இந்திய குடிமகனின் அடையாள சின்னம் ‘ஆதார்’ அடையாள அட்டை. அரசின் மானியம் மற்றும் பல்வேறு சலுகைகளை பெற இந்த அட்டை அவசியமாகிறது. தற்போது நாடு முழுவதும் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறுகிறது.
பொதுமக்கள் மணிக்கணக்கில் கால் கடுக்க காத்து நின்று அடையாள அட்டைக்கு பதிவு செய்கிறார்கள். அடையாள அட்டை பதிவுக்கு பின் பதிவு அலுவலர்கள் இன்னும் 3 மாதத்தில் உங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கிடைக்கும் எனக்கூறி அனுப்பி வைக்கிறார்கள்.
இப்படி படாத பாடுபட்டு பதிவு செய்த ஆதார் அட்டைகளை ஒரு தபால்காரர் வினியோகிக்காமல் வீட்டிலேயே மூட்டை கட்டி வைத்த சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சி 24–வது வார்டுக்குட்பட்ட குத்தூஸ்புரம் ஓம் சக்தி கோவில் வீதியில் தபால் ஊழியரான சுப்பிரமணி என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தபால் வினியோகம் செய்வார்.
கடந்த 30–6–2013 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு அவர் தான் குடியிருந்த வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார்
வெகுநாட்களாக சுப்பிரமணி வராததால் வீட்டின் உரிமையாளர் அவரை தொடர்பு கொண்டார். அதன் பின்னரும் சுப்பிரமணி திருப்பூர் வரவில்லை. எனவே வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணி தங்கியிருந்த வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு ஒரு மூட்டை இருந்தது.
அதில் என்ன இருக்கிறது என்பதை அறிய அவிழ்த்துப் பார்த்தார். அதில் 500–க்கும் மேற்பட்ட ஆதார் அடையாள அட்டைகளும், 500–க்கும் மேற்பட்ட தபால்களும் இருந்தன. அதிர்ச்சி அடைந்த அவர் திருப்பூர் தலைமை தபால் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
அதற்குள் இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீயாய் பரவியது. பொதுமக்கள் விரைந்து வந்து அந்த மூட்டையில் தங்களது ஆதார் அடையாள அட்டை உள்ளதா? என அலசி ஆராய்ந்தனர்.
சிலரது அதிர்ஷ்டம் அவர்களது ஆதார் அடையாள அட்டை அதில் இருந்தது. அவினாசியில் தனி தாசில்தாராக பணியாற்றிய தேவமனோகரன் என்பவரின் ஆதார் அடையாள அட்டையும் அந்த மூட்டையில் இருந்தது.
தகவலின் பேரில் விரைந்து வந்த தலைமை தபால் நிலைய கண்காணிப்பாளர் எழில் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் ஆதார் அடையாள அட்டைகளை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆதார் அட்டை பெறுவதற்கு பொதுமக்கள் சிரமப்பட்டு வரும் வேளையில் தபால் ஊழியர் அலட்சியம் செய்து 500–க்கும் மேற்பட்ட ஆதார் அடையாள அட்டைகளை வீட்டுக்குள் மூட்டை கட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment