Monday, December 22, 2014

கர்மயோகம் அறிவோம்

Dinamani

செய்யும் தொழிலே தெய்வம்...ஒவ்வொரு மனிதனின் உளமனதில் ஆழமாகப் பதிய வேண்டிய தாரக மந்திரம் இது. எந்தத் துறையில் பணியாற்றுகிறோம் என்பது முக்கியமல்ல. செய்கின்ற வேலையை ஆத்மார்த்தமாகச் செய்கிறோமா என்பதே முக்கியம்.

சில நாள்களுக்கு முன் மதுரையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற பிரபல ஆன்மிகப் பேச்சாளர் ஒருவர், தனது மனக் குமுறல்களை இப்படிக் கொட்டித் தீர்த்தார்:

அரசு அலுவலகங்களுக்குச் சென்றால் என்னால், மரச் சாமான்களைத்தான் பார்க்க முடிகிறது. மனிதர்களைக் காணவில்லை. அந்தளவுக்கு மனிதப் பண்பு செத்துக் கிடக்கிறது. சாமானியனுக்கு உதவி செய்வதற்காகத்தானே நாம் சம்பளம் வாங்குகிறோம் என்ற மனோபாவம் சிறிதும் இல்லை.

பெரும்பாலான இடங்களில் செய்யும் தொழிலே தெய்வம் என்ற வாசகம் எழுதப் பட்டிருக்கிறதே.. அது யாருக்காக? நாம் தொழிலை தெய்வமாக நினைக்கிறோமா என ஒரு நிமிடமாவது சிந்திக்கத் தவறுவது ஏன்? இப்படி இருந்தால், நாடு வல்லரசாக முடியுமா?

அவரது பேச்சில் சமூக அக்கறை இருந்தது. இப் பேச்சைக் கேட்டு கூடியிருந்த அனைவரும் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். இதில் அரசு அலுவலர்களும் இருந்தனர்.

அவர் பொத்தாம் பொதுவாகக் கூறியிருந்தாலும், அரசு அலுவலகங்களில் கடமை தவறாத அலுவலர்கள் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். பெரும்பாலானோரின் செயல்களைத்தான் அவர் அப்படி வேதனையாகக் குறிப்பிட்டார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அரசு அலுவலகங்களில் மட்டும் இந்த நிலைமை இல்லை. அரசு, தனியார் என எந்தத் துறையாக இருந்தாலும், இதே நிலைதான் இருக்கிறது. செய்யும் தொழிலே தெய்வம் என்பது வெறும் வார்த்தை ஜாலமாகவே பெரும்பாலான அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

அவர்கள் தாங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் கேடு விளைவிக்கிறோம் என்பதை உணராமல் இருப்பது வேதனை. தன்னை நாடி வரும் ஒரு நபரை அலட்சியம் செய்து, பணியைச் செய்யாமல் காலம் கடத்தும் ஊழியர், ஓய்வுக்குப் பின் அதே அலுவலகத்துக்கு வந்தால் பணியில் இருக்கும் ஊழியரால் அலட்சியப்படுத்தும் போக்கும் தொடர்கிறது.

அப்போதுதான் அவருக்கு தான் தொழிலை தெய்வமாக கருதாமல் இருந்ததை உணருகிறார். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்தால் என்ன பயன்?

செய்யும் தொழிலை தெய்வமாகக் கருதாத பலரும் பக்திமான்களாக காட்டிக் கொள்வதில் முன்னணியில் இருக்கின்றனர்.

பக்தி யோகத்தைப் போதிக்கும் ஆன்மிகவாதிகள், உண்மையை உரைக்கும் கர்மயோகத்தை விரிவாகச் சொல்ல மறப்பதாலேயே, பக்தி தவறாகப் பின்பற்றப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் ஆன்மிகவாதிகள்.

எந்தத் தொழிலைச் செய்தாலும், அதை நேசிக்கப் பழக வேண்டும். தன்னை நாடி வருபவர்களுக்கு உதவும் மனப் பக்குவம் வளர வேண்டும். நேசிக்கும் மனோபாவம் தான் வாழ்வில் வெற்றியைத் தேடித் தரும்.

பகவத்கீதையில் கிருஷ்ணர் உபதேசித்ததை வாசகங்களாக அலுவலகங்களிலும், வீடுகளிலும் தொங்க விட்டிருக்கும் நம்மில் பலரும், அவர் மனித சமுதாயத்துக்கு உணர்த்திய கர்மயோக விதிகளை மக்களிடம் தெளிவுபடுத்த தவறியிருப்பதாக, வேதனை தெரிவிக்கின்றனர் அவர்கள்.

எல்லா மதங்களிலும் இறை பக்தியுடன், கர்மயோக கருத்துக்கள் ஆழமாக சொல்லப்பட்டுள்ளன. ஆனால், சமய உலகில் பக்தியை பெரிதாக்கி கர்மயோகத்தை சுருக்கி விடுவதன் விளைவைத்தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

பக்தியுடன் செய்யும் தொழிலே தெய்வம் என்ற கர்மயோகத்தை அதிகளவில் பின்பற்றுவதுதான் சமுதாயத்துக்கு நல்லது என்பதை மனிதகுலத்துக்கு உணர்த்த வேண்டும்.

எந்த மதத்தினராக இருந்தாலும் செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உணரும்போது, நாடு வல்லரசாக மாறும். எங்கும் நல் இதயமுள்ள மனிதர்களைக் காணமுடியும். மனிதநேயமும் நிலைத்து நிற்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024