Saturday, December 20, 2014

வேலைவாய்ப்பு பாதிக்கக்கூடாது

logo

படித்தவர்கள் எல்லாம் வெளிநாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிக்கிறார்களே, நமக்கு அந்த பாக்கியம் இல்லையே என்று, படிக்க வாய்ப்பு இல்லாதவர்கள் ஒருகாலத்தில் ஏங்கினார்கள். வெளிநாட்டில் வேலை என்பது அவர்களுக்கு பகல் கனவாக இருந்தது. ஆனால், அவர்களின் கனவும் 1969–ம் ஆண்டின் கடைசியில் இருந்து நனவாகத்தொடங்கியது. இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்று அழைக்கப்படும் அரபு நாடுகளில் இந்தகால கட்டங்களில்தான் முதலாவதாக பெட்ரோல், டீசல் தயாரிக்க உதவும் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டது. முதலில் எண்ணெய் எடுக்கும் தொழிலுக்காகவும், பின்பு கச்சா எண்ணெய் மூலம் கிடைத்த வருவாயைக்கொண்டு தொடங்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணிகளுக்காகவும் துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்பட 7 நாடுகளில் கட்டிடவேலை, தச்சு வேலை, மின்சார வேலை, டிரைவர் வேலை போன்ற பல வேலைகளுக்காக இந்தியாவில் இருந்து ஏராளமானவர்களை வேலைக்கு எடுத்தனர். ஓட்டல்களில், வணிக வளாகங்களில், வீட்டு வேலைகளுக்காக படிக்காத பெண்களும் வேலைக்காக அரபு நாடுகளுக்கு செல்லமுடிந்தது. அங்கே கடுமையான வெயிலில், உடலை வருத்தி வேலைபார்க்க வேண்டிய நிலை இருந்தாலும், இங்கு இந்தியாவில் படித்தவர்கள் வாங்கும் சம்பளத்தைவிட, அதிக தொகையை அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பியதால், இந்த நாடுகளுக்கு சென்று வேலைபார்க்க பலத்த போட்டி நிலவியது. சில நேரங்களில் போலி ஏஜெண்டுகளை நம்பி அங்கு சென்று, எதிர்பார்த்த வேலை ஒன்று, அங்கு கிடைத்த வேலை ஒன்று, ஏஜெண்டு சொன்ன சம்பளம் ஒன்று, கிடைக்கும் சம்பளம் ஒன்று என்ற நிலையில் ஏராளமானவர்கள் வாடும் நிலை ஏற்பட்டது.

இதுபோல வீட்டு வேலைக்காக செல்லும் பெண்கள் அங்கு சென்று ஒருசில நேரம் சம்பளமும் போதிய அளவு கிடைக்காமல், பெரும் கஷ்டத்தில் ஊருக்கும் வரமுடியாத அனுபவமும் ஏற்படுகிறது. இவ்வாறு வீட்டு வேலைக்காக செல்லும் பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசாங்கம் சமீபத்தில் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, வீட்டு வேலைக்காக இந்தியாவில் இருந்து ஆட்களை எடுக்கும்போது, அவர்களுக்காக 2,500 அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ஏறத்தாழ ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்துக்கு வங்கி கியாரண்டி கொடுக்கவேண்டும். துபாய் உள்பட 6 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட வளைகுடா கூட்டுறவு கவுன்சிலில் உள்ள மற்ற 5 நாடுகள் இந்த உத்தரவை ஏற்றுக்கொண்டாலும், துபாய் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. தங்கள் நாட்டில் இவ்வாறு வேலைக்கு ஆட்களை நியமிக்கும் குடிமக்களுக்கு எந்த நிதிச்சுமையும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. வீட்டு வேலைக்கும் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இந்தியர்களை வேலைக்கு எடுப்பதற்கு தடைவிதிக்க திட்டமிட்டுவருவதாக வந்த செய்தி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவைத்தில் மட்டும் 7 லட்சத்து 50 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள். இதில், 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் வீட்டு வேலைதான் செய்கிறார்கள். இந்தியா தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுகிறது, அனைத்து தொழிலாளர் ஒப்பந்தங்களையும் ரத்துசெய்துவிடுவோம் என துபாய் கூறுகிறது. இப்படி ஒரு தடை அமலுக்கு வந்தால், குவைத்தில் வேலைபார்க்கும் வாய்ப்பை எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும், இளைஞர்களும் இழக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக குவைத் உயர் அதிகாரிகளுடன் அங்குள்ள இந்திய தூதர் சுனில் ஜெயின் நடத்திய பேச்சுவார்த்தையும் எந்த பலனும் அளிக்கவில்லை. இத்தகைய வங்கி கியாரண்டி ஆண் தொழிலாளர்களுக்கு தேவையில்லை, ஆனால் பெண் தொழிலாளர்களுக்கு மட்டும் வேண்டும் என்பதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. ஏற்கனவே சவுதி அரேபிய இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்புகளைப் பெறவேண்டும் என்ற நோக்கில், புதிய பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள், மாணவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கும் திட்டங்களில் குவைத் மன்னர் தீவிரமாக இருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில், படிக்காதவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதை இத்தகைய நடவடிக்கைகள் தடுத்துவிடக்கூடாது. எனவே, தொடர்ந்து இந்திய அரசாங்கம், துபாயோடு பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு காணவேண்டும்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...