Thursday, December 18, 2014

முடிவுதான் என்ன?

Dinamani

தாலிக்குத் தங்கம் வழங்க லஞ்சம் பெற்றதாக சமூக நலத் துறை அலுவலக ஊழியர் கைது', "பட்டா வழங்க லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது', "மின் இணைப்பில் பெயர் மாற்ற லஞ்சம்: மின் வாரிய அலுவலக ஊழியர் கைது' } நாளிதழ்களில் இதுபோன்ற செய்திகள் வராத நாள் இல்லை.

எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும், பிள்ளையார் சுழி போட்டுத்தான் தொடங்குவோம். அதற்கு அடுத்த நிலையில் நம் கண்முன் நிற்பது லஞ்சம்.

நடுத்தர வர்த்தகத்தைச் சேர்ந்த ஒரு பணியாளரின் நீண்ட நாள் கனவு சொந்தமாக வீடு கட்டுவது. புறநகர்ப் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன் குறைந்த விலையில் வாங்கிப் போட்ட மனையில் வீடு கட்டலாம் என யோசித்து, எந்த வங்கியில் கடன் பெறுவது என முடிவு செய்து, முனைப்புடன் பணியைத் தொடங்குவார்.

வங்கியின் மேலாளரை அவர் அணுகுவதற்கு ஏகப்பட்ட இடைத்தரகர்கள். கடன் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை லஞ்சமாக அளித்தீர்களானால், எந்தவித விசாரணையும், கோப்புகள் ஆய்வும் இல்லாமல் கடன்தொகையைப் பெற்று விடலாம் என தமது வலையை வீசுவர்.

ஒவ்வோர் இடைத்தரகரின் வேண்டுகோளும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். தான் எடுத்து வைத்த முதல் அடியே பொதுஜனத்தை மிரளச் செய்யும்.

அடுத்து, கட்டட வடிவமைப்புக்கு உள்ளாட்சி நிர்வாகங்களிடம் அனுமதி பெறுவது, தாற்காலிக மின் இணைப்புக்கு அனுமதி, பின்னர் கட்டுமானப் பணி தொடங்கியவுடன் கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தைச் சமாளிப்பது, இல்லையெனில், கூடுதலாகப் பணம் கொடுத்து பொருள்களைப் பெறுவது, கட்டுமானப் பணி முடிந்தபின் வீட்டுக்கான வரி விகிதத்தை நிர்ணயிப்பது, குடிநீர்க் குழாய் இணைப்பு பெறுவது, பாதாள சாக்கடை இணைப்புப் பெறுவது என ஒவ்வொரு பணிக்கும் உரிய தொகையுடன், கூடுதலாக ஒரு தொகையை லஞ்சமாக அளித்து, பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு பொதுஜனம் தள்ளப்படுகிறார்.

ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறச் சென்றால், அங்கு விண்ணப்பக் கட்டணத்துடன் கூடுதலாக சிறு தொகையை அன்பளிப்பாக வைக்க வேண்டிய கட்டாயம்.

மெதுவாகச் சென்ற காரை நிறுத்தி, "காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றாய், அதனால் அபராதம் செலுத்த வேண்டும்' என்று போக்குவரத்துக் காவலர் ஓட்டுநரை அணுகும்போது, நூறு ரூபாய் நோட்டை கையில் அழுத்தினால், ஏதும் கூறாமல் அப்படியே திரும்பிப் போய் விடுவார்.

லஞ்சம், ஊழல் என்பது இந்தியாவில் நிலவும் பிரச்னை மட்டுமல்ல. அனைத்து நாட்டு மக்களும் எதிர்கொண்டுள்ள பிரச்னை.

2012-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உலக மக்கள்தொகையில் 25 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் காரியத்தைச் சாதிக்க லஞ்சம் கொடுத்துள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் பொதுச் சேவையில் ஈடுபடுவோர் அதிகம் லஞ்சம் பெறுகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது. லிபியா, லைபிரியா ஆகிய நாடுகளில் லஞ்சம் கொடுத்து பணியை முடிப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

அமெரிக்காவைப் பொருத்தவரையில், 14 பேரில் ஒருவர் லஞ்சம் கொடுத்துள்ளார். அலுவலகங்களில் பணியாற்றுவோர், காவல் துறையில் பணிபுரிவோர், கல்வியாளர்கள், நீதிபதிகள் ஆகியோர் லஞ்சம் பெறுவதில் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்த ஆய்வின்போது, 36 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கூறிய கருத்தின்படி, காவல் துறையே லஞ்சம் பெறுவதில் முன்னிலை வகிக்கிறது. லஞ்சம் பெறுவோர் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இந்தியாவில் 54 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்து தங்களது காரியத்தைச் சாதித்துக் கொள்கின்றனர்.

உலக நாடுகளில், கடந்த மூன்று ஆண்டுகளில் லஞ்ச, லாவண்யம் அதிகரித்துள்ளது.

லஞ்சம் தொடர்பாக 175 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டதில் இந்தியா கடந்த ஆண்டு 94-வது இடத்தைப் பிடித்திருந்தது. தற்போது அது 85-வது இடத்தில் உள்ளது.

அதேபோல கடந்த ஆண்டு 80-ஆவது இடத்தில் இருந்த சீனா, இந்த ஆண்டு 100-வது இடத்தைப் பிடித்துள்ளது.

டென்மார்க், பின்லாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் லஞ்சம் பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது எனவும் தெரியவருகிறது.

தேர்தலின்போது, வாக்காளர்கள் வாக்களிக்கப் பணம் பெறுகின்றனர். இது லஞ்சம் இல்லையா என அரசியல்வாதி ஒருவர் வசனம் பேசுவதுபோல ஒரு திரைப்படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் பெறுவதை நியாயப்படுத்துகிறார்களா? இதற்கு முடிவுதான் என்ன?

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024