Thursday, December 18, 2014

சமையல் கியாஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டம்: ஒரே விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யும் புதிய முறை அறிமுகம் மானிய தொகை பெறுவது எப்படி? ஐ.ஓ.சி. செயல் இயக்குனர் விளக்கம்

சமையல் கியாஸ் சிலிண்டர் நேரடி மானியதிட்டத்தில் ஒரே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையும் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மானிய தொகை பெறுவது எப்படி? என்பது குறித்து ஐ.ஓ.சி. செயல் இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

சமையல் கியாஸ் மானியம்

மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர்(எல்.பி.ஜி.) நேரடி மானியதிட்டத்தை கடந்த ஜூன் 1–ந்தேதி அறிமுகப்படுத்தியது. இதையடுத்து நாட்டில் 291 மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. வரும் ஜனவரி 1–ந்தேதி முதல் தமிழகம் உள்பட நாடு முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதற்காக கடந்த 3 மாதங்களாக சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை வங்கி கணக்கில் சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. எனினும் நேற்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் கியாஸ் சிலிண்டர் இணைப்பை பெற்றுள்ள 1 கோடியே 53 லட்சத்து 45 ஆயிரத்து 14 வாடிக்கையாளர்களில் சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்கள் மட்டுமே இதுவரை மானியதிட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 45.78 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக சென்னையில் 6.59 சதவீதம் பேரும் மானியதிட்டத்தில் இணைந்துள்ளனர்.

சுமார் 9 ஆயிரம் வாடிக்கையாளர்கள் மானியத்தை பெற விரும்பவில்லை என்று பதிவு செய்துள்ளனர்.

சிறப்பு முகாம்கள் மூலம் மானிய திட்டத்தில் வாடிக்கையாளர்களை சேர்க்கும் முயற்சியில் எண்ணெய் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

ஒரே விண்ணப்பம்

இந்தநிலையில் வாடிக்கையாளர்கள் வசதிக்கேற்ப புதிய விண்ணப்ப படிவம் ஒன்றையும் எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன.

அதிகாரிகள் தகவல்

இதுதொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின்(ஐ.ஓ.சி.) செயல் இயக்குனர் யு.வி.மனூர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை வங்கி கணக்கில் சேர்ப்பதற்கு, ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு விண்ணப்ப படிவம் 1 மற்றும் 2–ம், ஆதார் அடையாள அட்டை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு விண்ணப்ப படிவம் 3 மற்றும் 4–ம் இதுவரை வழங்கப்பட்டு வந்தது.

வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமம் மற்றும் குழப்பத்தை கருத்தில்கொண்டு v 1.0 என்ற ஒரே ஒரு விண்ணப்ப படிவம்(தமிழ்–ஆங்கிலம் இரண்டு மொழியிலும்) மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப படிவம் கியாஸ் விநியோகஸ்தர்களிடம் நேரடியாக கிடைக்கும். www.mylpg.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பழைய விண்ணப்ப படிவ மூலமும் வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் ‘பகுதி–ஏ, பகுதி–பி, பகுதி–சி’ என்று 3 பிரிவுகள் இடம் பெற்றிருக்கும். அந்த விண்ணப்ப படிவத்தை 2 பிரதிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆதார் எண் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் விண்ணப்ப படிவத்தின் ஒரு பிரதியில் ‘பகுதி– ஏ மற்றும் பகுதி–பி’யை பூர்த்தி செய்து கியாஸ் விநியோகஸ்தர்களிடம் வழங்க வேண்டும். மற்றொரு பிரதியில் ஏ, பி, சி ஆகிய 3 பகுதிகளையும் பூர்த்தி செய்து வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதார் எண் இல்லாத வாடிக்கையாளர்கள் ‘பகுதி–ஏ மற்றும் பகுதி–சி’யை பூர்த்தி செய்து கியாஸ் விநியோகஸ்தரிடமோ அல்லது வங்கியிடமோ சமர்ப்பிக்க வேண்டும்.

மானியம் பெற விரும்பாத வாடிக்கையாளர்கள் பகுதி–‘ஏ’வை மட்டும் பூர்த்தி செய்து கியாஸ் விநியோகஸ்தரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கடந்த நவம்பர் 15–ந்தேதி முதல் இத்திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு முதல் சிலிண்டர் பதிவு செய்தவுடன் ஏற்கனவே அறிவித்தபடி ரூ.435 நிரந்தர முன்பணம் அவர்களுடைய வங்கி கணக்கில் சேர்க்கப்படும். அதன்பிறகு இணைந்த வாடிக்கையாளர்களுக்கு ரூ.568 நிரந்தர முன்பணமாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

மானிய தொகை எப்படி கிடைக்கும்?

சென்னையில் ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர் 404 ரூபாய் 50 காசு விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு மானிய தொகையாக ரூ.345 வழங்குகிறது. இந்த மானியத் தொகையில் ஒவ்வொரு மாதமும் மாற்றம் இருக்கும்.

சிலிண்டர் விலை 404 ரூபாய் 50 காசு, மானிய தொகை ரூ.345 சேர்த்து மொத்தம் 749 ரூபாய் 50 காசு கொடுத்து விநியோகஸ்தர்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் சிலிண்டரை பெற்றுக்கொள்ள வேண்டும். சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்ட பிறகு 48 மணி நேரம் முதல் 78 மணி நேரத்துக்குள் மானிய தொகை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் சேர்ந்துவிடும். வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் மானியத்தொகை சேர்ந்துவிட்டதா என்பதை மட்டும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மானிய திட்டத்தில் இணையாத வாடிகையாளர்களுக்கு ஜனவரி 1–ந்தேதி முதல் மார்ச் 31–ந்தேதி வரை கருணை காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு சந்தை விலையிலேயே சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும்.

ஜூலை மாதத்துக்கு பிறகு...

கருணை காலம் முடிவடைவதற்குள் மானிய திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு, விநியோகிப்பட்ட சிலிண்டர் எண்ணிக்கை அடிப்படையில் வங்கி கணக்கில் மானியதொகை மொத்தமாக சேர்க்கப்பட்டுவிடும்.

கருணை காலத்திலும் மானிய திட்டத்தில் இணையாத வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 1–ந்தேதி முதல் ஜூன் 30–ந்தேதி வரை சந்தை விலையில் சிலிண்டர்கள் கிடைக்கும். ஆனால் அவர்களுக்குரிய மானியதொகை எண்ணெய் விற்பனை நிறுவனங்களிடம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

ஜூலை 1–ந்தேதிக்கு பிறகு இத்திட்டத்தில் எந்தவொரு வாடிக்கையாளரும் இணைந்தால் இணைந்த தேதியில் இருந்து தகுதிக்கு தகுந்தபடி நிரந்தர முன்வைப்புத் தொகை மற்றும் மானியம் அனுமதிக்கப்படும். இதுவரை மானியதிட்டத்தில் சேராத வாடிக்கையாளர்களுக்காக ஜனவரி 15–ந்தேதி வரை பல்வேறு கட்ட சிறப்பு முகாம்களை இந்திய ஆயில் நிறுவனம் நடத்த உள்ளது. வரும் 20–ந்தேதி(சனிக்கிழமை) வேலூர், திருவண்ணமலையிலும், 21–ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் கொளத்தூர், அண்ணாநகர், போரூர், பல்லவபுரம், மீஞ்சூர் ஆகிய இடங்களிலும், திருவள்ளூர், காஞ்சீபுரம், கெடத்தூர்பேட்டை, பள்ளிப்பட்டு, செங்கல்பட்டு உள்பட இடங்களிலும், மதுரை, திருச்சி, கோவை உள்பட மாநில முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, என்.பி.சி.ஐ. தலைவர் ஜி.எம்.கிரிதர், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்(சமையல் கியாஸ் விற்பனை பிரிவு)துணை பொதுமேலாளர் தத்தோ பாத்தியாயா, மூத்த மேலாளர் வைதேகி, தலைமை தொடர்பு மேலாளர் வி.வெற்றி செல்வகுமார், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் மண்டல மேலாளர் வினோத் குமார், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் (சமையல் எரிவாயு விற்பனை பிரிவு) ஒருங்கிணைப்பாளர் ஆர்.சோமசுந்தரம் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024