Wednesday, December 17, 2014

வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது

logo

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, முதல் ஜனாதிபதியாக டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத் பதவியேற்று, அந்த பதவிக்கு பெருமை சேர்த்தார். அவர் நாட்டில் பல்வேறு துறைகளில் ஒப்பற்ற சேவை செய்தவர்களுக்கு ‘பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா’ விருதுகளை அறிவித்தார். இதில், பாரத ரத்னா விருதுதான் மிக உயரிய விருதாகும். 1954–ம் ஆண்டு ஜனவரி மாதம் 2–ந்தேதி இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். 1954–ல் முதலாவதாக டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி, சர்.சி.வி.ராமன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டன. அடுத்த ஆண்டு ஜவகர்லால் நேருவுக்கு அளிக்கப்பட்டது. டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜாகிர் உசேன், லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் என்று பலருக்கு உயிரோடு இருக்கும்போதே வழங்கப்பட்டது. காமராஜர், ராஜீவ் காந்தி, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களுக்கு அவர்கள் மறைவுக்குபிறகு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா, கான் அப்துல் கபார் கான் ஆகியோர் வெளிநாட்டினராக இருந்தாலும் அவர்களுக்கும் விருதை வழங்கி, இந்தியா பெருமைபடுத்தியது. கடந்த ஆண்டு இந்த விருது விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கும், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கும் வழங்கப்பட்டது. இதுவரையில் 43 பேர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இந்த விருதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு வழங்க பா.ஜ.க. அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வருகிற 25–ந்தேதி அவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இந்தநாள் நல்லாட்சிதினமாக கொண்டாடப்படுகிறது. வாஜ்பாய் இப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். எங்கேயும் வெளியே வரமுடியாத நிலையில் அவதிப்படுகிறார். தேர்தலுக்கு முன்பே பா.ஜ.க. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வாஜ்பாய்க்கு வழங்கி அவரை பெருமைப்படுத்துவோம் என்று பிரகடனப்படுத்தியது. கடந்த வாரம் நடந்த பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், எல்லோரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். கடந்த ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம், சச்சின் தெண்டுல்கருக்கும், சி.என்.ஆர்.ராவுக்கும் பாரத ரத்னா விருதை அறிவித்தபோதே, வாஜ்பாய்க்கும் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அப்போது அரசியல் காரணங்களை மனதில் வைத்து வேண்டுமென்றே அவர் பெயரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அறிவிக்கவில்லை என்பதே பா.ஜ.க.வின் ஆதங்கம். ஆனால், வாஜ்பாய் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரின் நன்மதிப்பையும் பெற்றவர். அரசியல் நாகரீகத்தின் எடுத்துக்காட்டாக விளங்கியவர். எதிர்கட்சியினர்கூட, குறிப்பாக பா.ஜ.க. மீது மாற்றுக் கருத்து கொண்டவர்கள்கூட வாஜ்பாய் என்றால் தனி மரியாதை கொண்டவர்கள். பா.ஜ.க.வை எதிர்த்து நிற்கும் நேரத்தில்கூட, தி.மு.க. தலைவர் கருணாநிதி வாஜ்பாய் பற்றி குறிப்பிடும்போது, அவர் தவறான கட்சியில் இருக்கும் நல்ல தலைவர் என்று பாராட்டியிருக்கிறார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தை இந்தியாவில் யாரும் மறந்துவிடமுடியாது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையுள்ள தங்க நாற்கர சாலை அவர் செயல்படுத்திய அற்புதமான திட்டமாகும். இன்றைய காலகட்டத்தில் அருமையான சாலைகளில் தரைவழி போக்குவரத்தில் மக்கள் விரைவாக பயணம் செய்யும்போது நிச்சயமாக அவர் பெயரைச் சொல்லாமல் இருக்கமுடியாது. இதுபோல, பொக்ரான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி உலகம் முழுவதையும் இந்தியாவை ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்க்க வைத்தார். இந்தியா முழுவதிலும் உள்ள நதிநீர் இணைப்பில் அதிக அக்கறையோடு இருந்தார். தமிழ்நாடு மீதும், தமிழர்கள், தமிழக அரசியல்வாதிகள் மீதும் அதிக அன்பு கொண்டவர். 1974–ல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டபோது, பாராளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தவர். சுதந்திர போராட்ட தியாகி, பாராளுமன்ற உறுப்பினர், வெளிவிவகாரத்துறை மந்திரி, பிரதமர் என்ற அவருடைய எந்த முகத்திலும் ஒளிவிட்டு மிளிர்ந்த வாஜ்பாய்க்கு, இந்த ஆண்டு ‘பாரத ரத்னா’ விருது வழங்க அரசியல் வேறுபாடு இல்லாமல், ஒட்டுமொத்த நாடே முன்மொழியவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024