நல்லதிலும் கெட்டதிலும் பல பல பரப்புகளை உலகுக்கும், இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் வாரி வாரி வழங்கிய 2014–ம் ஆண்டு டாட்டா காட்டிவிட்டு, இன்று 2015–ம் ஆண்டு பிறக்கிறது. புத்தாண்டே வருக, புதிய வளங்களை அள்ளித்தருக! என்றே எல்லோரும் வரவேற்பார்கள். பொதுவாக இறைபக்தி உள்ளவர்கள், இறைவனின் ஆசி இந்த புத்தாண்டில் எல்லோருக்கும் எண்ணற்ற மகிழ்ச்சி, வளம், உடல் நலத்தை தரும் என வாழ்த்துவார்கள். இதுபோல, பகுத்தறிவாளர் ஒருவர், ‘பரி த பாஸ்ட் அண்டு நர்ச்சர் த பியூச்சர்; ஒர்ஸ்ட் இஸ் ஓவர் அண்டு தி பெஸ்ட் இஸ் அஹெட்’, ‘அதாவது கடந்த காலத்தை புதைத்துவிடு; எதிர்காலத்தை ஊட்டி வளர், கெட்டதெல்லாம் போய்விட்டது, நல்லதெல்லாம் உனக்கு முன்னே இருக்கிறது’ என்பதையே எப்போதும் புத்தாண்டு செய்தியாக எல்லா ஆண்டுகளிலும் சொல்வார். ஆனால், கடந்த 2014–ம் ஆண்டைப் பொருத்தமட்டில், எல்லா நினைவுகளையும் புதைத்துவிடவேண்டிய அளவுக்கு மோசமான ஆண்டு இல்லை. அதற்காக எல்லாமே ஆனந்தம் என்று சொல்வதற்கும் இல்லை. ஒருசில வீழ்ச்சிகளையும், ஏராளமான எழுச்சிகளையும் கொண்ட கலவையாக திகழ்ந்து இருக்கிறது.
அரசியல் ரீதியாக கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியே நாட்டை ஆண்டு கொண்டிருந்தது. ஆட்சி நீடிக்கவேண்டுமே என்ற பயத்தில் கூட்டணி கட்சிகள் மீட்டும் இசைக்கு ஏற்ற வகையில்தான் நடனம் ஆடவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் நடந்த ஆட்சி, மே மாதம் நடந்த தேர்தலில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. பா.ஜ.க. இந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், எந்த கட்சியின் தயவும் தேவைப்படாத அளவுக்கு தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்துள்ளது. எனவே, மக்களின் எந்த பிரச்சினைகள் என்றாலும் அதற்கு முழு பொறுப்பு எடுத்து, பதில் சொல்லவேண்டிய கட்டாயம் பா.ஜ.க.வுக்கும், அதிலும் குறிப்பாக நரேந்திர மோடிக்கும் இருக்கிறது. விமானம் பறக்கத்தொடங்கும் முன்பு ரன்வேயில் சிறிது நேரம் ஓடி, பின்புதான் பறக்கத்தொடங்கும். அதை ‘டேக் ஆப்’ என்பார்கள். அதுபோல, பா.ஜ.க.வுக்கு ‘டேக் ஆப்’ முடிந்துவிட்டது. இப்போது தன் பயணத்தை தொடங்கிவிட்டது. இனி தேர்தல் அறிக்கையிலும், மக்களிடம் வெளியிட்ட அறிவிப்புகளையும் நிறைவேற்றவேண்டிய காலம் இப்போது தொடங்கிவிட்டது. எனவே, இந்த புத்தாண்டில் கண்டிப்பாக ஒரு பெரிய மாற்றத்தை பா.ஜ.க. தந்தாக வேண்டும்.
இந்த ஆண்டில் மத்திய அரசாங்கத்துக்கும், தமிழக அரசுக்கும் பெரிய பொறுப்பு காத்து இருக்கிறது. தொழில் வளர்ச்சி மட்டுமல்லாமல், வேளாண் வளர்ச்சி, நீர்ப்பாசன திட்டங்கள், கல்வி வளர்ச்சி என்று ஒரு ஒட்டுமொத்த வளர்ச்சியில் ஒவ்வொரு நாளும் அதிக கவனம் செலுத்தவேண்டும். இந்திய பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது நாட்டின் இறக்குமதி அளவு, ஏற்றுமதி அளவைவிட அதிகமாக இருப்பதுதான். இதில் பெரும் அளவு பணம், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கே சென்றுவிடுகிறது. இப்போது கச்சா எண்ணெயின் விலை பாதிக்குமேல் குறைந்துவிட்டதால், நிறைய பணம் மிச்சமாகும். கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் விலை குறைந்தாலே, அரசாங்கத்துக்கு ரூ.4 ஆயிரம் கோடி மிச்சமாகும். இப்போது 55 டாலர் குறைந்துவிட்டது. இதன் பலன் மக்களுக்கும் கிடைத்தாகவேண்டும்.
தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், மே மாதம் நடைபெறப்போகும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் திட்டமிட்டுள்ள ரூ.1 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்து சாதனை படைக்கவேண்டும். விவசாயத்தைப் பொருத்தமட்டில், வேளாண் உற்பத்தி அபரிமிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் விவசாயிக்கு உரிய விலை கிடைப்பதை உறுதிப்படுத்தவேண்டும். நதிவளம் இல்லாத தமிழ்நாட்டில், மழைகாலங்களில் தாமிரபரணி போன்ற ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வீணாக கடலில் போய் கலப்பதைத்தடுத்து, சேமிக்கும் வகையிலான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மேலும், உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி, வேலைவாய்ப்பு, மின்சார உற்பத்தி ஆகியவற்றைப் பெருக்க அதி முக்கியத்துவம் கொடுத்து 2015–ஐ மறக்கமுடியாத ஒளிபடைத்த ஆண்டாக்க வேண்டும்.
No comments:
Post a Comment