முதுமை, மீண்டும் ஒருமுறை குழந்தையாகும் தருணம். ஓய்வாக அமர்ந்து, வாழ்ந்த வாழ்க்கையை அசைபோட்டுக்கொண்டு, பேரக் குழந்தைகளோடு விளையாடி சந்தோஷமாக இருக்க வேண்டிய காலம். நாற்பதிலேயே வந்துவிடும் இதயப் பிரச்னைகளும், மூட்டு வலிகளும் முதுமையை அனுபவிக்க விடாமல், மருத்துவமனைகளைத் தேடி அலைய வைக்கின்றன. முதுமையில் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதை சொல்லித்தருகிறார் முதுமைக்கான சிறப்பு மருத்துவர் வி.எஸ்.நடராஜன்.
தனிமையை விரட்ட...
தனிமைதான் முதுமையின் முதல் விரோதி. கூடவே இருந்த பிள்ளைகள் வேலை, திருமணம் என இடம்பெயர்ந்துவிட, அவர்களுக்காகவே அத்தனை நாட்களும் வாழ்ந்த பெற்றோர், தனியாகி விடுகிறார்கள். தனிமையை நினைத்து வருந்துபவர்களுக்கு, மூப்பின் விளைவு ஆறுமடங்கு அதிகரிக்கும் என்கிறது ஆராய்ச்சி. நடுத்தர வயதிலிருந்தே, முதுமை காலத்துக்கான நல்ல பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.
புத்தகம் படிப்பது, புது மொழிகளை கற்பது, மனதுக்குப் பிடித்த பாடல்கள் கேட்பது, பொழுதுபோக்கு சங்கங்களில் உறுப்பினராக சேர்ந்து கூட்டங்களில் கலந்து கொள்வது, நண்பர்களுடன் பேசுவது என எப்போதும் நம்மையும் நம் மூளையையும் பிசியாக வைத்திருந்தால், மனச்சோர்வு அடையவோ, மனப்பதற்றம் வரவோ வாய்ப்புகள் குறையும். தேவையற்ற சிந்தனைகள், வெறுப்பு, பயம், கோபங்களை விரட்டியடிக்க முடியும். கலகலப்பாக இருப்பது நல்ல ஆழ்ந்த உறக்கத்தையும் தந்துவிடுகிறது.
சுடோகு, செஸ், கேரம், குறுக்கெழுத்து, புதிர் போட்டிகள், வினாடி வினா போன்ற வீட்டுக்கு உள்ளேயே அமர்ந்தபடி, மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய விளையாட்டுகளில் அதிகம் ஈடுபடலாம். இதனால் மறதி நோயும் நெருங்காது. வருத்தங்களை மனதில் தேக்கி வைத்தல்கூடாது. மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடும்போது, நோய்கள் நம்மை ஆட்டிப்படைக்கும். எப்போதும் உற்சாக மனநிலையில், யதார்த்த வாழ்வின் நிதர்சனத்தைப் புரிந்து வாழ்ந்தால், தனிமையும் முதுமையும் இனிமைதான்.
பாதுகாப்பு முக்கியம்
வயதானவர்கள் அதிகம் சந்திக்கும் பிரச்னை, கீழே விழுந்து எலும்பு உடைந்து போவதுதான். இதைத் தவிர்க்க கண் பார்வை சரியாக உள்ளதா என்பதை அடிக்கடி பரிசோதிப்பது அவசியம். பார்வைக் குறைபாட்டுக்கு அணியும் கண்ணாடி சரியில்லாமல் போனால்கூட, கீழே விழ நேரிடலாம்.
மாத்திரை மருந்துகளை டாக்டரின் ஆலோசனைப்படியே எடுத்துக்கொள்ளவேண்டும். மருந்துகளின் பக்க விளைவுகள்கூட சமயங்களில் கீழே தள்ளிவிடும். படுக்கையில் இருந்து வேகமாக எழுந்த உடனே, நடக்கக் கூடாது. தொடர்ந்து படுக்கையில் படுத்திருப்பவர், முதலில் மெதுவாக எழுந்து உட்கார வேண்டும். பின்னர் சற்று நேரம் கழித்து, மெதுவாக நிற்க வேண்டும். அதன் பிறகே நடக்க வேண்டும்.
நடக்கும்போது கைத்தடி வைத்திருப்பது பாதுகாப்பானது. படுக்கை அறை, குளியல் அறை, படிக்கட்டுகளில் போதுமான வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். குளியல் அறை, கழிப்பறை, படிக்கட்டு போன்ற முதியவர்கள் அதிகமாக உபயோகிக்கும் இடங்களில் இரும்புக் கைப்பிடிகளை பொருத்த வேண்டும்.
எங்கு வெளியில் செல்ல நேரிட்டாலும், பெயர், ரத்த வகை, வசிக்கும் இடம், தொலைபேசி எண் அடங்கிய அடையாள அட்டையை கையோடு எடுத்துச் செல்வது நல்லது.முதுமையில் நெஞ்சில் வலி இல்லாமல், மாரடைப்பு வரலாம். உடல் வலிமை இழந்திருக்கும் என்பதால் வியர்வை, மயக்கம் எதுவும் இல்லாமலும் மாரடைப்பு ஏற்படலாம். முதுமையில் நோயின் அறிகுறிகள் மாறுபடுவதால், என்ன நோய் வந்திருக்கிறது என்று தெரியாத நிலையில், தவறான மருந்தை உட்கொள்ளும்போது, அதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும். சின்னச்் சின்ன தொந்தரவுகளுக்கு வீட்டு வைத்தியமே சிறந்தது.
மௌனம் நல்லது!
தினமும் ஒரு மணி நேரம் மெளனத்தைக் கடைப்பிடித்தால் மனம் ஒருநிலைப்படும். முதலில் சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை கடைப்பிடித்து, அதை ஒரு மணி நேரம் வரை நீட்டிக்கலாம். இதனால் சஞ்சலம் அடைவது குறையும். மனம் வலிமை பெறும். எண்ணங்கள் உறுதிப்படும். அமைதியும், புத்துணர்ச்சியும் கூடும்.
டாக்டரிடம் ஆலோசித்த பிறகு வாரத்தில் ஒரு நாள், ஓரிரு வேளைகள் உண்ணாவிரதம் இருக்கலாம். உண்ணாவிரதம் இருக்கும்போது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறி, உடல் சீரான நிலைக்குத் திரும்பும்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் பிராணயாமப் பயிற்சிகளை செய்தால், சுவாசப் பிரச்னையில் இருந்து தப்பிவிடலாம். சுவாசப் பயிற்சிகள் ஆயுளைக் கூட்டி, வயதின் பாதிப்புகளைக் குறைக்கும். தினமும் அரை மணிநேரம் தியானம் செய்வதன் மூலம் நல்ல மனநலமும், உடல் நலமும் பெறலாம்.
காலையில் உணவு உட்கொள்ளும் முன்பு திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்தால் உற்சாக மனநிலை ஏற்படும். தினமும் மூன்று முதல் ஐந்து கிலோமீட்டர் வரை நடக்கலாம். 30 முதல் 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யலாம். ஒரே நேரத்தில், உடற்பயிற்சி செய்யமுடியாமல் போனால், மூன்று முறையாக பிரித்துச் செய்யலாம்.
கண் பார்வைக் குறைபாடு, மூட்டுப் பிரச்னை மற்றும் பக்கவாதம் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கையில் அமர்ந்தபடியே உடம்பின் மேற்பகுதிக்கு மட்டும் உடற்பயிற்சி செய்வது நல்லது. இதயப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று பயிற்சியில் ஈடுபடவேண்டும்.
எளிதான உணவுக்கு முன்னுரிமை
எளிதில் செரிக்கக்கூடிய, சத்துக்கள் நிறைந்த உணவைத் தேர்ந்தெடுங்கள். அதிலும் அளவு தெரிந்து சாப்பிடுவது நல்லது. அரைவயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு வெற்றிடம் என்கிற முறையில் சாப்பிடுங்கள். குறைவான கலோரி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஒவ்வொரு வேளையும் வயிறு முட்ட சாப்பிடாமல், சற்று குறைவாகவே சாப்பிடவேண்டும்.
புரதச்சத்து நிறைந்த கொண்டைக்்கடலை, பட்டாணி, சோயா பீன்ஸ், காளான் உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் புரதச்சத்து கிடைத்துவிடும்.
சாத்துக்குடி, ஆரஞ்சு, பச்சைக் காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள் சேர்த்துக்கொள்வதன் மூலம் வைட்டமின் சி அதிகரித்து, இரும்புச் சத்து கிரகிக்கப்படும்.
எலும்பு வலுவிழந்துபோவதைத் தடுக்க, கால்சியம் நிறைந்த வெந்தயக்கீரை, அகத்திக்கீரை, கறிவேப்பிலை, மீன், தினமும் இரண்டு கப் பால் அருந்துவது நல்லது.
உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 30 மி.லி அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். உதாரணத்துக்கு 50 கிலோ எடை உள்ளவர்கள் தினமும் குறைந்தபட்சம், 1.5 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும்.
நார்ச்சத்து நிறைந்த கொள்ளு, கேழ்வரகு, கொத்தமல்லி, பாகற்காய், காலிஃப்ளவர், பேரீச்சம்பழம், அத்திப்பழம், மிளகு, ஓமம், சுண்டைக்காய் உணவுகளை சாப்பிடுவது, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
உப்பு அதிகரித்தால் உடலுக்குக் கேடு. சீஸ், ஊறுகாய், அப்பளம், வடகம், சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பைத் தடுக்கலாம்.
ஆன்டி ஆக்சிடண்ட் நிறைந்த ஆரஞ்சு, பப்பாளி, கேரட், பூசணி, மாம்பழம், எலுமிச்சம்பழம் எடுத்துக்கொள்வது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
தினம் ஒரு நெல்லிக்காய் முதுமையை விரட்டி இளமையை தக்கவைக்கும் அருமருந்து.
No comments:
Post a Comment