Friday, December 12, 2014

ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி


ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி என்றும், எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்றும், காலம் காலமாக தமிழ்நாட்டில் கூறப்படுகிறது. அந்த வகையில், ஆசிரியர் பணி என்பது, ஒரு தெய்வீகமான பணியாகத்தான் எல்லோராலும் போற்றப்படுகிறது. ஒரு மனிதனை அனைத்து குணநலன்களோடு, பொருளாதார ரீதியாக எதிர்காலத்தில் அவன் சிறந்து விளங்குவதற்கான வழியையும் காட்டி, அதற்கேற்ற வகையில் அவனை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். ஆக, அவர்கள் பணி என்பது அதை சுற்றித்தான் இருக்கவேண்டும். மாணவர்கள் பள்ளிக்கூட பருவத்தில் சிறந்து விளங்கி கல்வியில் மேம்பட்டு இருந்தால்தான், உயர்கல்வியில் சிறந்து விளங்கமுடியும். அதனால்தான், அரசும் தொடக்கக்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்சிப்பள்ளிக்கூட, கல்விக்கான பட்டப்படிப்பில், பட்டமேற்படிப்பில் தேறினாலும், அந்த மதிப்பெண்களை மட்டும் கருத்தில்கொள்ளாமல், ஆசிரியர் தகுதித்தேர்வில் எடுத்த மதிப்பெண்களை வைத்துத்தான் ஆசிரியர் பணியில் சேரமுடியும் என்ற நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களும் பணியில் சேர்ந்தபிறகும், ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடத்துக்கு செல்லும்முன்பு, மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காக தங்களை தயார்படுத்திக்கொள்ளவேண்டும். அந்த வகையில், ஆசிரியர்களும் ‘ஹோம் ஒர்க்’ அதாவது ‘வீட்டுப்பாடம்’ தயார் செய்யவேண்டும். மேலும், மாணவர்களுக்கு என்ன பாடத்தை, எப்படி கற்றுக்கொடுக்கப்போகிறோம்? என்பதை அந்தந்த வாரத்துக்கு ‘நோட்ஸ் ஆப் லெசன்’ என்று சொல்லப்படும் பாடத்திட்டத்தை எழுதி, தலைமை ஆசிரியர்களிடம் தாக்கல் செய்யவேன்டும். மாணவர்களுக்கு அவ்வப்போது நடத்தும் தேர்வு தாள்களை திருத்தும் பணி, வீட்டுப்பாடத்தை திருத்தும் பணி ஆகியவற்றையும் வீட்டுக்கு கொண்டுவந்துதான் மேற்கொள்ள வேண்டும். ஆக, பள்ளிக்கூடத்தில் மட்டுமல்லாமல், வீட்டில் இருக்கும் நேரத்திலும் ஒரு ஆசிரியரின் சிந்தையில் மாணவர்களின் நலன் மட்டும் இருந்தால்தான், அவர்கள் பணி சிறக்கும்.

ஆனால், பள்ளிக்கூட ஆசிரியர்களை மற்ற பணிகளுக்கும் பயன்படுத்தும் போக்கு இப்போது அதிகமாக இருக்கிறது. வீடு வீடாகப்போய் மக்கள் கணக்கெடுப்பு பணி என்றாலும் சரி, ரேஷன் கார்டு சரிபார்ப்பு என்றாலும் சரி, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி, குழந்தைகளை பள்ளிக்கூடங்களில் சேர்க்கும் பணி என்று அவர்கள் தலையில் ஏராளமான பணிகள் சுமத்தப்படுகின்றன. இந்த வேலைகளையெல்லாம் அவர்கள் பள்ளிக்கூடம் முடிந்தபிறகும், விடுமுறை நாட்களிலும்தான் செய்ய வேண்டும். இதுமட்டுமல்லாமல், தேர்தல் நேரங்களில் வாக்குச்சாவடிகள், ஓட்டு எண்ணும் இடங்களிலும் அவர்கள்தான் வேலை செய்யவேண்டும். தற்போது வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி ஆசிரியர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்தகைய வேலைகள் ஒப்படைக்கப்படும்போது, எங்கள் முழுகவனமும் அதில்தான் இருக்கிறது என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கூடங்களில் இருந்து சற்று தூரத்தில் உள்ள வீடுகளிலிருந்தே தினமும் பள்ளிக்கூடத்துக்கு வருகிறார்கள். ஆசிரியர்களுக்கு பள்ளிக்கூடங்களுக்கு அருகே குடியிருப்பு கிடையாது. அவர்கள் பள்ளிக்கூட நேரம் முடிந்தபிறகு, அநேகமாக மாலை 5 மணிக்குப்பிறகு உடனடியாக புறப்பட்டால்தான் வீடுபோய் சேரமுடியும்.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை எப்படி செய்யமுடியும் என்பது அவர்களுக்கு உள்ள பெரிய மனக்குறை. அதிலும், ஆசிரியைகளான பெண்கள் இப்படி தனியாக வீடு வீடாகப்போய் சரிபார்ப்பது, தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குறைசொல்கிறார்கள். இப்படி தனியாக போகும்போது சொல்லவொண்ணா பல இன்னல்களை சந்திக்கவேண்டியது இருக்கிறது. சில வீடுகளில் தனியாக ஆண்கள் இருக்கிறார்கள், சில இடங்களில் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள், நாய்கள் விரட்டுகின்றன என்பதில் ஆரம்பித்து, பல துன்பங்களை எதிர்நோக்குகிறோம் என்று ஆசிரியைகள் கேட்பதிலும் நியாயம் இருக்கிறது. வீடு வீடாகப்போகும் இதுபோன்ற பணிகளுக்கு யாரையும் கட்டாயப்படுத்தாமல், ஏற்கனவே பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், வேலைஇல்லா பட்டதாரிகள், இளைஞர்களை பகுதிநேர வேலைக்காக பயன்படுத்தினால், அவர்களுக்கும் வருமானம் கிடைத்ததுபோல இருக்கும். மேலும், ஒட்டுமொத்த அரசுபணிகளிலும், ஆசிரியர் பணிகளிலும் உள்ளவர்களிடம் யார்–யார்? இதுபோன்ற பணிகளுக்கு வரத்தயாராக இருக்கிறார்கள் என்பதைக்கேட்டு, யார்–யார்? இத்தகைய பணிக்கு வரத்தயாராக இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் ஒதுக்கலாம்.

1 comment:

NEWS TODAY 21.12.2024