Thursday, December 18, 2014

பதில் சொல்லத் தெரியவில்லை

ஒட்டல்களில் சர்வருக்கு இனாம் வழங்குவது இப்போதெல்லாம் ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை. அதிலும் இப்போது பணத்துக்கு மதிப்பில்லாமல் போய்விட்டதால், ஐந்து ரூபாய்க்குக் குறைத்து "டிப்ஸ்" கொடுப்பது மிகவும் கௌரவக் குறைச்சலாகக் கருதப்படுகிறது.

பில் ரசீதை அவர்கள் ஒரு லெதர் ஃபோல்டரில் வைத்துத் தரும்போது, அதில் 2 ரூபாய் நாணயத்தை வைப்பதென்பது, சாப்பிடுபவருக்கே அவமானத்தைத் தரும்.

பல ஓட்டல்களில் என்ன சாப்பிட்டாலும் மொத்தத் தொகை, 5, 0 என்ற எண்களில் முடிவதாக இருக்கிறது. நீங்கள் 5 ரூபாய் நாணயத்தை வைக்கக்கூடாது என்பதற்காகவே இரண்டு 2 ரூபாய், ஒரு 1 ரூபாய் நாணயத்தையும் பத்து ரூபாய் தாள்களையும் வைத்துவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள். இதன் பொருள், "மரியாதையாக பத்து ரூபாய் டிப்ஸ் வை' என்பதுதான்.

இனி, அந்த ஊர் பக்கமே தலை வைப்பதில்லை என்ற நிலைமை இருந்தால், எந்த கௌரவத்தையும் பார்க்காமல், பில்லை மட்டும் எடுத்துக்கொண்டு கவுண்டருக்குப் போகலாம்.

அப்படியே போனாலும், இந்த டிப்ஸூக்கு "கூட்டாளி'யான கேஷியர் உங்களை அவமானப்படுத்தாமல் பணத்தை வாங்கி கல்லாவில் போட மாட்டார்.

நீங்கள் நூறு ரூபாய் பில்லுக்கு 100 ரூபாய் நோட்டையே தந்தாலும், வேற நோட்டு கேட்கிற அளவுக்கு உங்கள் மீது கடுப்பை உமிழ்வார். வேண்டுமென்றே நிற்க வைப்பார். மிகவும் கந்தலான நோட்டுகளை பொறுக்கி எடுத்து, பிச்சை போடுவதைப்போல மீதித்தொகையை உங்களிடம் கொடுப்பார். உங்களைப் பழி வாங்க இதுதான் அவர்கள் கையாளும் வழி.

டிப்ஸ் என்பது ஒருவரின் சேவையை மெச்சிக் கொடுக்கப்படும் பாராட்டுத்தொகை. ஆனால், இப்போது பார்சலுக்கே டிப்ஸ் கேட்கிறார்கள். பார்சல் சொன்னால் "உட்காருங்கள்' என்று நாற்காலியைக் காட்டுகிறார்கள்.

ஒருவர் பில்லை லெதர் ஃபோல்டரில் வைத்துக் கொடுக்கிறார். அதாவது, நாம் டிப்ஸ் வைத்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். இது எந்த வகையில் நியாயம்?

இதற்கு மறுப்புத் தெரிவித்து, நாமே கவுண்டரில் பில் செலுத்தினால், பார்சலில் சட்னி இருக்காது அல்லது குறைவாக இருக்கும். சாம்பார் இருக்காது அல்லது சாம்பார் பாக்கெட் லூசாக கட்டப்பட்டிருக்கும். நீங்கள் வீட்டுக்குப்போவதற்குள்ளாக சாம்பார் கொட்டி களேபரமாகியிருக்கும்.

இதெல்லாம் ஒழிகிறது. சர்வர்களில் பலரும் இன்முகத்துடன் சேவை செய்வதில்லை என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

நண்பருடன் ஓட்டலுக்குப் போயிருந்தேன். ரூ.145 பில் வந்தது. நான் லெதர் ஃபோல்டரில் ரூ.200 வைத்தேன். எனக்கு மீதித்தொகையாக 5 பத்து ரூபாய் நோட்டுகள், இரண்டு ரூபாய் நாணயம் இரண்டு, ஒரு ரூபாய் நாணயம் ஒன்று வைக்கப்பட்டது. வேறுவழியின்றி ரூ.10}யை டிப்ஸாக வைத்துவிட்டு எழுந்தேன். நண்பர் அந்த பத்து ரூபாயை எடுத்து என் பாக்கெட்டில் வைத்துவிட்டு, "வா போலாம்" என்றார்.

"அது டிப்ஸ், நான் சேஞ்ச் எடுத்துக்கிட்டேன்' என்று அவருக்கு விளக்கினேன்.

அவர் கொஞ்சம் சத்தமாகவே பேசினார்: "சட்னி வேணுமா, சாம்பார் வேணுமான்னு ஆத்தா மாதிரி கேட்டுக் கேட்டு பரிமாறணும். பொண்டாட்டி மாதிரியே என் முன்னாடி வெச்சிட்டு உள்ளே போய், நான் கையக் கழுவினதும் எட்டிப் பாக்கறதுன்னா.... என்ன ம...வுக்கு நான் ஓட்டலுக்கு வர்றது' என்றார்.

அவர் சொல்வதில் நியாயம் இருந்தது (அதை சொல்லும் தைரியமும் அவருக்கு இருந்தது).

இன்னொரு நண்பர் இந்த விவகாரத்தில் ரொம்ப தாராளமாக இருப்பவர் (அவருக்கு சம்பளத்துடன் கிம்பளமும் கிடைப்பதால் அவர் எவ்வளவு தாராளமாகவும் இருக்கலாம்). அவர் பத்து ரூபாய் டிப்ஸ் கொடுத்தால் போதும் என்றாலும், ரூ.20 டிப்ஸ் கொடுப்பார். சர்வர் ஜொள்ளு ஒழுக தேங்க்ஸ் என்று அவரை வாசல் வரை வந்து வழியனுப்புவார்.

அவர்தான் சொன்னார்: "நம்ம ஊர்ல டிப்ஸ் கொடுத்தா தேங்க்ஸ் சொல்றாங்க. ஆனா ஃபாரின்ல, i appreciate என்பார்கள்'. சொல்ல முடியாது. அந்த நடைமுறை நம்ம ஊரிலும் வந்துவிடும்.

இந்த நண்பர் இன்னொன்றும் செய்வார். வாசலில் வண்டியை எடுக்கப்போகும்போது, காக்கி உடையில் நின்று வணக்கம்போடுகிற, வாகனங்களை "அங்கே நிறுத்துங்க', "இங்க நிறுத்துங்க' என்று விரட்டுகிற காவலாளிக்கும் டிப்ஸ் கொடுப்பார்.

அதற்கும் அவர் விளக்கம் சொன்னார்: "நீதான் எல்லா புஸ்தகமும் படிப்பியே... பாரடைஸ் லாஸ்ட் படிச்சிருக்கிறியா? அதுல மில்டன் சொல்றான்:They also serve, Those who stand and wait.

எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024