கடிதப் போக்குவரத்து முற்றிலும் குறைந்து, கைப்பேசிக் குறுந்தகவல் முறையும் பின்தங்கிவிட்டதாகத் தோன்றும் நிலையில், இப்போது பெரும்பான்மையானோரை இணைக்கும் பாலமாக இருப்பவை முகநூல், சுட்டுரை, வாட்ஸ்அப் - ஆகிய மூன்றும்தான்.
முகம் பாராமலேயே உயிருக்குயிராய்ப் பழகிய கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையாரின் "சங்க கால நட்பு', இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை உலகம் முழுவதும் பரவலாக இருந்த "பேனா நட்பு' ஆகியவற்றின் புதிய பரிமாணம்தான் இவை.
வங்கியில் கணக்கு இருக்கிறதோ இல்லையோ, இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் கணக்கு இல்லையென்றால், நாம் நவீன அறிவியல் உலகில் பல படிகள் பின்னால் இருப்பதாகத் தோன்றிவிடும்.
உலக மக்கள்தொகையில் 126 கோடிப் பேர் முகநூல் பயன்படுத்துகின்றனர். அதாவது, 13 பேருக்கு ஒருவர் முகநூல் இணைப்பில் உள்ளார்.
இந்தியாவில் 9 கோடிப் பேர் முகநூலைப் பயன்படுத்துகின்றனர். அவர்களில் 73 சதவீதம் பேர் ஆண்கள்; 27 சதவீதம் பேர் பெண்கள். முகநூல் பயன்படுத்துவோரில் 24 சதவீதம் பேர் 14 முதல் 25 வயதுக்கு உள்பட்டோர்.
முன்னணி சமூக வலை தளங்களில் ஒன்றான சுட்டுரையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதக் காலத்தில் 25 கோடியாக அதிகரித்துள்ளது.
முகநூலில் ஒரு நிமிடத்தில் 24 கோடியே 60 லட்சம் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றனவாம்.
முகநூலை தங்களது புகைப்படங்களின் தொகுப்பாகவும், அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை தாங்கள் செய்யும் பணிகள் என்னென்ன என்பதைப் பட்டியலிடவுமே பலர் பயன்படுத்துகின்றனர்.
அதேநேரம், பொது அறிவுத் தகவல்கள், விபத்து அல்லது நோயால் பாதிக்கப்பட்டோருக்கான ரத்தத் தேவை, வேலைவாய்ப்புச் செய்திகள் போன்ற பயனுள்ள செய்திகளும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.
சில நாள்களுக்கு முன்பு நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த அவர் தனது 10-ஆவது வயதிலேயே சொந்த ஊரை விட்டு குடும்பத்துடன் கடலூர் மாவட்டத்துக்கு செல்ல நேரிட்டது. விவரம் புரியாத அந்த வயதிலிருந்த நண்பர்கள் குறித்த ஏக்கம் அவரை வாட்டி வதைத்தது.
இப்போதுதான், அவருடைய 39-ஆவது வயதில் தனது பால்யகால நண்பர்கள் பற்றியத் தகவல் தெரிந்ததாம். விரைவில் நண்பர்களைச் சந்திக்கவுள்ளதாகவும், 29 ஆண்டுகால தேடலுக்கு பலன் கிடைத்ததாகவும் தெரிவித்தார். இதற்குப் பேருதவி புரிந்ததாக அவர் குறிப்பிட்டது "முகநூல்'!
இவரைப்போல விட்டுப்போன நட்புகளையோ, உறவுகளையோ முகநூல் மூலம் சிலர் தேடிக் கண்டடைகின்றனர். முகநூல் மூலம் அறிமுகமாகி, நண்பர்கள் குழு அமைத்து, மரக்கன்றுகள் நடுதல் போன்ற சமூக செயல்களிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், பகிர்வுத் திறனை வளர்க்கும் அளவுக்கு முகநூல், படைப்புத் திறனை வளர்க்கிறதா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில், எங்கிருந்தோ, யாரோ அனுப்புகின்ற ஏதோ ஒன்றை "பார்வர்டு' அல்லது "ஷேர்' அல்லது "லைக்' செய்யும் பணியே பெரும்பாலும் நடக்கிறது.
சிலர் பிறரது கருத்துகளைச் "சுட்டு' முகநூலில் உரைப்பதால், முகநூலே "சுட்டுரை'யாகவும் (டுவிட்டராகவும்) மாறிவிடுகிறது, சில நேரங்களில்.
சிலர் நாள் முழுவதும் முகநூலே கதி எனக் கிடந்து, உலகின் பல மூலைகளில் இருக்கும் முகம் தெரியாத பலரை நண்பர்கள் பட்டியலில் வைத்து அழகு பார்க்கும் நட்புப் பிரியர்களாக உள்ளனர்.
ஆனால், அத்தகையோர் அண்டை வீட்டுக்காரர்களுடனோ, அலுவலகத்தில் சக ஊழியர்களுடனோ, குடும்ப உறுப்பினர்களுடனோ அன்பை பரிமாறிக்கொள்கின்றனரா என்பது கேள்விக்குறியே.
கண்ணால் கண்டதை உடனுக்குடன் பகிர்ந்துகொள்வதைப்போல, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் "கண்டதை'ப் பகிர்ந்துகொள்வதும் முகநூலில் அதிகமுள்ளது.
அடுத்தவர் அந்தரங்கத்தில் மூக்கை நுழைப்பது, பெண்களின் பெயர்களில் போலிக் கணக்குத் தொடங்கி மற்றவர்களை ஏமாற்றுவது, அரசியல்வாதிகள், நடிகர் - நடிகைகள் என பிரபலமானவர்களை நியாயமற்ற முறையில் விமர்சிப்பது, ஜாதி - மத மோதல்களைத் தூண்டும்விதத்தில் கருத்துத் தெரிவிப்பது, தேச விரோத சக்திகளுக்கு ஆதரவு திரட்டுதல் போன்ற போக்கும் அதிகரித்து வருகிறது.
எல்லை தாண்டாதவரை எதுவும் அபாயமில்லை என்ற கருத்து இந்தச் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்போருக்கும் பொருந்தும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
No comments:
Post a Comment