கியாஸ் மானியம் பெறுவதற்கு ‘ஆதார்’ அட்டை கட்டாயம் அல்ல, வங்கி கணக்கு இருந்தாலே போதும் என்று பெட்ரோலிய மந்திரி தெரிவித்தார்.
விளக்கம்
பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது, நேரடி எரிவாயு மானிய திட்டம் குறித்த கேள்விக்கு பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நேரடி எரிவாயு மானிய திட்டத்தின் கீழ், எரிவாயு மானியம் பெறுவதற்கு ‘ஆதார்’ அட்டை கட்டாயம் அல்ல. வங்கி கணக்கு இருந்தாலே போதுமானது.
கியாஸ் மானியம் பெறுவதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. ‘ஆதார்’ அட்டை வைத்திருப்பவர்கள், தங்கள் ‘ஆதார்’ எண்ணை தங்களது வங்கி கணக்குடன் இணைத்துக் கொண்டு, அதன் மூலமாக கியாஸ் மானியத்தை பெறலாம்.
‘ஆதார்’ அட்டை இல்லாதவர்கள், தங்கள் வங்கி கணக்கில் நேரடியாக மானியத்தை பெறலாம். ‘ஆதார்’ அட்டை இல்லாததால், மானியம் மறுக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
முன்பணம்
நேரடி எரிவாயு மானிய திட்டத்தில் சேர்ந்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வீட்டுத்தேவைக்கான சிலிண்டர்கள் சந்தை விலையில் வழங்கப்படும். பிறகு மானியத்தொகை, அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஒரு தடவை மட்டும் வழங்கப்படும் முன்பணத்தொகை, வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் முதலில் வரவு வைக்கப்படும். முதலாவது சிலிண்டரை சந்தை விலையில் வாங்குவதற்கு வசதியாக, இத்தொகை வழங்கப்படும். முதலாவது சிலிண்டர் வாங்கிய பிறகு, அதற்கு தனியாக மானியத்தொகை வழங்கப்படும்.
பிறகு ஒவ்வொரு சிலிண்டர் வாங்கிய பிறகும், விதிமுறைகளுக்கு உட்பட்டு, அதற்கான மானியத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
3 மாத காலஅவகாசம்
வாடிக்கையாளர் குடியிருக்கும் மாவட்டத்தில் எப்போது நேரடி எரிவாயு மானிய திட்டம் அமலுக்கு வருகிறதோ, அதிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இந்த திட்டத்தில் சேர கால அவகாசம் அளிக்கப்படும். திட்டத்தில் சேர்ந்தாலும், சேராவிட்டாலும், இந்த மூன்று மாத காலமும் மானிய விலை சிலிண்டர்கள் அவர்களுக்கு அளிக்கப்படும்.
மூன்று மாத கால அவகாசம் முடிந்த பிறகும், நேரடி எரிவாயு மானிய திட்டத்தில் சேராதவர்களுக்கு, கூடுதலாக மூன்று மாத கால ‘பார்க்கிங் பீரியட்’ என்ற அவகாசம் அளிக்கப்படும். இந்த காலகட்டத்தில், அந்த வாடிக்கையாளர்களுக்கான மானியத்தொகை, தனியாக ஒதுக்கி வைக்கப்படும். அவர்கள் திட்டத்தில் சேர்ந்தவுடன், அந்த மானியத்தொகை, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
மானியத்தை இழப்பர்
ஒருவேளை, மேற்கண்ட மூன்று மாத கால கூடுதல் அவகாசத்துக்கு பிறகும், நேரடி எரிவாயு மானிய திட்டத்தில் சேராவிட்டால், அவர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட மானியத்தொகை காலாவதி ஆகிவிடும். அவர்கள் அத்தொகையை பெறுவதற்கான தகுதியை இழந்து விடுவார்கள்.
பின்னர், நேரடி எரிவாயு மானிய திட்டத்தில் சேரும்வரை, அவர்கள் சந்தை விலையில்தான் சிலிண்டர் வாங்க வேண்டி இருக்கும். அவர்கள் திட்டத்தில் சேர்ந்த பிறகு, மற்றவர்களைப் போலவே, முதலில் முன்பணமும், அடுத்தடுத்து மானியமும் பெறுவார்கள்.
இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.
No comments:
Post a Comment