தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) வேலைநிறுத்தத்தைத் தொடங்கியதால், பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு சொல்லிமாளாது. அ.தி.மு.க. தொழிற்சங்கத்தினர், சில பேருந்துகளை இயக்க முற்பட்டாலும், அவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் நிறுத்தப்பட்டன. தமிழகத்தின் மற்ற நகரங்களில் தனியார் நகரப் பேருந்துகள் இயங்கின. தனியார் வெளியூர் பேருந்துகளும் இயங்கின.
"அரசியல் காரணங்களால் இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் இயக்கம் செயல்படாத நிலை வந்தபோது மட்டும் மக்கள் பாதிக்கப்படவில்லையா?' என்று தொழிற்சங்கத்தினர் கேட்கும் கேள்வி அர்த்தமற்றது. அரசியல் காரணங்களுக்காக நடக்கும் போராட்டமும், தொழிலாளர் வேலைநிறுத்தமும் ஒன்றாகிவிடாது.
இவர்களது கோரிக்கைகளில் மிக முதன்மையானது 30.8.2013-இல் முடிவடைந்த 11-வது ஊதிய ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, 12-வது ஊதிய ஒப்பந்தம், 1.9.2013 முதல் அமலாகியிருக்க வேண்டும் என்பதுதான். கடந்த ஓராண்டாக அரசு இதைச் செய்யவில்லை என்பதுதான் இவர்களது குற்றச்சாட்டு.
போக்குவரத்துத் துறை மட்டுமல்ல, அரசு சார்ந்த எந்தத் துறை என்றாலும் ஊதிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்த அடுத்த நாளே புதிய ஊதிய ஒப்பந்தம் அமலுக்கு வருவதில்லை. முந்தைய ஊதிய ஒப்பந்தம் முடிந்த பிறகுதான் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. புதிய ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் எந்தத் தேதியில் பழைய ஊதிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததோ அதே தேதியில் இருந்து சம்பளம் கணக்கிட்டு நிலுவைத் தொகையாக (அரியர்ஸ்) வழங்குகிறார்கள். இதுதான் நடைமுறை.
பேச்சுவார்த்தை நடக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? அதிக உறுப்பினர்களைக் கொண்ட தொழிற்சங்கத்திடம் மட்டும் அரசு பேச்சுவார்த்தை நடத்தினால் போதும் என்று 2010-இல் உயர்
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது ஆட்சியிலிருந்த தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையில் (தொ.மு.ச.) 73,000 உறுப்பினர்கள் இருந்தனர். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இப்போது அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் 91,440 உறுப்
பினர்களும், தொ.மு.ச.வில் 18,000 உறுப்பினர்களும்தான் இருக்கின்றனர் எனும்போது, அதிகாரபூர்வத் தொழிற்சங்கம் என்பதால் தொ.மு.ச.வை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது எப்படி சரி?
அரசியல் சாராத தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர் சம்மேளனம், அனைத்துத் தொழிற்சங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. பேச்சுவார்த்தைக்குத் தங்களை மட்டுமே அழைத்து, தாங்கள் சொல்வதை ஏற்றாக வேண்டும் என்று அரசை நிர்பந்தம் செய்வதற்காக தொ.மு.ச.வால் இப்படியொரு வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது வெறும் போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்னை மட்டுமல்ல. இது அரசுக்கு தரப்படும் அழுத்தம்; ஓர் அரசியல் நெருக்கடி.
அரசுப் போக்குவரத்துக் கழகம் மிகப்பெரும் நட்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நட்டத்தை மக்கள் வரிப் பணத்தால் அரசு ஈடு செய்து, சம்பளம், சலுகைகள், 20% போனஸ் அனைத்தையும் வழங்கி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததுதான்.
கடந்த 2011-இல் பேருந்துக் கட்டணத்தை (சாதா பேருந்துகளுக்கு) 28 காசுகளிலிருந்து 42 காசுகளாக உயர்த்தியபோது, அரசுக்கு கிடைத்த வருவாய் ஆண்டுக்கு ரூ.2,100 கோடி. அது, 2011-ஆம் ஆண்டின் நட்டமான ரூ.2,200 கோடியை (ஏற்கெனவே தொடரும் நட்டம் சுமார் 6,000 கோடி தனி) ஈடு செய்தது.
இப்போது, தொழிற்சங்கங்கள் கேட்கும் 25% சம்பள உயர்வை ஏற்கும்படி போராட்டத்தில் ஈடுபட்டு நிர்பந்திப்பதன் மூலம், அரசு வேறுவழியே இல்லாமல் கட்டாயமாக செய்யக்கூடியது பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவது மட்டுமே. இதன்மூலம் அரசுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படும் என்பதுதான் நோக்கம். இது 11 தொழிற்சங்கங்களின் கூட்டு முடிவு என்று அறிவிக்கப்பட்டாலும், பேருந்துக் கட்டண உயர்வின் பயனை அறுவடை செய்யும் கட்சி தி.மு.க. மட்டுமாகத்தான் இருக்கும்.
"அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் சார்ந்த கட்சிகள் அறிக்கை விட வேண்டும். எல்லா சங்கங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க தி.மு.க.வின் தொ.மு.ச. சம்மதிக்க வேண்டும். ஆனால், செய்ய மாட்டார்கள். அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதும், பொதுமக்களை பாதிப்புக்கு உள்ளாக்குவதும்தான் இந்த வேலைநிறுத்தத்தின் நோக்கமே தவிர, போக்குவரத்துத் தொழிலாளர்களின் நலனைப் பேணுவது அல்ல!
No comments:
Post a Comment