Thursday, December 18, 2014

டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்களை வேறு கல்லூரியில் சேர்க்கும் வாய்ப்பை ஆராயுங்கள்

அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்டம், குன்னவலத்தில் உள்ள டி.டி. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களை வேறு கல்லூரிகளில் சேர்க்கும் வாய்ப்பை ஆராயும்படி அதிகாரிகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பிரதிநிதிகள் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய்யுடன், அமைச்சர் ஜே.பி. நட்டாவை புதன்கிழமை அவரது அமைச்சகத்தில் சந்தித்தனர். அப்போது, தருண் விஜய் நட்டாவிடம் கூறியதாவது:

"சென்னையை அடுத்துள்ள டி.டி. மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை இந்திய மருத்துவக் கவுன்சில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்தது. இதனால், எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள மாணவர்களில் சிலர் அண்மையில் தீக்குளிப்பிலும் ஈடுபட முயன்றனர். கல்வியைத் தொலைத்த ஏக்கத்தில் மாணவர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். கல்லூரியின் தவறால் அப்பாவி மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? மருத்துவக் கவுன்சிலுக்கும் டி.டி. கல்லூரிக்கும் இடையே நடைபெறும் பிரச்னையில் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது. இந்த விஷயத்தில் அவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த மத்திய சுகாதாரத் துறை தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தருண் விஜய் கேட்டுக் கொண்டார்.

இதைக் கேட்ட அமைச்சர் நட்டா, சுகாதாரத் துறைச் செயலர் உள்ளிட்ட உயரதிகாரிகளை வரவழைத்து, "இது மிகவும் தீவிரக் கவனத்தில் கொள்ள வேண்டிய பிரச்னை. இந்த விஷயத்தில் மாணவர்கள் கல்வியைத் தொடரும் வகையில் அவர்களை வேறு கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பை ஆராய்ந்து வியாழக்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

தில்லியில் கடந்த சில வாரங்களாகத் தங்கியுள்ள மாணவர்கள், இந்திய மருத்துவக் கவுன்சில், மத்திய சுகதாரத் துறை உள்ளிட்டவற்றின் அதிகாரிகளைச் சந்தித்து தங்கள் பிரச்னை தொடர்பாக மனு கொடுக்க முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், தருண் விஜய்யுடன் அவர்களுக்கு தொடர்பு ஏற்பட்டதையடுத்து, அவரது உதவியுடன் ஜே.பி. நட்டாவை புதன்கிழமை மாணவர்களின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.

பின்னணி: குன்னவலம் டி.டி. மருத்துவக் கல்லூரியில் 2011-ஆம் ஆண்டில் 103 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவர்கள் முதலாம் ஆண்டு தேர்வு எழுதி அதன் முடிவுகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்நிலையில், அக்கல்லூரியின் அங்கீகாரத்தை இந்திய மருத்துவக் கவுன்சில் ரத்து செய்தது.

இதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக அக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024