Thursday, January 22, 2015

குழந்தைகளைத் தாராளமாகப் பாராட்டுங்கள்

Return to frontpage

“அப்பா, நான் முதல் ரேங்க் வாங்கிவிட்டேன்!” என்று ஒரு பிள்ளை பெருமையுடன் தன் மதிப்பெண் சான்றிதழைத் தந்தையிடம் காட்டுகிறான். “அதிலென்ன ஆச்சரியம், நீ என் பிள்ளை ஆச்சே!” என்று தகப்பனார் நெஞ்சை நிமிர்த்திக்கொள்கிறார்.

அடுத்து அம்மா, தான் தினமும் பிள்ளைக்குக் கரைத்துக் கொடுக்கும் ஓர் ஆரோக்கிய பானத்தின் ஜாடியை விஷமச் சிரிப்புடன் உயர்த்திக் காட்டுகிறார். இந்த விளம்பரத்தை அடிக்கடி எல்லாத் தொலைக்காட்சிகளிலும் பார்த்திருக்கிறோம்.

தனது பரம்பரையின் புத்திசாலித்தனமும் கல்வித் திறமையும் தனது பிள்ளைக்கும் வந்திருக்கிறது என்கிறார் அப்பா. தான் அவனுக்கு ஊட்டச்சத்துகளை ஊட்டி வளர்த்ததால்தான் அவன் படிப்பில் சிறந்து விளங்குகிறான் என்று அறிவிக்கிறார் அம்மா. யார் சொல்வது சரி?

சில நூறு மாணவர்களின் ‘ஐ.க்யூ’ எனப்படும் புத்திக் கூர்மையை அளவிட்டதுடன், அவர்களுடைய குடும்பச் சூழ்நிலை மற்றும் முன்னோர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களையும் திரட்டி ஆராய்ந்து, ஒரு மாணவரின் கல்வித் திறன் எந்த விதமான காரணிகளைப் பொறுத்திருக்கிறது என ஓர் அமெரிக்கப் பல்கலைக்கழக ஆய்வர்கள் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் அண்மையில் ஒரு முதல்கட்ட ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஐ.க்யூ வளர்ச்சியின் காரணங்கள்

மரபியல் காரணிகளுடன் சுற்றுச்சூழல், உடல் ஆரோக்கியத் தரம், போஷாக்கு, வளர்ப்பு ஆகியவையும் பிள்ளையின் ஐ.க்யூவை வளர்ப்பதில் பங்குவகிக்கின்றன. மரபியல் கூறுகளுடன் பெற்றோரின் நடவடிக்கைகளும் ஐ.க்யூ அபிவிருத்தியில் பங்களிக்கின்றன. குறிப்பாக, சிசுக்களின் மூளை உருவாகும் காலகட்டத்தில் அவை ஐ.க்யூவை வளர்க்கும் மூளையின் சுற்றுகள் உருவாக உதவுகின்றன. அதன் நற்பயன்களைச் சிசுப் பிராயத்திலேயே காண முடியும்.

ஆய்வுக்குட்பட்ட சிறார்களில் வறிய குடும்பத்தினரும் இருந்தனர். அவ்வாறான சில குடும்பங்களில் மூத்தவர்கள் அன்புடன் பழகிக் கதை சொல்லவும் அரட்டையடிக்கவும் செய்தனர். விடுகதைகளும் விளையாட்டுகளும் என்று பொழுது கழிந்தது. வேறு சில வறிய குடும்பங்களில் சோற்றுக்குப் பஞ்சம் இல்லாதிருந்தபோதிலும் பெரியவர்களின் அன்பும் அரவணைப்பும் இல்லை.

இவர்களில் முதல் வகையினரின் ஐ.க்யூ. கூடுதலாக இருந்தது. பள்ளிப் படிப்பை முடித்தபோது மொழிப் பயன்பாட்டிலும் கணிதத்திலும் அவர்கள் மேம்பட்டிருந்தனர். சிசுப் பருவத்தின் ஆரம்பகால அனுபவங்கள் ஐ.க்யூவை மேம்படுத்துவது மெய்ப்பட்டது.

பிறந்த சிசுவின் மூளையில் பல நூறு கோடி செல்களும் நியூரான் இணைப்புகளும் உள்ளன. கருப்பை வாசத்தின்போதே சுவாசம், இதயத் துடிப்பு போன்ற ஜீவாதாரச் செயல்களுக்கான நியூரான் இணைப்புகள் தோன்றிவிடும். பிரசவிக்கப்பட்ட பின், அது அனுபவிக்கும் ஒலி, ஒளி, தொடுதல்கள் போன்ற புலனுணர்வுகள் கூடுதலான நியூரான் இணைப்புகளை உண்டாக்கும்.

சிசு வளர வளர மூளை செல்கள் உடலின் பிற செல்களுடன் இணைப்புகளை வளர்த்துக்கொள்கின்றன. அவையே அதன் நடவடிக்கைகளை நிர்ணயிக்கின்றன. உதாரணமாக, கண்ணின் பார்வை நரம்பு மூலம் வரும் மின் சமிக்ஞைகளைப் பார்வைப் புறணி புரிந்துகொண்டு மற்ற இணைப்புகள் மூலம் பிற உறுப்புகளுக்குத் தேவைக்கேற்றபடி இயங்க ஆணை அனுப்புகிறது. ஒரு குறிப்பிட்ட அனுபவம் திரும்பத் திரும்ப ஏற்படும்போது அத்தகைய இணைப்புப் பாலங்கள் வலுப்பெறு கின்றன.

இரண்டு வயது முடிவதற்குள் மூளையில் மூன்று லட்சம் கோடி நியூரான் இணைப்புகள் உருவாகிவிடுகின்றன. இணைப்பு ஏற்படாத அல்லது பயன்படாத செல்களும் நரம்பு இணைப்புகளும் அழிந்துபோகும்.

வாய்ப்பு வாசல்

வாழ்க்கை அனுபவங்களுக்கு மூளை பழகுவது ஒரு கால அட்டவணையின் பிரகாரம் நடைபெறுகிறது. ஒரு குறிப்பிட்ட இணைப்பு ஒரு காலகட்டத்தில்தான் ஏற்படும். அதை வாய்ப்பு வாசல் என்பார்கள். பார்வைக்குப் பழகும் செல்கள் முதல் ஆறு மாதங்களில் வேகமாகப் பெருகி, எட்டு மாதத்தில் பிற செல்களுடன் 15,000 கோடி இணைப்புகளைப் பெற்றுவிடும். அது முடிந்ததும் வாசல் மூடிக்கொள்கிறது.

ஒரு வாய்ப்பு வாசல் காலகட்டத்தைத் தவறவிட்டு விட்டால்கூடக் கவலையில்லை. குழந்தைப் பருவம் முழுவதுமே ஏராளமான வாய்ப்புகள் கிட்டும். மூன்று முதல் பத்து வயது வரை குழந்தைகளின் மூளை பெரியவர்களுடையதைப் போல இரு மடங்கு ஆற்றலைச் செலவழிக்கிறது. அதில் பெரியவர்களுக்கு இருப்பதைவிடப் பன்மடங்கு அதிக இணைப்புகள் இருப்பதே அதற்குக் காரணம். இதன் காரணமாகச் சிறுவர்கள் புதிய திறமைகளை எளிதாகக் கையகப்படுத்துவார்கள். புதிய மொழிகளைக் கற்பதிலும் சிறுவர்கள் பெரியவர்களைவிட மேம்படுகிறார்கள்.

ஐந்து வயதுக்கு மேல்தான் குழந்தைகளின் விரல்களுக்குப் பென்சில் அல்லது பேனா இயக்கும் லாவகம் வரும். அதுவரை வீட்டிலோ, மழலையர் பள்ளியிலோ விளையாட்டு மற்றும் கதை, பாட்டு போன்றவற்றின் மூலம் ஐ.க்யூவை வளர்க்க முயல வேண்டுமே தவிர, கணக்குப் போடவும், பாடம் எழுதவும் பலவந்தப்படுத்தக் கூடாது. படங்களைக் காட்டி விவரிப்பது நல்லது.

குழந்தை முதன்முதலாகத் தலையைத் தூக்குவது, தவழ்வது, நடப்பது போன்றவையெல்லாம் வாய்ப்பு வாசல்கள் ஆகும். ஒன்றரை மாதக் குழந்தையால் 20 சென்டிமீ்ட்டர் தொலைவில் உள்ள பொருட்களைத்தான் தெளிவாகப் பார்க்க முடியும். பெற்றோர் அந்தத் தொலைவில் தமது முகங்களை வைத்துக் கொஞ்சினால், அவை மூளை இணைப்புகளில் ஒரு பழகிப்போகும் பதிவை உண்டாக்கும். பரிச்சயமானது, புதியது, ஒரே மாதிரியானது, வேறுபட்டது எனப் பிம்பங்களை வகைப்படுத்தும் திறன் பெருகும். வடிவங்களையும் நிறங்களையும் பிரித்தறியும் திறன் வரும். பிறந்த நாளில் இருந்தே சிசுவுடன் ஏதாவது பேசிக்கொண்டேயிருந்தால், அதன் மொழித்திறன் வளரும். அவ்வாறான வீடுகளில் மூன்று வயதுக்குள்ளாகவே குழந்தைகள் தொடர் வாக்கியங்களாகப் பேச ஆரம்பித்துவிடுவார்கள். மனக்கணக்குகளில் அதிகத் திறமை ஏற்படும்.

தாலாட்டுகள் அவசியம்

மூளை வளர்ச்சியில் தாலாட்டுகள் பெரிதும் உதவும். இடம் மற்றும் தர்க்க அறிவை இசை வளர்க்கிறது. சிறு வயதிலிருந்து முறையாக இசை பயில்பவர்கள் புதிர்களை விடுவிப்பதிலும் ஜிக்சா படங்களை இணைப்பதிலும் பிறரை விட அதிக வேகமும் திறமையும் பெற்றிருக்கின்றனர். கணிதம் பயிலும்போதும் இசை பயிலும்போதும் மூளை செல்கள் ஒரே மாதிரியாக இயங்குகின்றன. எனவே, இசை பயிலும் குழந்தைகள் கணிதத்திலும் மேம்பட்டிருப்பார்கள்.

பாராட்டு, குழந்தையின் மனதுக்கு உரம். பாராட்டினால் அது மகிழும்போது அறிவு மையமான மூளைப் புறணிக்கும் உணர்வு மையமான நடு மூளைக்கும் இடையிலான இணைப்புகள் வலுப்பெறுகின்றன. இவை எட்டாவது முதல் பதினெட்டாவது மாதம் வரையிலான காலகட்ட வாசலில் உருவாகும். பாராட்டுகளால் குழந்தை குதூகலிக்கிறபோது, மூளையில் வேதிகள் பெருகி அவ்விணைப்புகளை வலுப்படுத்தும். குழந்தைகளைப் பாராட்டாமல் போனால், அந்த இணைப்புகள் வலுக்குன்றிப் புதிய சாதனைகளைப் படைக்கும் ஆர்வம் மங்கிவிடும். குழந்தை முதன்முதலாக எழுந்து நிற்கும்போது ‘பலே பலே’ என்று கைதட்டிச் சிரிப்பதும், கொஞ்சுவதும் கூடப் பாராட்டுதான்.

பதின்வயதுகளில் உணர்ச்சி தொடர்பான நரம்பிணைப்புகள் அதிகரிக்கும். அப்போது பெற்றோர் கூடுதலான கவனத்துடன் இருக்க வேண்டும். பாலுணர்வுகள் தலைதூக்கும் அந்த காலகட்டங்களில் கண்காணிப்பும் கலந்துரையாடலும் வழிகாட்டலும் விபத்துகளைத் தவிர்க்கும்.

பள்ளிப் பாடத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெறுவது வேறு. ஐ.க்யூ. எனப்படும் கூர் அறிவு வேறு. பள்ளிப் படிப்பு ஏறாத பலர், கூர் அறிவினால் சாதனை படைத்திருக்கின்றனர். சம வயதினரின் சகவாசம், குடும்பச் சூழல், மூத்தோர் ஆதரவு போன்றவை கூர் அறிவையும் மனப் போக்குகளையும் பண்படுத்த உதவும்.

பெற்றோரால் குழந்தையை மாமேதையாக்க முடியாமல் போகலாம். ஆனால், அந்த இலக்கை நோக்கிக் குழந்தையைச் செலுத்துவதில் அவர்களுடைய பங்கு முதன்மையானது.

கே.என். ராமசந்திரன்,

அறிவியல் கட்டுரையாளர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024