பெண்கள், உடல் மற்றும் மன ரீதியான உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஜப்பான், இந்தோனேஷியா, தைவான் நாடுகளிலும், சீனாவின் சில மாகாணங்களிலும், மாத விலக்கு காலத்தில் பெண் பணியாளர்களுக்கு, விடுப்பு அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. பெண்களின் உடல், மன நலம் கருதி, மாத விலக்கு நாட்களின் போது, அவர்களுக்கு விடுப்பு அளிக்கும் வகையில், மாநில அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அதற்கு பதிலளித்து, முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:பெண்களின் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றத்தால், மாத விலக்கு ஏற்படுகிறது; இது இயற்கையானது. பணிபுரியும் பெண்களின் செயல் திறன் அதிகரிக்க, அவர்கள், உடல், மன நலத்துடன் இருப்பது அவசியம்.
எனவே, மாத விலக்கு காலங்களில், பெண்களுக்கு விடுப்பு அளிப்பது குறித்து, சட்டசபையில் ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், மாத விலக்கு காலங்களில், பெண்களை வீட்டை விட்டு ெவளியேற்றுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும் சட்ட மசோதாவுக்கு, அண்டை நாடான, நேபாளத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment