எங்கள் ஊரில் நண்பர்களுடன் குளத்தில் விளையாடுவேன். கரையில் ஒருவர் அமர்ந்துகொண்டு ஒன்று, இரண்டு என எண்ணுவார். மற்றவர்கள் தண்ணீருக்குள் மூழ்குவோம். அதிக நேரம் தம் கட்டி நீருக்குள்ளே இருப்பவர் யாரோ அவருக்கே மில்க் பிஸ்கெட் ஒரு பாக்கெட் பரிசு.
தண்ணீருக்குள் தம் கட்டி உள்ளே இருப்பது என்பது சாதாரணக் காரியமல்ல. தண்ணீருக்குள் ஒரு நிமிடம் இப்படி இருந்தாலே நாக்கு வெளியில் தள்ளுவதுபோல் ஆகிவிடும். வழியில்லை. எக்ஸ்ட்ரா தம் கட்டினால் மட்டும்தான் பரிசு கிடைக்கும். வாழ்க்கையும் இதே மாதிரிதான் இயங்குகிறது.
தம் கட்டும் வாழ்வு
எங்கள் கிராமத்தில் இருந்து ஐந்து நண்பர்கள் சென்னைக்கு வேலையைத் தேடிச் சென்றார்கள். ஏறக்குறைய ஐந்தாம் வகுப்புக்கும் கீழே தங்களது கல்வித் தகுதியை வைத்திருந்த அவர்களுக்கு வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு வேலையை வழங்கியது சென்னை.
உறைகிணறு எடுக்கும் இடத்தில் கயிறு இழுக்கும் வேலை அது. சக்திவேல்தான் ஒரு உறைகிணறு மேஸ்திரியிடம் தன்னுடன் வந்த மற்ற நான்கு நண்பர்களுக்கும் வேலை வாங்கிக் கொடுத்தான்.
சக்திவேலின் தலைமையில் சென்னை வந்த ஐந்து பேரும் ஒரு வாரம் வேலை செய்துவிட்டு வார இறுதியில் சம்பளம் வாங்கிக் கொண்டு கிராமத்துக்கு வந்தார்கள். இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் சக்திவேல் மட்டுமே மீண்டும் சென்னைக்குப் போனான். குமாருக்குக் கூலி போதவில்லையாம்.
பாலாஜிக்கு சென்னையின் கொசுக் கடியைத் தாங்க முடியவில்லையாம். சதீசுக்கு உடம்பு வலி. கடுப்பான வேலையாம் மாரிக்கு. இவர்கள் சொன்ன எல்லாப் பிரச்சினைகளோடும்தான் சக்திவேலும் மீண்டும் வேலைக்குச் சென்னை போயிருக்க வேண்டும்.
வியாபாரக் கடலில் மீனாக
பல வருடங்களாக எனக்குச் சக்திவேலோடு தொடர்பு இல்லை.இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு திருமண நிகழ்ச்சியில் அவனைச் சந்தித்தேன். சக்திவேலின் காரில்தான் அன்று ஊருக்குத் திரும்பி வந்தேன். உறைகிணறு எடுக்கும் வேலை பார்த்த சக்திவேல் இரவு உணவுக்குச் சாப்பிடச் செல்லும் இடத்திலேயே பகுதிநேர சர்வராக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.
அங்கே தினமும் மீன் சப்ளை செய்பவர் பரந்தாமன். சக்திவேல் கடின உழைப்பாளி என்பதைக் கண்டுபிடித்த பரந்தாமன் தன்னிடம் வந்து வேலைக்குச் சேர்ந்தால் உன் திறமைக்கு நிறைய சம்பாதிக்கலாம் என்று பேசியிருக்கிறார்.
சில வருடங்கள் கழித்து இதே தொழிலைச் சொந்தமாக ஆரம்பித்து இருக்கிறார் சக்திவேல். சென்னையின் பெரிய பெரிய ஹோட்டல்கள் எல்லாம் இன்று சக்திவேலின் வாடிக்கையாளர்கள். வெளி நாடுகளுக்கும் மீன், கருவாடு ஏற்றுமதி செய்தும் கமிஷனை அள்ளுகிறார் சக்திவேல். கடலில் தம் கட்டவும் கடல்நீரில் உள்ள காற்றையும் சுவாசித்து வாழும் திறமையும் படைத்த மீனாக வியாபாரக் கடலில் துள்ளித் திரியும் சக்தியை சக்திவேல் பெற்றுவிட்டார்.
எக்ஸ்ட்ரா தம் கட்டு
எல்லா வசதிகளும், சவுகரியங்களும் தம் கட்டினால்தான் பெறமுடியுமே தவிர... தம் கட்டுதல் என்பதே சவுகரியமாய் அமைய வாய்ப்பில்லை என்பதுதான் சக்திவேலின் வாழ்க்கை தரும் பாடம். சவுகரியமாக இருந்து கொண்டு ஜெயிக்கவும் முடியாது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விலை இருக்கிறது. அது காலம், பொறுமை, விட்டுக் கொடுத்தல், சறுக்கல், வலி, பணம் அவமானம் என எதுவாகவும் இருக்கலாம்.
கடையைத் திறந்த முதல் நாளிலேயே கல்லா நிரம்பி வழிய வேண்டும். வாடிக்கையாளர்கள் கியூவில் நிற்க வேண்டும். சின்னச் சின்னச் சண்டை சச்சரவுகள் கூட இல்லாத குடும்பம் வேண்டும், பெரிய மனிதர்களைப் போல் சீரியஸாக நடந்து கொள்ளும் குழந்தைகள் வேண்டும். குற்றம் இல்லாத சுற்றம் வேண்டும் என்று விரும்புவது எதார்த்தத்தை மீறிய மன நிலை.
வேலையானாலும், வியாபாரம் ஆனாலும், குடும்பமானாலும், குழந்தை வளர்ப்பு என்றாலும், நட்பு என்றாலும், எடுத்த எடுப்பிலேயே சவுகரியமாய் அமைந்து விடாது. எக்ஸ்ட்ரா தம் கட்டுகிறவர்களுக்கு மட்டுமே இதெல்லாம் சவுகரியமாய் அமையச் சாத்தியம் உண்டு.
வாழ்வை ஆரம்பிக்கும் போது ஏற்பட்ட எந்தத் துன்பங்களுக்கும் மனம் தளராமல், இன்னும் கொஞ்சம்...இன்னும் கொஞ்சம் எனத் தன் நண்பர்களைக் காட்டிலும் எக்ஸ்ட்ரா தம் கட்டியிருக்கிறார் சக்திவேல். அதனால் அவரது வியர்வையின் வாடை, இன்று அவர் மேல் வெளி நாட்டு வாசனை திரவியமாய் மாறி இருக்கிறது.
ஒரு கட்டத்தில் தன் மீது பற்ற வைக்கும் தீயின் வலி தாங்காமல் பின்வாங்கி விடுபவர்கள் ஒரு ரகம். சக்திவேலைப் போல தன் மீது பற்ற வைக்கும் தீயையே பயன்படுத்திக்கொண்டு ராக்கெட்டாக அவதாரம் எடுத்துப் பல மைல்கள் சீறி முன்னேறுகிறவர்கள் ஒரு ரகம். நீங்கள் இதில் எந்த ரகம்?
- அ. ஜெயராஜ்
jayarajabo@gmail.com
No comments:
Post a Comment