Sunday, December 21, 2014

ஊனமுற்றோர், முதியோருக்கான ரயில் கட்டண சலுகை ரத்தாகுமா?

புதுடில்லி:கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ரயில்வே துறை வருவாய் இழப்பை சரிக்கட்ட, இலவச அல்லது சலுகை கட்டண ரயில் பயணத்தை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது.

உடல் ஊனமுற்றோர்,மூத்த குடிமக்கள்,விளையாட்டு வீரர்கள்,மாணவர்கள்,பத்திரிகையாளர்கள் மற்றும் மருத்துவர்கள் உட்பட, 53 வகையான பிரிவினருக்கு,ரயில்களில், இலவசமாகவோ அல்லது சலுகை கட்டணத்திலோ பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இப்படி இலவச அல்லது சலுகை கட்டணத்தில் பயணிப்பவர்களால் மட்டும், கடந்த நிதியாண்டில், 1,300 கோடி ரூபாய் அளவுக்கு, ரயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்தாண்டுகளில், 5,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரயில்வே துறையின் நிதி நிலையை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் வழங்குவதற்காக, டி.கே.மிட்டல் என்பவர் தலைமையில், உயர்மட்டக் கமிட்டி ஒன்றை, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நியமித்துள்ளார்.இந்த கமிட்டியானது, நிலுவை யில் உள்ள திட்டங்கள் உட்பட, ரயில்வேக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் பல்வேறு அம்சங்களையும் ஆய்வு செய்து வருகிறது. அதில், ஒன்றாக, 'இலவச மற்றும் சலுகை கட்டண பயணத்தை ரத்து செய்ய வேண்டும்' என, ரயில்வே அமைச்சகத்திற்கு பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது.




இருந்தாலும், 53 வகையான பிரிவினருக்கு வழங்கப்படும், இலவச அல்லது சலுகை கட்டண பயணத்தை ரத்து செய்தால், அது அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனே முடிவு எடுக்குமா என்பது சந்தேகமே. ஆனாலும், சலுகை கட்டணத்தில் பயணிக்கும் பிரிவினரின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் அல்லது இத்தகைய பயணங்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024