Wednesday, December 31, 2014

வரும் ஆண்டு சிங்கப்பூரில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசு

பொன்விழாவையொட்டி வரும் ஆண்டில் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்க அந்நாட்டின் அரசாங்கம் முடிவு

2015ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தனது பொன்விழாவை கொண்டாடுவதை குறிக்கும் வகையில் அடுத்த ஆண்டில் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்க அந்நாட்டின் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அடுத்து ஆண்டு பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், அவர்களின் நாளாந்தத் தேவைக்குப் பயன்படும் பொருட்கள் அடங்கிய ஒரு பரிசுப்பெட்டி வழங்கப்படும் என்று அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நான் ஒரு பொன்விழாக் குழந்தை" என்று குறிப்பிடும் குழந்தையின் ஆடைகள் உள்ளிட்ட பரிசுகளும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் மறக்கமுடியாத தருணங்களை பதிவு செய்ய ஒரு நோட்டுப் புத்தகமும், நினைவு பதக்கமும் வழங்கப்படுகிறது.

சிங்கப்பூரில் வாழும் அனைத்து தரப்பு மக்களின் சார்பில் அளிக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையில் இந்தப் பரிசுத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் சிங்கப்பூரில் வாழும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும், வெளிநாட்டில் வாழும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த பரிசுப்பெட்டி வழங்கப்படும்.

2015 ஆம் ஆண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு இது ஒரு பம்பர் பரிசு ஆண்டாக இருக்கும். அரசாங்கத்தை தவிர ஒரு முக்கிய வங்கியும் அந்த குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கவுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வங்கியின் பரிசுப்பெட்டியில் கையுறைகள், செல்பீ ஸ்டிக் மற்றும் ஒரு பணப்பெட்டியும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் இந்த பரிசுகள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அளிக்கப்பட்டாலும், பல நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கம் பரிசுகள் அளிப்பது என்பது வழக்கமான ஒன்றாகும். ஃபின்லாந்தில் கடந்த 1930ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டில் கர்ப்பிணித் தாய்களுக்கு குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுவது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024